சூரியன் கன்யா ராசியில் சஞ்சரிக்கும் புண்ணியமிகு புரட்டாசி மாதத்தில் கிருஷ்ணபட்சப் பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள காலத்துக்கு பித்ரு பட்சம், மஹாளயம் என்று பெயர். 

நம் முன்னோர்கள் இந்த உலகை விட்டுச் சென்றாலும், அடுத்து வேறு பிறவி எடுத்தாலும், நம்மிலும் நம் சந்ததியிலும் அவர்களின் தொடர்பு இருப்பதால் நம் முன்னோர்களுக்கான நன்றியை, மரியாதையை, வணக்கத்தை, கடமையை சிராத்தம், தர்ப்பணம் முதலான சடங்காகச் செய்கிறோம். அப்போது, பித்ருக்களின் பசிக்கும் தாகத்துக்குமாக எள்ளும் தண்ணீரும் அர்ப்பணிக்கிறோம்.

நம் தாய் தந்தை மற்றும் அவர்களின் முன்னோர்கள் இந்த உலகை விட்டுச் சென்ற பிறகு, பித்ருக்கள் எனப் போற்றப் படுகிறார்கள். நாம் வாழ்வது பூலோகத்தில்; அவர்கள் வாழ்வது பித்ருலோகத்தில்! ஒவ்வொரு மாதமும் அமாவாசை முதலான முக்கியமான நாட்களில் அவரவரின் வீடுகளுக்குப் பித்ருக்கள் வந்து, வாசற்படிக்கு முன் நின்று, தங்களின் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று, ஆசீர்வதித்துச் செல்கிறார்கள் என்றும், ஒருவேளை சிறப்பாகத் தர்ப்பணம் செய்யாமல் விட்டு, அதனால் அவர்கள் மனவருத்தம் அடைந்தால், அது சாபமாக மாறி நம்மைப் பாதிப்பதாகவும் சாஸ்திரங்கள் எடுத்துரைக்கின்றன.

மற்ற அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க மறந்துவிட்டாலோ அல்லது அதற்கான வாய்ப்பு இல்லாமல் போனதாலோ தவற விட்டவர்கள், இந்த மகாளய அமாவாசை தினத்தன்று திதி கொடுத்தால் அது அதற்கான முழுப் பயனையும் அளிக்க வல்லதாகும்.

மகாளய அமாவாசையில் பால், தயிர், நெய், தேன், பழங்களை நிவேதனமாக வைக்கலாம். பலகாரம், சாதவகைகளையும் படையல் செய்யலாம். வசதி குறைந்துள்ளவர்கள் மூதாதயரை மனதில் நினைத்து அகத்திக் கீரையை பசு மாட்டிற்கு உணவாகத் தந்தாலே போதும். முதியவர்கள் இருவருக்காவது உணவும், ஆதரவற்றவர்களுக்கு துணிமணியும் வயிறார உணவளியுங்கள்.

அமாவாசையில் குல மூதாதையர்களை நினைத்து செய்யும் தான தர்மங்கள் அவர்களை சந்தோஷப்படுத்துவதுடன் நோய் நொடிகள் அகலும், நீண்ட ஆயுளும், நிறைந்த செல்வமும், மங்காத புகழும் அமையும். இப்பூஜையால் தீராத கடன் ஒழியும். தீர்க்க முடியாத வியாதிகள் குறையும்.

யார் விட்ட சாபமோ என அஞ்சிய வாழ்க்கை அகலும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். நாமும் நம்முன்னோர்களுக்கு மகாளய அமாவசை தினத்தன்று பூஜை செய்து அவர்களின் ஆசி பெறுவோம்.

வசதி இல்லாதவர்கள் நம் முன்னோர்களை மனதில் நினைத்து பசு மாட்டிற்கு அகத்திக் கீரையை உணவாகத் தந்தாலே போதும். அமாவாசையில் அவர்களை நினைத்து செய்யும் தான தர்மங்கள் அவர்களை சந்தோஷப்படுத்துவதுடன் செல்வம், புகழ், நீண்ட ஆயுளைத் தரும்.

நாமும் நம்மால் இயன்ற அளவு மகாளய அமாவாசை பூஜையும், தர்பணமும் முறையாகச் செய்து மூதாதையரின் ஆசியோடு ஆனந்த வாழ்வு அடைவோம்! 

பொதுவாக திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது சிறப்பு. அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை விரதமிருந்து வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது நம்பிக்கை.

ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரிய மாதங்களில் புரட்டாசியும் ஒன்று. புதனின் அதி தேவதையாகவும், பிரத்யதி தேவதையாகவும் இருப்பவர் மஹாவிஷ்ணு. ஆகவே விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி மாதம் திகழ்கிறது.

புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்குதல் வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் கடைப்பிடிப்பது நல்லது. அப்படி விரதத்தினை மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி விளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.

 

ஐந்து கரத்தனை,  யானை முகத்தனை என  விநாயகரை நோக்கிப் பாடுகிறோம்.  நம் பிள்ளைகளுக்கு அடிப்படை  தேவாரப் பாடலாகவும் சொல்லித் தருகிறோம். இதோ பாடுவதோடு,  விநாயகரின் ஐந்து கரங்கள் உணர்த்தும் தத்துவங்களையும் அறிந்துகொள்வோம்:

* ஒரு கை பாசத்தை ஏந்தி உள்ளது. இது படைத்தலை குறிக்கிறது.

* தந்தம் ஏந்திய கை காத்தலை குறிக்கிறது. 

* அங்குசம் ஏந்திய கை அழித்தலை குறிக்கிறது. ஆகவே கணேசமூர்த்தி படைத்தல், அழித்தல், காத்தல் ஆகியவற்றை செய்யும் மும்மூர்த்தியாகிறார்.

* மோதகம் ஏந்திய கை அருளை குறிக்கிறது. எனவே இவர் பராசக்தியாகவும் இருக்கிறார். 

* தும்பிக்கை மறைத்தலை குறிக்கிறது.

எனவே விநாயகர்  எல்லாம் வல்ல பரமேஸ்வரராகவும் இருக்கிறார்.

கோலாலம்பூர், செப்.5- வினை தீர்க்கும் விநாயகருக்கு இன்று மலேசியாவில் விநாயகர் சதுர்த்தி மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. காலை முதலே ஆலயங்கள் தோறும் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. 

குறிப்பாக, மலேசியாவில் விநாயக ஆலயங்களுக்கு தலைக்கோயிலாக கருதப்படும் தலைநகர், புடுவில் உள்ள கோர்ட்டுமலை ஶ்ரீ கணேசர் ஆலயத்தில் இன்று விநாயகர் சதுர்த்தி மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. காலை 5.30 மணிக்கு சங்காபிஷேகம் தொடங்கி காலை 11 மணி வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் விநாயகரின் அருள் வேண்டி ஆலயப் பூஜையில் கலந்து கொண்டனர்.

 

இன்று வேலை நாளாக இருந்தும் பலர் காலையிலேயே ஆலய பூஜையில் கலந்து கொண்டனர். கோர்ட்டு மலையில் ஆயிரக்கணக்கான பக்தர்களின் வசதிக்காக கோயில் முன்புறம் உள்ள சாலை மூடப்பட்டவேளை, சாலை நெரிசல் அதிகமாக இருந்தும், அதனையும் மீறி பக்தர்கள் பூஜையில் கலந்து கொண்டனர். 

விநாயகர் ஆதி பரம்பொருள். எல்லோருக்கும் மூத்தவர். பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று எல்லோரையும் உருவாக்கியவர் அவர்தான். அவர் சாதிக்க வேண்டியது நிறைய இருந்ததால் அவர் பலவித அவதாரங்களை எடுத்தார். 

மூவரும் தேவரும் போற்றும் தனிப்பெருந்தெய்வம் விநாயகப் பெருமான். ஓங்கார வடிவமுடையவர். போற்றுபவர் துயர் போக்கும் கடவுள். அடியவர்களுக்கு எளிதில் அருள்புரியும் கருணைக்கடல். இடர்களைப் போக்கி வழிகாட்டுபவர் என்பதால் விக்னேஸ்வரன் என்று பெயர் பெற்றார்.

இவ்வாறு வேண்டி வருவோருக்கு, தேடி போய் விக்கினங்களைத் தீர்க்கும் விநாயகருக்கு மிக உகர்ந்த நாள் விநாயகர் சதுர்த்தி. இந்நாளில் தான் நினைத்த காரியங்கள் நிறைவேற மக்கள் விரதம் இருந்து காலை முதல் விநாயகரின் நாமம் செபித்து அவனையே நித்தம் மனதில் நிறுத்தி அவன் அருளைப் பெற்றனர்.

More Articles ...