Top Stories

சென்னை, மே 24 - ஆகஸ்டில் வரும் சுதந்திர தினத்தன்று, புதுக்கட்சி அறிவிப்பை வெளியிட, நடிகர் ரஜினி திட்டமிட்டுள்ளார். தன் சொந்த கட்சிக் கொடியை இரு தினங்களுக்கு முன் அவர் வடிவமைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ரஜினி கட்சியில் சேர, நடிகைகள் மீனா, நமீதா ஆகியோர் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள, ராகவேந்திரா திருமண மண்டபத்தில், ரஜினி, சமீபத்தில், தன் ரசிகர்களை சந்தித்தார். அப்போது, "அரசியலில் மாற்றத்தை உருவாக்கும் போருக்கு ரசிகர்கள் தயாராக இருக்க வேண்டும்' என அழைப்பு விடுத்தார்.

இரு தினங்களுக்கு முன், வெளிநாடு சென்ற தொழிலதிபர் ஒருவரிடம், ரஜினி தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது, தன் கட்சிக் கொடியையும், அதில் இடம்பெறும், "லோகோ" வையும் தெரிவித்துள்ளார். ஆகஸ்டு மாதம் 15ம் தேதி, சுதந்திர தினத்தன்று, புதிய கட்சியின் அறிவிப்பை, அவர் வெளியிடத் திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து, தனக்கு நெருக்கமான பத்திரிகை ஆசிரியரிடமும், ஆலோசனை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், நடிகர், நடிகையரும், ரஜினியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர்களில், நடிகைகள் மீனாவும், நமீதாவும், ரஜினி கட்சியில் சேர தயாராக இருப்பதாக தெரியவந்துள்ளது.

மேலும், ரஜினி கட்சி துவங்கினால் அதில் இணைவதற்கு அ.தி.மு.க. முக்கிய புள்ளிகளும் தூது விடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. தி.மு.க., காங்கிரஸ், த.மா.கா.வை சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகளும், ரஜினி கட்சிக்கு தாவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை, மே 22- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கதீட்ரல் சாலையில் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. இதனால் அச்சாலை முழுதும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் ரஜினியின் வீடு நோக்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

ரசிகர் சந்திப்பின்போது அரசியல் பிரவேசம் குறித்து பேசிய ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சென்னையில் அவரின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. தமிழர் முன்னேற்றப்படை அமைப்பினர் சென்னை கதீட்ரல் சாலையில் உருவ பொம்மையை எரிக்கப்பட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. 

அவ்வமைப்பின் தலைவர் வீரலட்சுமியின் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது எனவும் அவர் அரசியல் பேசக்கூடாது எனவும் கோஷமிட்டு பொம்மையை எரித்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களைப் போலீசார் கைதுச் செய்தனர். 

சென்னை, மே.19- "நான் பச்சைத் தமிழன். என்னைத் தூக்கிப் போட்டால் இமயமலைக்குத்தான் போவேன்" என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

தான் பிறந்த மண் கர்நாடகாவில் இருந்தாலும், 44 ஆண்டுகளாக தமிழகத்தில் வாழ்வதால் தான் 'பச்சைத் தமிழன்' என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்களைச் சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் மாவட்ட வாரியாக அவர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார். கடைசி நாளான இன்று ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினிகாந்த், 'தான் தமிழனா?' என்று சமூக வலைதளங்கள் மற்றும் டுவிட்டரில் வெளியாகும் விமர்சனங்கள் வருத்தமளிப்பதாக தெரிவித்தார்.

இதுகுறித்து ரசிகர்களிடையே அவர் பேசுகையில், "எனக்கு 67 வயதாகிறது, 23 ஆண்டுதான் கர்நாடகாவில் இருந்தேன். எஞ்சிய 44 ஆண்டுகள் தமிழ்நாட்டில் உங்கள் கூடவே வளர்ந்தேன். கர்நாடகத்தில் இருந்து மாராட்டியராக வந்திருந்தாலும் பேரும் புகழும் அள்ளிக்கொடுத்து என்னை தமிழனாக்கி விட்டீர்கள். அதனால் நான் பச்சைத் தமிழன்" என்று அவர் சொன்னார்.

"என்னை எங்கேயாவது போ என்று வெளியே தூக்கிப் போட்டால் இமயமலையில் போய்த் தான் விழுவேனே தவிர வேறு மாநிலத்திற்கு போகமாட்டேன். உயிரோடு இருந்தால் தமிழ்நாட்டில் இருக்கவேண்டும் இல்லாவிடில், சிவன் இருக்கும் இமயமலைக்கு செல்லவேண்டும். என்னை வாழ வைத்து அழகு பார்த்த உங்களை விட்டு நான் ஏன் செல்ல வேண்டும்?" என்று ரஜினிகாந்த் கேள்வி எழுப்பினார்.

சண்டிகர், மே 25- பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கை கொலை செய்யப் போவதாக மிரட்டல் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. கனடாவைச் சேர்ந்தவர்கள் இந்த மிரட்டலை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்துகிறது. அதற்கு அமரீந்தர் சிங் முதல்வராக உள்ளார். இவரைக் கொலைச் செய்யப்போவதாக காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட காணொளியில் முதல்வர் அமரீந்தர் சிங்கையும் லூதியானா தொகுதி எம்பி ரவ்நீத் சிங்கையும் கீழ்த்தரமாக சிலர் பேசியுள்ளனர். பின்னர் இருவருக்கும் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். 

அந்த காணொளி கனடாவில் எடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. முன்பு, கனடா பாதுகாப்பு துறை அமைச்சர் ஹர்ஜித் சிங் இந்தியா வந்தபோது அவருக்கு தகுந்த மரியாதை அளிக்கவில்லை என்றும் சீக்கியர்களுக்கு எதிராக செயல்பட்டு வந்தார் எனவும் குற்றச்சாட்டப்பட்டு அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.  

மும்பை, மே 24- ஆசிட் வீசப்பட்டு முகம் கருகி போக, 17 அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு உடல் நலம் தேறிய பின்னும் தன்னை யார் மணந்து கொள்வார் என பெண் ஒருவர் கலங்கி நிற்க, தவறான தொலைப்பேசி அழைப்பு அவரின் வாழ்க்கையே மாற்றி அமைத்தது. 

உத்தரபிரதேசத்தை சேர்ந்த லலிதா (வயது 26) என்ற பெண் மீது தனிப்பட்ட விநோதம் காரணமாக 2012ம் ஆண்டு அவரின் உறவினர் ஆசிட் வீசியுள்ளார். அமிலத்தினால் முகம் மாறி போக, இவருக்கு மொத்தம் 17 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் பழைய முகத்தை கொண்டு வரமுடியவில்லை. 

மனம் தளராது சோகத்தை தன்னுள் மறைத்துக் கொண்டு வாழ்ந்த லலிதாவிற்கு தவறான தொலைப்பேசி அழைப்பு வந்தது. பின்னர் அதுவே தொடர இருவரும் நண்பர்களாக மாறினர். பின்னர் அதுவே காதலாகவும் மாறியது. 

இருவர் குடும்பமும் இவர்களின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க, இவர்களின் திருமணம் அண்மையில் நடந்தேறியது. இவரை மணந்த ராகுல் என்பவர் சிசிடிவி ஆப்ரேட்டராக பணியாற்றுகிறார். என்னால் ஒரு நல்லது நடக்கவேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். என் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்ததால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இவர்களின் திருமணத்திற்கு இந்தி திரையுலக பிரபலங்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். 

கவுகாத்தி, மே 23- அசாம் வானவெளியில் பறந்து கொண்டிருந்தபோது போர் விமானம் ஒன்று தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டது. மாயமான விமானம் விபத்துக்குள்ளானதா அல்லது தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதா என இராணுவம் விசாரித்து வருகிறது.

அசாமின் தேஸ்பூரில் வடக்கு பகுதியில் சென்றபோது சுகோய் 30 ரக விமானம் ரேடாரிலிருந்து மறைந்ததாக கூறப்படுகிறது. மாயமான விமானத்தில் இரு போர் வீரர்கள் இருந்ததாகவும் விமானம் விபத்தில் சிக்கியிருக்கலாம் என நம்புவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதேவேளையில், விமானத்தை தீவிரவாதிகள் கடத்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும் அந்த கோணத்தில் விசாரணை நடப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

போர் விமானம் காணாமல் போனது ராணுவ மட்டத்தில் மட்டுமல்லாது பொதுமக்களிடையேயும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement