கிரிக்கெட்  தோல்வி: டி.வி.கள் உடைப்பு! படங்கள் எரிப்பு: இந்திய ரசிகர்கள் கோபம்! 

India
Typography

 லக்னோ, ஜூன்.19- சாம்பியன் கிண்ணக் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்ததால் கோபம் கொண்ட இந்திய ரசிகர்கள் தொலைக்காட்சிப் பெட்டிகளை போட்டு உடைத்தனர், வீரர்களின் உருவப் படங்களையும் எரித்துள்ளனர்.  

இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதை காண இருநாட்டு ரசிகர்களும் தொலைக்காட்சி பெட்டியின் முன் காத்துக் கிடந்தனர். இதன் காரணமாக முக்கிய நகரங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. 

இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்போட்டியில், இந்திய அணியை பாகிஸ்தான் அணி 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பாகிஸ்தானுடன் கண்டிப்பாக வெற்றிபெற்று கிண்ணத்துடன் இந்திய அணி நாடு திரும்பும் என்றிருந்த நிலையில், பரிதாபமாக தோற்றது ரசிகர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. 

இதனால் லக்னோ, கான்பூர் மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் ஆத்திரம் அடைந்த இந்திய ரசிகர்கள் தொலைக்காட்சிப் பெட்டியை சாலைகளில் தூக்கிப் போட்டு உடைத்துள்ளனர். இந்திய கிரிக்கெட் வீரர்களின் படங்களையும் எரித்தனர். மேலும் அணியை விமர்சித்து இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது காரசாரமான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

எனினும், முந்தைய காலங்களில் இந்திய அணி தோல்வியடைந்தால் சில ரசிகர்கள், வீரர்களின் வீட்டில் கல்லெறிவது வழக்கம். தற்போது, அதே போல நிகழக்கூடாது என்பதற்காக முக்கிய வீரர்களின் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ராஞ்சியில் உள்ள தோனி மற்றும் விராட் கோலியின் இல்லத்தின் முன் அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS