காணாமல் போன மகளின் இருதயம்!  தேடி அலையும் பெற்றோர்களின் அவலம்!

India
Typography

 மும்பை, ஜூலை.17- மருத்துவமனையில் எங்கள் மகளின் இருதயத்தை திருடிவிட்டார்கள். என் மகளின் சாவில் மர்மம் இருக்கிறது என்று கூறிய பெற்றோர்கள், எங்கே எங்கள் மகளின் இருதயம் என வேதனையுடன் தேடிவருகிறார்கள். 

மும்பை சேர்ந்தவர் சனம் ஹாசன். (வயது 19). புனேவில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி படித்துவந்தார். கடந்த 2012-ஆம் ஆண்டு தனது தோழிகளுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய சனம், அன்று திடிரென அவர் மயங்கி விழுந்த பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

# சனமின் பெற்றோர்களான ஜியா ஹசான் மற்றும் நகிமா

பின்னர் அவர் இறந்து விட்டதாக மருத்துவமனை அறிவித்தது.  இறந்ததற்கு காரணமாக, மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது கண்டு சனமின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், சனம் உடலில் மது கலந்திருந்ததாகவும் அதன் காரணமாக இருதயத்துக்குச் செல்லும் இரத்தம் நின்று போனதாகவும் அவர் பாலியல் வன்முறை உட்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

இதை சனமின் பெற்றோர் நம்பத் தயாராக இல்லை. ஏனென்றால், சனம் கால்பந்து வீராங்கனை. இறப்பதற்கு காலையில் கூட நன்றாக உடற்பயிற்சி செய்திருக்கிறார். அதோடு மதுப் பழக்கம் அவருக்கு சுத்தமாக கிடையாது.

எனவே, இதை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் இதைத் தொடர்ந்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதனால், சனமின் இருதயத்தை சிபிஐ பரிசோதனை செய்தது. அப்போது அங்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அது ஓர் ஆணின் இருதயம் என்றும் இது பெண்ணுக்குரியது அல்ல என்றும் சந்தேகம் வந்தது. 

இதனால், இடிந்து போன பெற்றோர்கள், அப்படி என்றால், 'என் மகளின் இருதயம் எங்கே?' என்று கேட்டனர். இதனால் பிரச்னை பெரிதானது. ‘டிஎன்ஏ’ டெஸ்ட் எடுக்கப்பட்டது. அந்த இருதயத்துக்கும் சனமின் பெற்றோரிடம் இருந்து எடுக்கப்பட்ட ‘டிஎன்ஏ’வுக்கும் தொடர்பே இல்லை.

இதையடுத்து விவகாரம் மேலும் பரபரப்பானது. பின்னர் ஐதராபாத்தில் உள்ள பரிசோதனை மையத்திற்கு சனத்தின் உடலில் எடுக்கப்பட்ட அந்த இருதயம் அனுப்பப்பட்டது. அங்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. 

பரிசோதித்த டாக்டர்கள், 'இது பெண்ணுக்கான இருதயம்தான். ஆனால், இது வயதான பெண்ணின் இருதயம்' என்றனர். இதனால், மேலும் அதிர்ந்து போன பெற்றோர்கள், ‘செல்வாக்குள்ள ஒருவர் எங்கள் மகளின் இறப்பில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டிருக்கிறார் என சந்தேகப்படுகிறோம் என்றும் மருத்துவ அறிக்கைகள், எங்கள் மகளின் இருதயம் இல்லை என்றும் உறுதி செய்திருக்கிறது. இறந்து போன வேறு யாரோ ஒருவரின் இருதயத்தைக் கொண்டு வந்து என் மகளுக்குள் வைத்து ஏமாற்றியுள்ளனர். இதற்கு வலுவான காரணம் இருக்கிறது’ என்றனர்.

மேலும், என்னதான் நடந்துள்ளது, உண்மையை உலகுக்கு சொல்லுங்கள் என்று சிபிஐயிடம் முறையிட்டு வருகின்றனர். இன்னும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. காணாமல் போன மகளின் இருதயம் எங்கே? எப்படி மகளின் இருதயம் களவாடப்பட்டது? என்ற வேதனைக்குரிய கேள்விகளுடன் சனமின் பெற்றோர்கள் கண்ணீருடன் அலைமோதிக் கொண்டிருக்கிறார்கள்.

BLOG COMMENTS POWERED BY DISQUS