பாலியல் குற்றங்களின் கூடாரமா,  ‘தலைநகர் டில்லி?' -அதிர்ச்சி தகவல் 

India
Typography

புதுடில்லி, ஜூலை.17- தலைநகர் டில்லியில் பாலியல் பலாத்கார சம்பவங்களின் எண்ணிக்கை தற்போது 3 மடங்கு அதிகரித்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில், டில்லியில் நாளுக்கு நாள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக நிர்பயா என்ற 23 வயது மருத்துவ கல்லுரி மாணவி, கொடூர கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ஓடும் பஸ்சில் இருந்து தூக்கி எறியப்பட்டு பலியானார்.

இந்த அதிர்ச்சி தரும் கொடூர சம்பவத்துக்குப் பின்பும் நாட்டில் பலாத்கார குற்ற வழக்குகளின் பதிவு எண்ணிக்கை அதிகரித்துள்ளதே தவிர குறையவில்லை.

அதிலும் குறிப்பாக டில்லியில், 2011ஆம் ஆண்டு 572 பலாத்கார புகார் பதியப்பட்டிருந்தது. ஆனால், கடந்த ஆண்டு 2016-ல் மட்டும் இந்த எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.

மேலும், பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தப்பட்டதாக கடந்த ஆண்டு மட்டும் 4,165 வழக்குகள் பதிவாகின. இது 2012 ஆம் ஆண்டில் இருந்த 727 எண்ணிக்கையை காட்டிலும் 473 சதவீதம் கூடுதலாகும். அதே போல, கடந்த ஜூன் மாதத்தில் 48 மணி நேரத்துக்குள் 5 பலாத்கார சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக புள்ளிவிவரங்கள் அச்சுறுத்துகின்றன.

இந்நிலையில், கடந்த 2013ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி, குற்றவியல் சட்டத் திருத்தத்தில் புதிதாக ‘விதி’ சேர்க்கப்பட்டது. அதில், போலீஸ் அதிகாரிகள் முன்பதிவு செய்யப்படும் பாலியல் குற்றச்சாட்டு புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்காத காவலர்களுக்கு 6 மாதம் முதல் 2 ஆண்டு வரை கடுங்காவல் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இது பற்றி டில்லி சமூக ஆர்வலர், ஆனந்த் குமார் அஸ்தானா செய்தியாளர்களிடம் அளித்துள்ள பேட்டியில், பாலியல் வன்கொடுமைகளிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க கடுமையான சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதால், பலாத்கார குற்றப் புகார்கள் அதிகளவில் பதிவு செய்யப்படுகிறது என்றும் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பது என்பது கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது என்றார். 

மேலும் அவர் கூறும்போது, ‘தலைநகர் டில்லியில் உள்ள நிலையே இப்படி என்றால், நாட்டின் சிறு கிராமங்கள் மற்றும் நகரங்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. 

BLOG COMMENTS POWERED BY DISQUS