இந்தியாவின் புரட்சி பெண் டாக்டரை  சின்னமாக்கி பெருமை சேர்த்த கூகுள் 

India
Typography

 மும்பை, நவ.23- இன்று கூகுளின் சின்னத்தில், இந்தியப் பெண்மணியின் படம் இடம்பெற்றது கண்டு இந்தியா முழுமைக்கும் பரபரப்பும் ஆச்சர்யமும் ஏற்பட்டது. இந்தியாவில் கூகுள் இன்று ஒரு பெண் டாக்டரின் படத்தை மருத்துவமனையின் பின்னணியோடு வெளியிட்டது.

இந்தியாவில் லட்சக்கணக்கானோருக்கு எழுந்த முதல் கேள்வி யார் இந்தப் பெண்? எதற்காக கூகுள் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து அந்தப் பெண்ணின் பட்டத்தை இன்று தனது சின்னமாக வெளியிட்டுள்ளது என்பதுதான்.

இவரது பெயர் ராக்மாபாய் ராவுட். இவரது 153ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்தை கூகுள்  இன்று தனது சின்னமாக்கி உள்ளது.

இந்தியாவிலுள்ள பலரிடம், யார் இந்த ராக்மாபாய் என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரிட்டீஷ் இந்தியாவில் தொடக்கக் கால பெண் மருத்துவர்களில் ஒருவாராக வேலை செய்தவர் இவர்.

ஆனால், இந்தியர்களைப் பொறுத்தவரை அவர்களின் கருத்துப்படி ஆனந்திபாய் ஜோஷி என்ற பெண் தான் இந்தியாவின் முதலாவது பெண் டாக்டர் என அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

ஆனால், ஆனந்திபாய் மருத்துவம் படித்த முதலாவது இந்திய பெண் என்பது தான் சரி. இவர் அமெரிக்காவில் படித்தார். ஆனால், 22ஆவது வயதில் அவர் இறந்து போனார். அவர் டாக்டராக பணிபுரிந்ததில்லை. 

நவீன மருத்துவத்துறை, வளரும் ஒரு குழந்தைப் பருவத்தில் இருந்த காலத்திலேயே ராக்மாபாய் ஒரு டாக்டராக பணிபுரிந்தவர். பிரிட்டனில் கூட ராக்மாபாய் காலத்தில் மருத்துவராக பணிபுரிந்த பெண்கள் என்று பார்த்தால் விரல் விட்டு எண்ணி விடலாம்.

இந்தியாவில் வீட்டை விட்டு பெண்கள் வெளிவர முடியாது என்கிற காலத்திலேயே, மருத்துவம் பயின்று பணிபுரிந்தவர் இவர். 1864ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார் ராக்மாபாய். அவர் குழந்தையாக இருந்த போதே அவருடைய தந்தை இறந்து விட்டார்.

பின்னர் தனது 11ஆவது வயதில் அவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. எனினும், அவர் கணவரின் வீட்டுக்குச் செல்லவேயில்லை. தன்னுடைய தாயாரின் வீட்டிலேயே தங்கிவிட்டார்.

பின்னாளில் அறியாப் பருவத்திலேயே தனக்கு செய்து வைக்கப்பட்ட திருமணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி மும்பை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த ராக்மாபாய் அந்த வழக்கில் தோற்றுப் போனார். ஆனால் தனது திருமணத்தை ரத்து செய்ய மறுத்த நீதிமன்ற உத்தரவை தடுத்து நிறுத்த உத்தரவிடும் படும்படி விக்டோரியா மகாராணிக்கு மகஜர் ஒன்றை அவர் அனுப்பி வைத்தார்.

இந்தச் சம்பவம், பிரிட்டீஷ் பத்திரிகைகளையும் பெண் உரிமை போராட்ட வாதிகளையும் அதிகளவில் ஈர்த்தது. இதன் பின்னர், சில காலம் கழித்து இந்தியாவில் திருமண வயதை சற்று உயர்த்துவதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் சட்டத்தை திருத்தியது.

இதனிடையே, ராக்மாபாயின் தாயார் மறுமணம் செய்து கொண்டார். அவருடைய கணவர் சக்காராம் பட்கெர் ஒரு டாக்டராவார். அவர் தனது வளர்ப்பு மகளான ராக்மாபாயிடம் காணப்பட்ட அறிவாற்றல், துணிச்சல் ஆகியவற்றை இனம் கண்டு அவரை ஊக்குவித்தார். அவரை மருத்துவத் துறையில் பல்வேறு சிரமங்களுக்கு இடையே படிக்கவைத்தார்.

1889ஆம் ஆண்டில் ராக்மாபாய் பெண்களுக்கான லண்டன் மருத்துவப் பள்ளியில் சேர்ந்தார். 1894ஆம் ஆண்டில் மருத்துவப் படிப்பை முடித்து டாக்டராக இந்தியா திரும்பினார். ஏகப்பட்ட சமூக நெருக்கடிகளுக்கு இடையே அவர் டாக்டராக பணிபுரிந்தார். சுமார் 35 ஆண்டுகாலம் டாக்டராக பணிபுரிந்த பின்னர் 1930ஆம் ஆண்டு ராக்மாபாய் ஓய்வு பெற்றார்.

மிகத் துணிச்சலான போராட்டவாதியாகவும் மருத்துவராகவும் திகழ்ந்த ராக்மாபாய், போதுமான அங்கீகாரம் இல்லாமல், இன்னமும் இந்தியாவில் எவருக்கும் தெரியாத ஒருவராக இருந்த நிலையை மாற்றும் வகையில் கூகுள் தனது இன்றைய கூகுள் சின்னத்தில் ராக்மாபாயின் படத்தை வெளியிட்டு வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS