'நான் உலக அழகி ஐஸ்வர்யா ராயின் மகன்!' -பரபரப்பை ஏற்படுத்திய 29 வயது இளைஞர்!  

India
Typography

ஐதராபாத், ஜன.23- சூடாவரம் என்ற பகுதியைச் சேர்ந்த 29 வயது ஆடவர் ஒருவர், தாம் உலக அழகி மற்றும் பாலிவூட் நடிகை ஐஸ்வர்யா ராயின் மகன் என்று தகவல் வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து, பாலிவூட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சங்கீத் குமார் என்ற அந்த ஆடவர், கடந்த 1988-ஆம் ஆண்டில், ஐ.வி.எஃப் எனப்படும் சிறப்பு கருத்தரிப்பு முறையின் வாயிலாக லண்டனில் பிறந்தார். அதன் பின்னர், சூடாவரத்திலுள்ள தனது உறவினர்களின் பராமரிப்பில் அவர் வளர்ந்தார். 

எந்தவொரு ஆதாரத்தையும் காண்பிக்காத சங்கீத் குமார், தான் சிறுவனாக இருந்த போது, நடிகை ஐஸ்வர்யாவின் பெற்றோர் பிருந்தா கிருஷ்ணராஜ் மற்றும் கிருஷ்ணராஜின் பராமரிப்பில் மும்பையிலுள்ள அவர்களின் வீட்டில் வளர்த்து வந்ததாக தெரிவித்துள்ளார்.   

1988-ஆம் ஆண்டில், ஐஸ்வர்யா ராய் ஒரு 15 வயது சிறுமி என்பது குறிப்பிடத்தக்கது. 

"எனது தாத்தா பாட்டி (ஐஸ்வர்யாவின் பெற்றோர்) எனக்கு 2 வயது ஆகும் வரை என்னை அவர்களின் பராமரிப்பில் வளர்த்து வந்தனர். அதன் பின்னர், என்னை சூடாவரத்திற்கு அனுப்பி வைத்து விட்டனர். நான் வளர்ந்து பெரியவன் ஆகும் வரை, எனது உறவினர்கள், எனது அம்மா யார் என்பதை என்னிடம் தெரிவிக்கவில்லை. நானே, என் தாயார் குறித்த தகவலை தெரிந்துக் கொள்ள முனைந்தேன்" என்று சங்கீத் குமார் கூறியுள்ளார். 

"என் தாயார் குறித்த விவரம் இப்போது நான் அறிந்துக் கொண்டேன். அவரை நேரில் பார்த்துப் பேச வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. அவர் என்னுடன் மங்களூரிவில் வந்து வசிப்பார் என்று நான் பெரிதும் எதிர்பார்க்கின்றேன்" என்று அவர் சொன்னார். 

தனது தாயாரை நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆசை இருந்த போதிலும், அவரை தாம் விசாகபட்டிணத்தில் சென்று காண முயற்சிக்கவில்லை என்றும் அவர் கூறினார். 

சங்கீத் குமார் வெளியிட்ட இந்தத் தகவல், ஐஸ்வர்யாவின் ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது குறித்து தங்களின் "தலைவி" என்ன கூறவிருக்கின்றார் என்று அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS