பழிக்குப் பழி! தன்னைக் கடித்த பாம்பின்  தலையைக் கடித்து   துப்பிய  விவசாயி !

India
Typography

 லக்னோ, பிப்.21:-  உத்திரப் பிரதேசத்தில் தன்னைக் கடித்த பாம்பைப் பழிக்குப் பழி வாங்குவதற்காக, அதன் தலையை கடித்துத்  துப்பினார்  ஒரு விவசாயி.

உத்திரப்பிரதேச மாநிலம் ஹாதோய் மாவட்டம் சுக்லாபூர் பாகர் கிராமத்தை சேர்ந்தவர் சோனேலால். விவசாயியான இவர்  தனது விவசாயத் தோட்டத்தில் மயங்கிய நிலையில் கிடந்தார். அருகில் தலையில்லாத பாம்பின் உடல் ஒன்றும் கிடந்துள்ளது.

இந்தக் காட்சியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், சோனேலாலை பாம்பு கடித்துவிட்டதாக நினைத்து,  ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சோனேலாலை மீட்டு, மோகாகஞ்சில் உள்ள  சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். 

பாம்பு கடித்ததாக சொல்லப்பட்டதால், விஷ முறிவு மருந்து கொடுத்து, அவரை தொடர் கண்காணிப்பில் மருத்துவர்கள் வைத்தனர். இரவு 10 மணி அளவில் கண்விழித்த சோனேலால் கூறிய விஷயங்கள் அனைத்தும் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி ரகம்.

நடந்த சம்பவம் பற்றி அவர் கூறியதாவது: " நான் கால்நடைகளுடன் எனது தோட்டத்துக்கு சென்றுகொண்டிருந்தேன். அப்போது ஒரு பாம்பு என்னைக் கடித்துவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த நான், அந்த பாம்பை விரட்டிப்  பிடித்து தலையைக் கடித்து  துப்பிவிட்டேன். பிறகு மயக்கம் ஏற்பட்டு விழுந்து விட்டேன்" என்றார்.

இதை கேட்ட மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவரும் அதிர்ந்துவிட்டனர். அதெப்படி பாம்பைக் கடித்து துப்பிய ஒருவர் உயிருடன் இருக்க முடியும் என வியந்த மக்கள், சோனேலாலை பார்ப்பதற்காக மோகாகஞ்சில் மருத்துவனை முன்பு கூடிவிட்டனர். 

ஊரெங்கும் செய்தி பரவியதையடுத்து, சோனேலால் மிகவும் பிரபலமாகிவிட்டார். அசாதாரமான விஷயத்தை செய்துள்ள சோனேலால், விசித்திரமான மனிதராக இருக்கக்கூடும் என உளவியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS