ஓசூர், ஆக.23- கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை காதலன் உதவியுடன் கழுத்தை அறுத்துக் கொலை செய்து புதைத்த மனைவியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜஸ்டின் (வயது 30) இவர் மனைவி இந்து (வயது 25) இவர்களுக்கு ஜியோன் என்ற இரண்டரை வயது மகன் உள்ளான்.

ஜஸ்டின் டெல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன்னர் சொந்த ஊருக்கு வந்த ஜஸ்டின் மனைவியை அழைத்து ஓசூருக்கு வந்து வாடகை வீடு எடுத்து தங்கினார். இதனிடையே கடந்த 20-ஆம் தேதி ஜஸ்டின் மாயமானார். மேலும் அவரது வீடு முழுவதும் இரத்தக்கறைகள் படிந்திருந்தன. 

இது குறித்து அக்கம் பக்கத்தினர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில் அவரே நேற்று போலீசில் சரணடைந்தார். தனது கணவரை கள்ளக்காதலன் லிண்டோ (வயது 30) என்பவரின் உதவியுடன் கொலை செய்து புதைத்து விட்டதாகவும் கூரினார்.

கொலை தொடர்பாக இந்துவிடம் விசாரணை நடத்தப்பட்டதில் கிடைத்த தகவல் வருமாறு: இந்துவிற்கும், லிண்டோவிற்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்து வந்தது. கடந்த 2 வாரத்துக்கு முன்னர் ஜஸ்டின், இந்துவை ஓசூருக்கு அழைத்து வந்த நிலையில், லிண்டோவுக்கு போன் செய்த இந்து அவரை அங்கு வரவழைத்தார்.

பின்னர், கள்ளக் காதலனின் உதவியுடன் தூங்கி கொண்டிருந்த ஜஸ்டினை கத்தியால் இந்து கழுத்தை அறுத்து கொலை செய்தார். அதன்பிறகு லிண்டோ, சடலத்தைக் கொண்டு சென்று புதைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தக் கொலையில் தப்பி ஓடிய லிண்டோவை போலீசார் தேடி வருகிறார்கள்.

 சென்னை, ஆக.21- முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் விதித்த முக்கிய நிபந்தனைகளை எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் ஏற்றுக் கொண்டதையடுத்து அ.தி.மு.க. அணிகள் இணைப்பு வெற்றிகரமாக அமைந்தது.  மேலும் ,ஆளுனர்   மாளிகையில் இன்று மாலையில் நடந்த பதவியேற்பு நிகழ்வில் ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராக பதவியேற்றார்.

அவருக்கு  நிதி மற்றும் வீட்டு வசதித் துறை பொறுப்புகள் அவருக்கு வழங்கப்பட்டன. மேலும் அவருடைய அணியைச் சேர்ந்த மாஃபா பாண்டியராஜன், தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறைஅமைச்சராக பதவியேற்றார்.

முக்கிய நிபந்தனையான சசிகலாவை விலக்கி வைத்து விட்டு ஆட்சி மற்றும் கட்சியை வழி நடத்துவதில் அதிகாரப் பகிர்வு செய்வதில் இரு தரப்பினருக்கும் இடையே சற்று இழுபறி ஏற்பட்டது.இன்று பிற்பகலில் நிபந்தனைகள் அனைத்தும் ஏற்கப்பட்டன.  

எடப்பாடி பழனிச்சாமி முதல்-அமைச்சராக தொடர்வது என்று இரு தரப்பினரும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். துணை முதல்வாராக ஓ.பன்னீர் செல்வமும் அவருடைய தரப்பிலிருந்து சிலர் அமைச்சர்களாகவும் நியமிக்கப்படவுள்ளனர். இன்று பிற்பகலில் பதவியேற்புச் சடங்கு நடைபெறும். 

அதுபோல சசிகலாவை நீக்கிய பிறகு கட்சியை வழிநடத்த 15 பேர் கொண்ட வழிகாட்டும் குழு உருவாக்கவும், அந்த குழுவுக்கு ஓ.பன்னீர் செல்வத்தைத் தலைவராக தேர்வு செய்ய இரு தரப்பினரும் சம்மதித்தனர். இவை தவிர மந்திரி சபையை மாற்றம் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று காலை இரு அணி தலைவர்களும் தனித்தனியே ஆலோசனை நடத்தினார்கள். அதன் பின்னர் பிற்பகல் 2 மணியளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்தனர்.

இதேபோல் ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் சிறிது நேரத்தில் தலைமை அலுவலகத்திற்கு வந்தனர். ஓ.பன்னீர்செல்வம் 2.40 மணியளவில் தலைமை அலுவலகம் வந்து சேர்ந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து இரு தரப்பினரும் அணிகள் இணைந்ததை முறைப்படி அறிவித்தனர்.

ஒரே மேடையில் ஓ.பன்னீர் செல்வம், முதலைமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் கைகோர்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதேசமயம் டிடிவி தினகரன் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் தனியாக ஆலோசனை நடத்தினார். அவரது நிலைப்பாடு குறித்து பின்னர் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை, ஆக.21- சசிகலாவை நீக்கினால் மட்டுமே இணைப்பு சாத்தியம் என்று ஓ.பன்னீர்செல்வம் அணி, நிபந்தனை விதிப்பதால் கடைசி நேரத்தில் இணைப்பு முயற்சியில் இழுபறி நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதிமுகவின் ஓபிஎஸ் அணியும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியும் (ஈபிஎஸ்) அணியும் அமாவாசை நாளான இன்று இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. 

இரு அணி தலைவர்களும் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவார்கள் என்று கூறப்பட்டனர். ஆனால் சசிகலா நீக்கம் பற்றிய அறிவிப்பு வெளியாக வேண்டும் என்று ஓபிஎஸ் அணியினர் உறுதியாக கூறி வருவதால் இணைப்பில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

ஓபிஎஸ் வீட்டில் இறுதிக்கட்ட ஆலோசனை நடைபெற்றது. பிற்பகல் 12 மணிக்கு இரு அணி தலைவர்களும் இணைப்பு பற்றிய அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று தகவல் வெளியானது. ஜெயலலிதா நினைவிடமும் அலங்கரிக்கப்பட்டது. அதிமுக தலைமை அலுவலகமும் திருவிழா கோலம் பூண்டது. தொண்டர்கள் குவிந்தனர். இதனால் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டது.

சசிகலாதான் இன்றைக்கும் அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று டிடிவி தினகரன் அணியினர் கூறி வருகின்றனர். எனவே, சசிகலாவை முற்றுலும் நீக்கினால் மட்டுமே இணைப்பு சாத்தியம் என்று ஓபிஎஸ் அணியினர் கூறியுள்ளனர். 

சசிகலா நீக்கம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சசிகலாவை நீக்க எடப்பாடி பழனிச்சாமி அணி தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. எனவே ஓபிஎஸ் அணியினர் அதிமுக தலைமை அலுவலகம் வருவதில் சிக்கல் எழுந்துள்ளது.

ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இரு அணி தலைவர்களும், நிர்வாகிகளும் இன்று அதிமுக தலைமை அலுவலகம் வருவார்கள் என்று கூறப்பட்டதால் ஆரத்தி தட்டுடன் மகளிர் அணியினர் காத்திருக்கின்றனர். தொண்டர்களும் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். .

சசிகலாவை நீக்கவேண்டும் என்று தொண்டர்களும் விரும்புகின்றனர். ஆனால் சசிகலாவை நீக்கினால் நீதிமன்றம் செல்வோம் என்றும், ஆட்சி ஆட்டம் காணும் என்றும் தினகரன் தரப்பினர் எச்சரித்துள்ளனர். சசிகலாவை நீக்கிவிட்டு ஓபிஎஸ் அணியை இணைப்பாரா? எடப்பாடி பழனிச்சாமி நொடிக்கு நொடி அதிமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. 

 

சென்னை, ஆக.19- பிக் பாஸ் வீட்டில் ஓவியா இருந்தவரை அவரை எப்படியெல்லாம் ஒதுக்கி வைக்க முடியுமோ அப்படியெல்லாம் ஒதுக்கியகாயத்தி, சக்தி மற்றும் ஜூலி ஆகியோர் மீது ரசிகர்கள் காட்டிய வெறுப்பு கொஞ்சமல்ல, வெளியில் தலைகட்ட முடியாத அளவுக்கு இவர்கள் வெறுப்பைச் சம்பாதித்து வைத்துள்ளனர்.

இவர்கள் இதுவரை ரசிகர்கள் கண்களில் படாமல்தான் உள்ளனர் சக்தியும் ஜூலியும். இந்த வாரம் வெளிவரவிருக்கும் காயத்ரியும் அப்படித்தான் இருக்க வேண்டிவரும்.

இந்நிலையில் ஓவியா, தன் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். ‘அந்த நிகழ்ச்சியில் என்னை மற்றவர்கள் ஒதுக்கியபோது நான் எப்படி மனதளவில் பாதிக்கப்பட்டேனோ, அந்த நிலையில்தான் இப்போது அவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. நான் பிக் பாஸ் வீட்டுக்குள் கஷ்டப்பட்டேன். ஆனால், வெளியில் வந்த பிறகும் அவர்கள் கஷ்டப்படுகிறார்கள்

இதற்கு மேல் அவர்கள் மீது மோசமான கருத்துகளை முன்வைக்காதீர்கள். அது எனக்கு கஷ்டமாக உள்ளது. தவறு எல்லோரும் தான் செய்கிறோம். யாரும் இங்கு சரியாக இல்லை, நான் உள்பட. தவறு செய்தால்தான் மனிதர்கள். எனவே, பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்தவை எல்லாம் ஒரு பெரிய விஷயமல்ல.

அவர்களுக்கு யாரும் தொல்லை தரவேண்டாம். நீங்கள் என் மீது வைத்துள்ள அன்பு எனக்குப் புரிகிறது. ஆனால், மற்றவர்களைக் கஷ்டப்படுத்தி என்னிடம் அன்பு காட்ட வேண்டாம். அது அவப் பெயரைத்தான் தரும்," -மேற்கண்டவாறு தன்னுடைய ரசிகர்களுக்கு ஓவியா வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

சென்னை,ஆக.16- பிக் பாஸ் வீட்டிற்கு ஓவியா திரும்பி வருவது பற்றி சமூக வலைத்தளங்களில் செய்தி தீயாக பரவி வருகிறது. பிக் பாஸ் வீட்டில் இருந்து சென்ற ஓவியா திரும்பி வர விரும்பவில்லை என்ற செய்திதான் அது. இதனால் ஓவியாவின் ஆர்மி மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளது.

எப்படியாவது ஓவியாவை மீண்டும் அழைத்து வரும் முயற்சியில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள். ஓவியாவுக்கு அள்ளி அள்ளிச் சம்பளம் கொடுக்கவும் அவர்கள் தயாராக உள்ளார்கள் என்று தகவல் பரவிய நிலையில் இந்தத் தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் என்ற பெயரை கேட்டாலே ஓவியா பதட்டமாகிறார் என்றும், அவர் திரும்பி வர விரும்பவில்லை என்றும் ஒரு தகவல் சமூக வலை தளங்களில்யு பரவியுள்ளது. 

பிக் பாஸ் வீட்டிற்கு ஓவியா திரும்பி வர விரும்பாதது குறித்து அறிந்த ஓவியா ஆர்மிக்காரர்களோ 'கடவுளே, இது உண்மையாக மட்டும் இருக்கவே கூடாது' என்று பிரார்த்தனைச் செய்கிறார்கள். 

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் எந்தநேரத்திலும் திரும்பி வரலாம் என்று நடிகை ஶ்ரீ பிரியாவிடம் பிக் பாஸ் தெரிவித்தார். பிக் பாஸ் ஓவியாவைப் பற்றித் தான் அப்படி கூறியுள்ளார் என்று ஓவியா ஆர்மிக்காரர்கள் நினைக்கிறார்கள்.

 சென்னை,ஆக.16- பிரபல குணச்சித்திர நடிகர் சண்முக சுந்தரம் உடல் நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு 70 வயது ஆகிறது. 1960-ஆம் ஆண்டுகளிலேயே நடிக்கத் தொடங்கிய சண்முகசுந்தரம், சிவாஜிகணேசன் நடித்த ‘இரத்தத் திலகம்’ மூலம் அறிமுகமானவர்.

அதன் பிறகு, ‘நத்தையில் முத்து’, ‘இதயக்கனி’, ‘ஆதித்யன்’, ‘குறத்தி மகன்’, லட்சுமி கல்யாணம்’, ‘வாழையடி வாழை’, ‘கரகாட்டக்காரன்’, ‘சென்னை 60028’, உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.  

இயக்குனர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் பெரும்பாலான படங்களில் சண்முகசுந்தரம் முக்கிய வேடத்தில் தோன்றுவார். இவரது தங்கைதான் பழம்பெரும் நடிகை சந்திரகாந்தா. 

எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும், ‘கரகாட்டக்காரன்’ படம்தான் சண்முகசுந்தரத்தை மிகப் பிரபலமாக்கியது. அவர் நடித்த கடைசிப் படம் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ என்பது குறிப்பிடத்தக்கது.

‘அண்ணாமலை’, ‘செல்வி’, ‘அரசி’, ‘வம்சம்’ உள்ளிட்ட பல தொலைக்காட்சித் தொடர்களிலும் சண்முகசுந்தரம் நடித்துள்ளார். 

 

சென்னை, ஆக.15- பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா மறுபிரவேசம் செய்தால் அவருக்கு அதிகச் சம்பளம் கொடுக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நிகழ்ச்சியில் இருந்து ஓவியா வெளியேறிய காரணத்தால் அந்த நிகழ்ச்சி தனது மவுசை இழந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில், அந்த நிகழ்ச்சியில் அதிக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் ஓவியா. 

அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மீண்டும் திரும்புவாரா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஆனால், அவர் திரும்பவேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

இந்நிலையில், முன்னதாக நடிகை ஓவியாவுக்கு வாரத்திற்கு 3 லட்சம் வரை சம்பளம் கொடுக்கப்பட்டது. அவர் நிகழ்ச்சியில் மறுபிரவேசம் செய்தால், ஒரு நாளைக்கு 5 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுக்க முடிவு செய்துள்ளது பிக்பாஸ் குழு என்றொரு தகவல் கசிந்துள்ளது. 

 சென்னை, ஆக.12- பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியா தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வழி தமிழக ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று அவர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஓவியா.

பிக் பாஸ் வீட்டில் இருந்த போது அவருக்கு எதிராக பலரும் செய்த சதி மற்றும் காதல் தோல்வி ஆகியவற்றின் காரணமாக விரக்தி அடைந்த ஓவியா அங்கிருந்த நீச்சல் குளத்தில் மூழ்கி தற்கொலைக்கு முயன்றதை அடுத்து அவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

ஓவியா வெளியேற்றப்பட்ட பின்னர், பிக் பாஸ் நிகழ்ச்சி படுத்து விட்டது. ஓவியாவுக்காக அந்த நிகழ்ச்சியை இதுவரை பார்த்து வந்த ரசிகர்கள், அவர் இல்லாத நிகழ்ச்சியை இனிப் பார்ப்பதில்லை என முடிவெடுத்ததால் அந்த நிகழ்ச்சி வீழ்ச்சி காணத் தொடங்கியது.

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் அவர் தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த தற்கொலை முயற்சி தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த பாலாஜி என்ற வழக்கறிஞர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் இந்த விசாரணையை நடத்துகின்றனர்.

இந்தத் தற்கொலை முயற்சி விவகாரத்தில் நடந்தது என்ன என்பதை விளக்குவதற்கு போலீஸ் நிலையத்தில் ஆஜராகும்படி நஸ்ரத் பேட்டை பொலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் ஓவியாவுக்குச் சம்மன் அனுப்பியுள்ளார்.

ஓவியாவின் நிர்வாகியிடம் விசாரித்த போது, ஓவியா தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை என்று தமக்கு விளக்கம் அளித்ததாக இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் கூறினார்.

 

சென்னை, ஆக.8– பாஜக எம்.பி பூனம் மகாஜன், நடிகர் நஜினிகாந்தைச் சந்தித்துப் பேசியுள்ளார். ஏற்கனவே அரசியலில் ரஜினியைப் பாஜக தன் பக்கம் ஈர்க்கப் பார்க்கிறது என்ற ஆரூடங்கள் நிலவி வரும் நிலையில் இந்தச் சந்திப்பு ஊடகங்களில் புதிய ஊகங்களைத் கிளப்பியுள்ளன.

எனினும், இந்தச் சந்திப்பில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை, மரியாதை நிமித்தமான ஒன்றே என பாஜக விளக்கம் அளித்துள்ளது

மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் பூனம் மகாஜன், மறைந்த அரசியல் தலைவர் பிரமோத் மகாஜனின் மகள் ஆவார். இன்று போயஸ் கார்டன் இல்லத்தில் பூனம் மகாஜன், ரஜினியைச் சந்தித்துப் பேசினார். சந்திப்பின் போது ரஜினியின் மனைவி லதாவும் உடன் இருந்தார்.

லதா ரஜினியுடன் இணைந்து கல்வித் திட்டம் ஒன்றில் ஈடுபட பூனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பு குறித்து பூனம் கூறுகையில்-

இந்தச் சந்திப்பு சிறப்பாக அமைந்தது. ரஜினி எனக்கு ஆதரவாக இருக்கிறார். அவருக்கு எனது தந்தையை நன்றாகத் தெரியும். தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரின் இதயத்திலும் ரஜினி இருக்கிறார்' என்று பூனம் மகாஜன் சொன்னார்.

 

'இந்தச் சந்திப்பு, மரியாதை நிமித்தமானது மட்டுமே, அரசியல் தொடர்பானது அல்லஎன்று பாஜக தரப்பில் கூறப்பட்டுள்ளது.

 சென்னை, ஆக.8– "ஓவியாவை நான் திருமணம் செய்து கொள்வதாக கூறியதாக ஊடகங்களில் வெளியானது போல் எந்தவொரு 'டுவிட்' செய்தியும் என்னுடைய டுவிட்டர் கணக்கில் இருந்து செல்லவில்லை என்று நடிகர் சிம்பு மறுப்பு தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 3 அல்லது 4 வாரங்களாகத் தொடர்ந்து சக போட்டியாளர்களால் ஓவியா வெளியேற்றப்பட்டாலும் அவரை பிக்பாஸ் வீட்டில் தக்கவைத்து கொள்ள மக்களும், ஓவியா ரசிகர்களும் அசராமல் வாக்களித்து வந்தனர். இது மற்ற போட்டியாளர்களுக்குப் பொறாமையை ஏற்படுத்தியது.

ஆரவ் ஓவியாவைக் காதலிப்பாகக் கூறி ஏமாற்றி விட்டதால் ஓவியா மன உளைச்சலில் உள்ளதாகவும் சக போட்டியாளர்கள் ஓவியாவின் நற்பெயரைக் கெடுக்க பல்வேறு உத்தியைக் கையாண்டு வருவதாகவும் தெரிகிறது. 

இதனால் ஓவியாவை எரிச்சலூட்டும் செயல்களைக் காயத்ரி, சக்தி, ஜூலி ஆகியோர் செய்து வந்தனர். இதனால், கடந்த 2 நாள்களாக ஓவியா, தான் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற வேண்டும் என்று போராடி அவர் வெளியேறிவிட்டார்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு சிம்புவின் டுவிட்டர் கணக்கில் இருந்து, ஓவியா உன்னை திருமணம் செய்ய தயார், தைரியமான பெண், உங்களுக்குக் கடவுளின் ஆசிகள் என்று அவர் பதிவிட்டதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், பதிவான சில நிமிடங்களிலேயே அது அகற்றப்பட்டது.

ஓவியாவை சிம்பு திருமணம் செய்ய விரும்புவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில் அதை சிம்பு மறுத்துள்ளார். மேலும், அப்படி 'டிவிட்' தன்னுடைய 'டுவிட்டர்' கணக்கில் இருந்து செல்லவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். 

 

 

சென்னை, ஆக.6- பிக்பாஸ் வீட்டில் இருந்து நடிகை ஓவியா வெளியேறினார். அந்த காட்சிகள் நேற்றைய பாகத்தில் அதிகாரப்பூர்வமாக காட்டப்பட்டன. ஓவியாவால் அந்த வீட்டில் தொடர்ந்து இருக்க முடியவில்லை. காதல் தோல்வியும் சக பங்கேற்பாளர்களின் இம்சையும் அவரை வெளியேற்றிவிட்டது.

இப்போது மன அழுத்தம் காரணமாக அவரை வெளியில் கொண்டு வந்து நட்சத்திர தங்கும் விடுதியில் தங்க வைத்துள்ளனர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். அவரது வெகுளித்தனம், அழகு, யாருக்கும் பயப்படாதது, தவறு என்று தெரிந்ததும் மன்னிப்புக் கேட்கும் குணம், சுலபத்தில் ஒருவரை நம்புவது போன்ற தன்மைகள் மக்களை வெகுவாகக் கவர்ந்துவிட்டன.

தமிழகத்தில் இன்றைய தேதிக்கு எந்த நடிகைக்கும் இல்லாத அளவு ரசிகர்கள் ஓவியாவுக்கு மட்டுமே உள்ளனர் என்றால் மிகையல்ல. ஓவியாவை தொல்லை செய்த காயத்ரி, நமீதா, ஜூலி, ஆரவ், சக்தி போன்றவர்களைக் கடுமையாக வெறுக்கிறார்கள் பார்வையாளர்கள். 

அதே நேரம், ஓவியாவை எப்படியாவது வீட்டுக்குள்ளேயே இருக்க வைக்க வேண்டும் என்று நிகழ்ச்சி நடத்தும் என்டமோல் நிறுவனம் விரும்புகிறது. இதற்காக அவருடன் நட்சத்திர தங்கும் விடுதியில் பேச்சுவார்த்தை நடத்துகிறதாம்.

More Articles ...