'தமிழக மக்களுக்காக முதல்வராக விரும்புகிறேன்!' -கமல்ஹாசன்

தமிழகம்
Typography

 சென்னை, செப்.22- தாம் அரசியலுக்கு வருவது உறுதி. தமிழக மக்களுக்காக முதல்வராக விரும்புவதாக நடிகர் கமல்ஹாசன் அதிரடியாக கூறியுள்ளார்.

மேலும், அரசியலுக்குள் நுழைவது என்பது முள் கிரீடத்தைத் தலையில் சுமப்பதற்குச் சமமானது என்றார் அவர்.

மக்களைப் பொறுத்தவரை அவர்களின் பிரச்சனைகளை யாரும் கண்டு கொள்வதில்லை என்றே நினைக்கின்றனர். இடது சாரியா, வலது சாரியா அல்லது வேறு சிந்தனையுடையவனா? என்பதையெல்லாம் மக்கள் பார்க்கவில்லை. 

என்னைப் பொறுத்தவரை கருப்புதான் என்னுடைய நிறம். அதில்தான் காவி உட்பட அனைத்து நிறங்களும் உள்ளன. அரசியல்வாதி ஆவதற்கு முன்னர் என்னை நான் தயார்படுத்திக் கொள்ளவேண்டும். இதற்காக மக்களை நேரில் சந்திக்கவுள்ளேன், என்னுடைய மக்கள் சந்திப்பு பயணத்தை விரைவில் அறிவிப்பேன். 

உடனடியாக, எந்த மாற்றத்தையும் செய்துவிடுவேன் என்று நான் உறுதியளிக்கவில்லை. ஆனால், மாற்றத்திற்காக நான் தலைவணங்கத் தயாராக இருக்கிறேன் என்பதை சொல்லிக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். 

இதே போன்று டைம்ஸ் நவ் டிவி சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், நடிகர் கமல் கூறியதாவது: 

மக்களின் ஒத்துழைப்பு இன்றி எதையுமே செய்ய முடியாது, ஏன், நான் அவர்களுக்காக உதவ நினைப்பதில் பாதியைக் கூட நிறைவேற்ற முடியாது. என்னைப் பொறுத்தவரையில் நான் பகுத்தறிவாளன்.

கடவுள் இருக்கிறாரோ, இல்லையோ.., இது எல்லாவற்றையும் விட நான் மக்களின் அன்பை மதிக்கிறேன். நான் மக்களுக்கு உதவுவதற்காக எந்த அளவிற்கு வேண்டுமானாலும் கீழே இறங்கிச் செல்லத் தயராக இருக்கிறேன். நான் மக்களுக்காக உதவும் ஒரு கருவி. அதைத் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை. இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS