கேரளா- தமிழகப் பெண்கள், யார் அழகு? 'நீயா, நானா' நிகழ்ச்சிக்கு கடும் எதிர்ப்பு!

தமிழகம்
Typography

 

சென்னை, அக்.22- 'நீயா நானா' தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேரளத்து பெண்கள் அழகா? தமிழ்நாட்டு பெண்கள் அழகா? என்று ஒளியேற்றவுள்ள  'நீயா நானா' நிகழ்ச்சியில் ஏதேனும் ஒரு தலைப்பில் விவாதம் நடத்தப்படும். இந்த வாரத்தின் நிகழ்ச்சியாகக் கேரளா பெண்கள் அழகா, தமிழகப் பெண்கள் அழகா? என்ற தலைப்பில் பெண்களை மையப்படுத்தி விவாத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சிக்கான விளம்பர முன்னோட்டங்கள் தொடர்ச்சியாக டுவிட்டர், முகநூல் மற்றும் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டது. பெண்களை இழிவுபடுத்தும் விதமாக காட்சிப் பொருளாகவே பார்க்கும் வகையில் இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப் பட்டுள்ளதாக கடும் விமர்சனங்கள் எழுந்தன.

மேலும் ஒரு பக்கம் கேரளப் பெண்களையும் மற்றொரு பக்கம் தமிழ்நாட்டு பெண்களையும் அமர வைத்து நடத்தும் விவாத நிகழ்ச்சியும் ஒரு வகையில் இனவெறி தூண்டுதல் என்றும் கண்டனங்கள் எழுந்தன. இதற்கான விளம்பர முன்னோட்டங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே அது 1 கோடி பார்வையாளர்களை எட்டியது. 

இந்நிலையில், இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பை ரத்து செய்ய வலியுறுத்தி காஞ்சிபுரத்தைத் சேர்ந்த 'மக்கள் மன்றம்' என்ற அமைப்பு காஞ்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஒரு புகார் மனுவை அளித்துள்ளது. பெண்களை அறிவுக்குச் சம்பந்தமில்லாதவர்களாகவும் காட்சிப் பொருளாகவும் பார்க்கும் ஆணாதிக்க போக்கை வெளிக்காட்டும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைவது முறையற்றது என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு இடையேயான ஒற்றுமையை கலைக்கும் விதமாக உள்ள இந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்பை ரத்து செய்ய வேண்டும். இந்த நிகழ்ச்சியின் இயக்குனர் அந்தோணி, நெறியாளர் கோபிநாத், விஜய் டிவி மீது பெண்களைத் தவறாகச் சித்தரித்தல் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் மன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. 

இதனிடையே 'நீயா நானா' நிகழ்ச்சியின் நாளைய ஒளிபரப்புக்காக டுவிட்டர், முகநூலில் வெளியிடப்பட்ட விளம்பர முன்னோட்டங்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்பு இருக்குமா? என்பது சந்தேகமாக உள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS