இரட்டை இலை சின்னம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கே!

தமிழகம்
Typography

புதுடில்லி, நவ.23- முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவால் காலியான ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கடந்த மார்ச்சு மாதம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அ.தி.மு.க.வின் இரட்டை இலைச் சின்னத்தை பெற அ.தி.மு.க. அம்மா அணிக்கும், அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணிக்கும் போட்டி ஏற்பட்டது. 

அவ்விரு அணியினரும் இரட்டை இலைச் சின்னத்திற்கு உரிமை கொண்டாடினர். இந்தத் தகராறைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் அச்சின்னத்தை யாரும் உபயோகிக்கக் கூடாது என்று கூறி அதன் உபயோகத்தை முடக்கியது. 

இதனிடையே, அத்தேர்தலில் வெற்றிப் பெரும் பொருட்டு, வாக்காளர்களின் வாக்குகளை வாங்குவதற்கு பணப் பரிமாற்றங்கள் நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்று நிரூபணமானதைத் தொடர்ந்து, அந்த இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்ட்து. அதனைத் தொடர்ந்து, இரு அணிகளைச் சேர்ந்தவர்களும், அந்த இரட்டை இலைச் சின்னத்தை மீட்பதற்கு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். 

தேர்தல் ஆணையத்திலும் பல பிரமாண பத்திரங்களையும் தாக்கல் செய்தனர். பல மாதங்களாக விசாரணை நடத்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள், இன்று அந்த இரட்டை இலை சின்னம், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி - ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது. சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களைக் கொண்டு, அவர்களுக்கு அந்த இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கப்பட்டதாக அந்த ஆணையம் தகவல் தெரிவித்தது. 

இனிமேற்கொண்டு, அ.தி.மு.க.வின் இரட்டை இலைச் சின்னத்தை, முதலமைச்சர் அணி அவர்களின் கட்சிக் கொடி மற்றும் அதிகாரப்பூர்வ கடிதங்களில் உபயோகிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS