மணல் குவாரிகளை மூடுவதற்கு எதிராக மேல்முறையீடு!

தமிழகம்
Typography

சென்னை, டிச.5- புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவிலைச் சேர்ந்த எம்.ஆர்.எம். எண்டர் பிரைசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எம்.ஆர். எம். ராமையா மலேசியாவில் இருந்து தாம் இறக்குமதி செய்த மணலை விற்பனைக்கு உட்படுத்த அனுமதி அளிக்குமாறு மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதன் தொடர்பில் வழக்கு விசாரிக்கப்பட்டு, உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன், இறக்குமதி செய்யப்பட்ட மணலை விற்பனைக்கு உட்படுத்த அனுமதி வழங்கி, தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்திற்குள் மூட வேண்டும் என்று உத்தரவிட்டார். 

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஜல்லியைத் தவிர கிரானைட் குவாரி உள்ளிட்ட பிற கனிம குவாரிகளையும் மூட வேண்டும். வெளிநாட்டில் இருந்து மணலை இறக்குமதி செய்ய ஏதுவாக தமிழக அரசு தேவையான வழி முறைகளை பின்பற்ற வேண்டும். தேவைப்பட்டால் அரசே வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து மணல் விற்பனை செய்யலாம் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் மணல் குவாரிகளை மூட வேண்டும் என்ற நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கோரி நெல்லை, கன்னியாகுமாரி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்கள் சார்பில் மதுரை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. 

எம்.ஆர். எம். ராமையா, இறக்குமதி செய்துள்ள மணல் தொழிலக பயன்பாட்டிற்கான மணல் (தாதுமணல்) என்ற வரையறைக்குள் வருகிறது. அத்தகைய தாதுமணல் இறக்குமதி செய்வதற்கான உரிமம், விற்பனைக்கு கொண்டு செல்வற்கான போக்குவரத்து அனுமதி சீட்டு ஆகியவற்றை அதிகாரிகளிடம் அவர் பெறவில்லை. அதனால்தான், மணலை விற்பனைக்கு கொண்டு செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 

இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் நீதிபதி மகாதேவன், பொதுநல வழக்குகளை போல இந்த வழக்கையும் கையாண்டுள்ளார். வழக்கு தொடர்பான எதிர்மனுதாரர்கள் முறையான வாதங்கள் வைக்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை. எனவே, அந்த நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று அப்பீல் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS