'என் அரசியல் நிலைப்பாடு என்ன? 31-ஆம் தேதியன்று சொல்வேன்'! ரஜினி அறிவிப்பு!

தமிழகம்
Typography

சென்னை, டிச.26- சினிமா துறையில் சூப்பர் ஸ்டாராக விழங்கும் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவாரா இல்லையா என்பது குறித்து பல கேள்விகள் எழுந்துள்ள வேளையில், தமது அரசியல் நிலைப்பாடு குறித்து எதிர்வரும் 31-ஆம் தேதியன்று தாம் அறிவிப்பு ஒன்றை அறிவிக்கவிருப்பதாக ரஜினி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தின் அரசியல் அமைப்பு சரி இல்லை என்றும், தேவை வரும் போது, தாம் அரசியலில் களம் இறங்கக்கூடும் என்று கடந்த முறை தமது ரசிகர்களை நேரில் சந்தித்த போது அவர் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதனைத் தொடர்ந்து, ரஜினி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று அவரின் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அவரின் பிறந்த நாளான டிசம்பர் 12-ஆம் தேதியன்று அவர் புதிய அரசியல் கட்சி குறித்து அறிவிப்பார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் அவற்றில் உண்மை இல்லை என்று பின்னர் தெளிவுப்படுத்தப்பட்டன.

இதனிடையில், இன்று தொடங்கி, 31-ஆம் தேதி வரை ரஜினி தனது ரசிகர்களை நேரில் சந்திக்கவிருக்கிறார். இந்தச் சந்திப்பின் போது, தமது அரசியல் பிரவேசம் மற்றும் புதிய கட்சி குறித்த அறிவிப்பை ரஜினி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு தகுந்தார் போல், ரசிகர்களிடத்தில் பேசிய அவர் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து வருகிற 31-ஆம் தேதி அறிவிக்கவிருப்பதாக தெரிவித்தார்.  

"உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. உங்களைப் பார்த்தவுடனேயே எனக்குள் புத்துணர்வு ஏற்பட்டுள்ளது. கதாநாயகன் ஆசையில் நான் சினிமாவுக்கு வரவில்லை. 'ரஜினி ஸ்டைல்' என்று முதலில் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் மகேந்திரன் தான். எனது பிறந்த நாளின்போது தனிமையில் இருப்பதையே நான் ஆசைப்படுகிறேன். இந்த முறை என்னை பார்க்க பலர் என் இல்லத்திற்கு வந்தீர்கள் என்று தெரிந்துக் கொண்டேன். உங்களுக்கு ஏமாற்றம் அளித்ததற்காக வருந்துகிறேன்."

"எனது அரசியல் பிரவேசம் பற்றி மக்களை விட ஊடகங்கள் தான் அதிக ஆர்வத்தில் இருக்கின்றன. அரசியல் எனக்கு புதிது அல்ல, அரசியல் பற்றி தெரிந்ததால் தான் அதிலிருந்து நான் ஒதுங்கி இருந்தேன். போர் (அரசியலில்) வெற்றி பெருவதற்கு வீரம் மட்டும் போதாது, வியூகமும் வேண்டும். கட்டுப்பாடும், ஒழுக்கமும் மிக அவசியம்" என்று ரஜினி பேசினார். 

"ஊடகங்கள் சமூக வலைதளங்களில் வரும் எதிர்மறை விமர்சனங்களை மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள். குடும்பத்தின் மீது அக்கறை காட்டுங்கள்" என்றும் ரசிகர்களுக்கு ரஜினி அறிவுரை சொன்னார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS