எழுத்தாளர் ஞாநி மரணம்: உடல் தானமாக வழங்கப்படுகிறது! 

தமிழகம்
Typography

சென்னை, ஜன.15- மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஞாநி சங்கரன் (வயது 63) உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார். எழுத்தாளர், பத்திரிகையாளர், நாடக ஆசிரியர் என்ற பன்முகதன்மை கொண்டவாரான இவரின் மறைவு, பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

கடந்த சில மாதங்களாக சிறுநீரக நோயால் அவதியுற்று வந்த ஞாநி, வாரத்திற்கு 3 முறை 'டயாலீசிஸ்' சிகிச்சையைப் பெற்று வந்தார். இன்று அதிகாலை வீட்டில் இருந்த ஞாநிக்கு, திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு, சற்று நேரத்தில் அவரின் உயிர் பிரிந்தது. 

அவரது உடல் கே.கே.நகரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அரசியல் தலைவர்களும், கட்சி பிரமுகர்களும், பத்திரிகையாளர்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். 

1980-களின் இறுதியில் போபர்ஸ் பீரங்கி ஊழல் நாட்டையே உலுக்கிய போது முரசொலியில் புதையல் எனும் பகுதியில் அது தொடர்பான தகவல்களை ஞாநி விரிவாக எழுதி, பிரபலமடைந்தார். அதனைத் தொடர்ந்து, தொலைக்காட்சி விவாதங்களிலும் அவர் பங்கேற்றார். 

கடந்த 2014-ம் ஆண்டு அவர் அரவிந்த் கெஜ்ரிவாலால் ஈர்க்கப்பட்டு ஆம்-ஆத்மி கட்சியில் சேர்ந்தார். அந்த கட்சி சார்பில் 2014-ம் ஆண்டு ஆலந்தூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றதைத் தொடர்ந்து, அவர் அரசியலை விட்டு அவர் விலகினார். 

இச்சமயத்தில்தான் அவருக்கு சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டார். ஞாநிக்கு பத்மா என்ற மனைவியும், மனுஷ் நந்தன் என்ற மகனும் உள்ளனர்.  

மறைந்த ஞாநியின் உடலுக்கு இன்று இறுதி சடங்கு நடைபெறுகிறது. அதன் பின்னர், அவரின் உடல் சென்னை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்படுகிறது. 

மறைந்த எழுத்தாளர் ஞாநி உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் இறுதி அஞ்சலி செலுத்தினார்.  தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS