பிப். 21-ஆம் தேதி; நானும் கட்சியைத் தொடங்குவேன்! -கமல் அறிவிப்பு 

தமிழகம்
Typography

ஜன.17- எதிர்வரும் பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதியன்று, தனது கட்சியின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்து, அதன் பின்னர், தமிழகம் முழுவதும் தாம் சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாக நடிகர் கமல்ஹாசன் அறிக்கை ஒன்றின் வாயிலாக தகவல் வெளியிட்டுள்ளார்.  

தமிழக அரசியலில் களமிறங்க திட்டமிட்டுள்ள கமல்ஹாசன், தமது கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிடாமல் இருந்தார். இதனிடையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர், தாம் கட்சியைத் தொடங்க விருப்பதாக தனது ரசிகர்களுடனான கூட்டத்தில் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, கமல்ஹாசனும் புதியக் கட்சி தொடர்பான அறிக்கை விடுத்திருப்பது, தமிழக மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

"என்னை வளர்த்தெடுத்த சமூகத்துக்கு எனது நன்றியை இங்கு தெரிவிக்கிறேன். சொல்லில் சொன்ன நன்றியைத் தாண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன. அக்கடமைகளின் துவக்கமாக என் மக்களை நேரில் சந்திக்க, நான் பயணம் ஒன்றை மேற்கொள்ளவிருக்கிறேன். நான் பிறந்த ராமநாதபுரத்தில் இருந்து எதிர்வரும் பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதியன்று நான் இந்த பயணத்தை துவக்க இருக்கிறேன்" என்று கமல்ஹாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

"முதற்கட்டமாக மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட மக்களை சந்திக்க நான் திட்டமிட்டுள்ளேன். மக்களுடனான இந்தச் சந்திப்பு புரட்சி முழக்கமோ, கவர்ச்சிக் கழகமோ அல்ல. இது என் புரிதல். எனக்கான கல்வி" 

"இது என் நாடு, இதை நான் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு மட்டும் இருந்தால் போதாது. இங்கு தலைவன் என்பவன் வழி நடத்த மட்டுமின்றி பின்பற்றவும் தயாராக இருக்க வேண்டும். தலைவனிடத்தில் ஒரு தலைமைப் பொறுப்பு இருக்க வேண்டும், நாமெல்லாம் சேர்ந்து இந்தத் தேரை இழுக்கிறோம் என்ற எண்ணம் வேண்டும். அதுவே ஜனநாயகம் அந்த நாயகர்களைச் சந்திக்கத்தான் நான் சென்றுகொண்டிருக்கிறேன்." 

"இது ஆட்சியைப் பிடிக்கும் திட்டமா என்று சிலர் கேட்பார்கள். ஆட்சியை ஒரு தனி ஆள் பிடிக்க முடியுமா? யாரின் ஆட்சி, யாரின் அரசு? இது குடியின் அரசு. முதலில் அவர்களை உயர்த்த வேண்டும். அதற்கான கடமைகளை நினைவுபடுத்த வேண்டும். அதை நோக்கிய பயணம்தான் இது. உங்களின் ஆதரவோடு இந்தப் பயணத்தை தொடங்குகிறேன். கரம் கோர்த்திடுங்கள். களத்தில் சந்திப்போம்." என்று நடிகர் கமல்ஹாசன் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS