'மக்களுக்காக என்  இசைப் பணியைத் தொடர்வேன்! - இளையராஜா

தமிழகம்
Typography

சென்னை, பிப் 8: "ஆண்டவனின் அருளாலும், உங்கள் அன்பாலும் மக்களுக்காக என் பணியை செவ்வனே செய்து கொண்டே இருப்பேன்" என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார். 

இளையராஜாவுக்கு அண்மையில் 'பத்மவிபூஷன்' விருது அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் மிக உயர்ந்த இரண்டாவது சிவிலியன் விருது இது. இதைத் தொடர்ந்து திரையுலகம், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.  இதற்காக நன்றி தெரிவித்து இளையராஜா விடுத்துள்ள அறிக்கை கூறியிருப்பதாவது: 

-எனக்கு பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்ட நிமிடத்தில் இருந்து, இன்று வரை, என்னை நேரிலும், தொலைபேசி வாயிலாகவும், மனப்பூர்வமாகவும் வாழ்த்து தெரிவித்த, உலகெங்கிலும் பரவி இருக்கும் இசை ரசிகர்கள், அரசியல் பிரமுகர்கள், திரைத்துறையினர், தொழில்துறையினர், செய்தித்துறை அன்பர்கள் அனைவருக்கும் நன்றி. விருது அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை நூற்றுக்கணக்கானவர்கள் தினமும் என்னை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். 

இந்த வாழ்த்தும், உங்களின் அன்பும் எனக்கு மேன்மேலும் உத்வேகத்தை தந்துள்ளது. என்னை நெகிழ வைத்துள்ளது.  ஆண்டவனின் அருளாலும், உங்கள் அன்பாலும்... மக்களுக்காக என் பணியை செவ்வனே செய்து கொண்டு இருப்பேன். அன்பெனும் மழையில் நனைய வைத்த உங்கள் அனைவருக்கும் மீண்டும் மனப்பூர்வமான நன்றி. -இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS