ரஜினி, கமலை நம்பாதீர்கள் என்பதா? சத்யராஜ் பேச்சுக்கு பார்த்திபன் பதிலடி!

தமிழகம்
Typography

சென்னை, பிப்.19- அரசியலுக்கு வந்துள்ள நடிகர்கள் ரஜினி, கமல் ஆகிய இருவரையும் மக்கள் நம்ப வேண்டாம் என்று நடிகர் சத்யராஜ் பேசியதற்கு பார்த்திபன் பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் நடந்த விழாவில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும் போது நடிகர்கள் அரசியலுக்கு வருவது அன்றாட செய்தியாகிவிட்டது. பிரபல நடிகர்கள் என்பதால் அவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள் என்று மக்கள் நம்பிவிட வேண்டாம். அவ்வாறு நினைப்பது தவறு. அவர்களை யாரும் நம்ப வேண்டாம் என்று கூறினார்.

சத்யராஜின் பேச்சுக்கு பதிலடி கொடுத்து நடிகர் பார்த்திபன் பேட்டி அளித்துள்ளார்.அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னையில் ரஜினியும், கமலும் நேரில் சந்தித்துப் பேசி இருப்பது அவர்களின் ஆரோக்கிய அரசியலைக் காட்டுகிறது. அவர்களைச் சினிமாக்காரர்கள் என்று யாரும் எண்ணி ஒதுக்கி விடக்கூடாது.

அவர்கள் நடித்து சம்பாதித்து சேர்த்த பணம் எல்லாம் மக்கள் கொடுத்தது. அந்த பணத்தை வைத்து மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கிறார்கள். இதனால் அவர்கள் அரசியலுக்கு வந்துள்ளார்கள்.

அவர்களை நம்பலாம். அதற்காக இவருக்கு ஓட்டு போடுங்கள் என்று நான் சொல்லமாட்டேன். நான் யாருக்கு ஆதரவு எனவும் இப்போது சொல்ல மாட்டேன். தேர்தல் வரும் சமயத்தில் அதை தெரிவிப்பேன்.

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் மக்கள் பிரச்சனையைச் சந்தித்து கொண்டே இருக்கிறார்கள். தமிழகத்துக்கு உண்டான காவிரி தண்ணீரை குறைத்து விட்டார்கள். மனிதாபிமானத்தோடு தமிழகத்துக்குத் தண்ணீர் தாருங்கள். 

தமிழ்நாட்டில் கொலை- கொள்ளை அதிகரித்து கொண்டே வருகிறது. இதை தடுக்க வேண்டும். தமிழக மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்காத அரசியல் கட்சியினர் அரசியல் நடத்தி வருவது எதற்கு? இவ்வாறு நடிகர் பார்த்திபன் கூறினார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS