கமல்ஹாசனை சந்தித்தது ஏன்? கூட்டணியா?- சீமான் விளக்கம்!

தமிழகம்
Typography

 சென்னை, பிப்.20 :- நாளை புதிய அரசியல் கட்சியைத் தொடங்கவிருக்கும் நடிகர்  கமல்ஹாசனை நான் ஏன்  சந்தித்தேன் என்று 'நாம் தமிழர்' கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். ஆழ்வார்பேட்டை இல்லத்தில், நடிகர் கமல்ஹாசனை சீமான் இன்று சந்தித்தார். 

பிறகு நிருபர்களிடம் அவர் கூறுகையில், தமிழகத்தில் மிக மோசமான சூழ்நிலைக்கு ஆட்சி போய்க்கொண்டுள்ளது. எப்படியாவது ஒரு மாற்றம் ஏற்பட்டுவிடாதா? என்று நினைத்து எங்களால் முடிந்ததை செய்து வருகிறோம். இந்த மண்ணின் மக்களால் நேசிக்கப்படும் அண்ணன், கமல்ஹாசனும் 21ஆம் தேதி கட்சி துவங்குவதாக அறிவித்தார்.

நான் நேசித்து வளர்ந்த ஒரு கலைஞர் என்பதால் அவர் என்னை வந்து பார்ப்பது சரியாக இருக்காது எனக் கருதி நாங்கள் தேடி வந்தோம். அவரது அரசியல் பயணம் புரட்சிகர, வெற்றிகர அரசியல் பயணமாக இருக்க வேண்டும் என்பதலென் வாழ்த்து. ஒரு நல்ல தொடக்கம் பாதி வெற்றிக்கு சமம், என்று சீமான் சொன்னார்.

'ரஜினிகாந்த் அரசியல் பிரவேசத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தீர்களே,கமலை வாழ்த்துகிறீர்களே' என்ற நிருபர்கள் கேள்விக்கு இது எங்கள் மண்,  இங்கே நெசவாளர் பிரச்சனை என்ன, பேருந்து ஓட்டுனர் பிரச்சனை என்ன என்பதெல்லாம்  தெரியும் போதுதான் அதை சரி செய்ய முடியும், அதனால்தான் நாங்கள் சொல்கிறோம், நீங்கள் இருங்க, நாங்கள்  பார்த்துக் கொள்கிறோம் என்கிறோம். 

ஊழல் மட்டுமே பிரச்சினை கிடையாது. பல்வேறு பிரச்சினைகள் தமிழகத்தில் உள்ளன. ஓட்டுக்கு காசு கொடுக்கும் நிலை இருக்கும்வரை ஊழல் இருக்கத்தான் செய்யும். ஓட்டுக்கு காசு கொடுப்பவன் பாவி, அதை வாங்கி ஓட்டுப் போடுபவன் தேசத் துரோகி என்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கூறியுள்ளார். 

அரசியல் என்பது யாரோ ஒருவர்  செய்வது என்று நினைக்கிறீர்கள். ஒவ்வொரு வார்த்தையிலும் அரசியல் உள்ளது. ஒரு மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை அதை தீர்மானிப்பது அரசியல். அந்த அரசியலைவிட்டு விலகி நின்று என்ன செய்ய முடியும்? அரசியலில் மாற்றம் கொண்டு வர கமல் கட்சி தொடங்குகிறார். கமல் என்னை பார்க்க வருவதாக கூறினார். பண்பாட்டு ரீதியாக, கமல் என்னை பார்க்க வருவது சரியாக இருக்காது என்பதால் நானே சந்திக்க வந்தேன்.

நான் இப்போது வாழ்த்து தெரிவிக்கவே வந்தேன். கூட்டணி குறித்தெல்லாம் காலம்தான் முடிவு செய்யும். நீங்கள் ஆசைப்பட்டால் கூட்டணியும் வைப்போம். இவ்வாறு சீமான் தெரிவித்தார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS