தேனி காட்டுத் தீ: சிகிச்சை பெற்ற நிஷா, திவ்யா மரணம்; பலி எண்ணிக்கை 11-ஆக உயர்வு!

தமிழகம்
Typography

சென்னை, மார்ச் 13- தேனி மாவட்டத்தில் உள்ள குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட கோரக் காட்டுத் தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தின் தேனி பகுதியிலுள்ள குரங்கணி மலைப் பகுதியில், மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டிருந்த கல்லூரி மாணவிகள் உள்பட பலர்  காட்டுத் தீயில் சிக்கியதில் 9 பேர் உயிரிழந்தனர். மாணவிகளின் இந்த உயிரிழப்புத் துயரத்தில் தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த மாணவிகளின் குழுவில் பயிற்சிக்கு துணையாக சில பயிற்சியாளர்களும் சென்றிருந்தனர். மேலும் இந்தக் காட்டுத் தீயில் பொதுமக்களில் சிலரும் சிக்கிக் கொள்ள நேர்ந்ததாக மீட்புப்படையினர் கூறினர். 

அவர்களில் சென்னையை சேர்ந்த அகிலா, பிரேமலதா, புனிதா, சுபா, அருண், விபின் ஆகிய 6 பேரும், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விஜயா, விவேக், தமிழ்ச் செல்வி ஆகிய 3 பேரும் மொத்தம் சேர்த்து 9 பேர் வரை உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் குரங்கணியிலிருந்து மீட்கப்பட்டவர்களில் சென்னை வேளச்சேரியை சேர்ந்த நிஷா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். மேலும் தீக்காயம் அடைந்து உயிருக்கு போராடிய ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த திவ்யாவும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

இதனால் குரங்கணி மலை பகுதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்தது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS