தமிழ் உணர்வாளர் ம. நடராஜன்: திருமாவளவன் அஞ்சலி!

தமிழகம்
Typography

சென்னை, மார்ச். 20- இன்று அதிகாலை உயிர்நீத்த   சசிகலாவின் கணவர் நடராஜனின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை பெசன்ட் நகரில் அவரது  இல்லத்தில் வைக்கப்பட்டது. பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின் அவரது உடல் சொந்த ஊரான விளாருக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படவுள்ளது. 

சென்னை மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலா  கணவர் ம. நடராஜன் (வயது 75) சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார்.  கணவரின் இறுதிச் சடங்கில்  பங்கேற்க சசிகலா பரோலில் வருகிறார்.

தஞ்சாவூர் மாவட்டம் விளாரில் 1942-ஆம் ஆண்டு பிறந்தவர் நடராஜன். இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் அரசியலுக்கு வந்தவர் நடராஜன். பின்னர் அரசு மக்கள் செய்தித் தொடர்புத் துறை அதிகாரியாக பணியாற்றினார். 

1975ஆம் ஆண்டு சசிகலாவை திருமணம் செய்து கொண்டார். இத்திருமணத்தை திமுக தலைவர் கருணாநிதி நடத்தி வைத்தார். பின் 1980களில் ஜெயலலிதாவுடன் நட்பு ஏற்பட்ட நிலையில் அவருக்கு பின்புலமாக, ஒரு கட்டத்தில் ஆலோசகராகவும் இருந்து வந்தார் நடராஜன்.

ஊடகங்களில் பரபரப்புச் செய்திகளுக்கு அடிக்கடி தீனியளித்தவர். தமிழகத்தில் மட்டுமின்றி அகில இந்திய அளவிலும் கவனிக்கப்பட்டவர் நடராஜன் என்று தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் மட்டுமின்றி அகில இந்திய அளவிலும் கவனிக்கப்பட்டவர் நடராஜன் என்று தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.  நடராஜன் மரணம் தமிழ்த்தேசிய அரசியல் களத்திற்கு நேரந்த பேரிழப்பு என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடராஜன் மரணத்திற்கு தொல். திருமாவளவன் விடுத்துள்ள இரங்கல் செய்தி:  தீவிரத் தமிழ்த்தேசிய உணர்வாளரும் தஞ்சையில் "முள்ளிவாய்க்கால் முற்றம்" அமைத்த தமிழீழ விடுதலை ஆதரவாளருமான  ம. நடராசன் இன்று  காலமானார் என்ற தகவல் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

அவரது இழப்பு என்பது மொழி, இன உரிமைகள் மற்றும் ஈழ விடுதலை ஆகியவற்றுக்கான அரசியல் களத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும்.  அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் தமிழின உணர்வாளர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS