புதுடில்லி, ஏப்ரல் 23- சர்ச்சைக்குரிய வகையில் பேச வேண்டாம் பாஜகவின் நற்பெயருக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும் என்று பாஜகவினரை பிரதமர் நரேந்திர மோடி கண்டித்துள்ளார்.
தலித் பிரச்சினை, பாலியல் பலாத்காரம் உள்பட பல்வேறு விவகாரங்களை முன் வைத்தும் பாஜக தலைவர்களின் சர்ச்சைக்குரிய பேச்சுகளை முற்றிலும் சாடியும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்த தொடங்கி uள்ளதை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
நாடு முழுவதும் உள்ள பாஜக. எம்பி, எம்எல்ஏக்களுடன் பிரதமர் மோடி தனது செயலி மூலம் நேற்று இது குறித்து பேசினார்.
நாம் தவறு செய்து வருகிறோம். ஊடகங்களுக்கு 'மசாலா' செய்தி அளித்து வருகிறோம். பிரச்சினைகளை அலசி ஆராய்வதில் நீங்கள் நிபுணர்களாகவும் சிறந்த சமூக விஞ்ஞானிகளாகவும் இருக்கலாம்.
ஆனால் வீடியோ கேமராவை பார்த்ததும் நீங்கள் பேசத் தொடங்கி விடுகிறீர்கள். அப்போது தான் இந்த அரைவேக்காடு கருத்துகளை வெளியிடுகிறீர்கள்.
பொறுப்பற்ற வகையில் நீங்கள் தெரிவிக்கும் கருத்துகள் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஆதலால் கட்சியில் இருக்கும் அப்பிரச்சினை குறித்து கருத்து தெரிவிப்பதை கைவிட வேண்டும்.
கட்சியில் கருத்துகள் வெளியிடும் பொறுப்புகளில் உள்ளவர்கள் மட்டுமே கருத்து வெளியிடலாம். காங்கிரஸ் கட்சி செய்த தவறுகளினால் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வரவில்லை.
மக்களுடன் தொடர்ந்து வைத்திருந்த தொடர்புகளால் தான் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வர முடிந்தது. மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு மக்கள் பிரதிநிதிகளாகிய நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென மோடி ஆலோசனை கூறியுள்ளார்.