திலீப் கைது: பாகுபாடின்றி குற்றவாளி  தண்டிக்கப்பட வேண்டும்! - பாவனா 

பிற மாநிலங்கள்
Typography

 

 திருவனந்தபுரம், ஜூலை.14- தாம் கடத்தப்பட்ட வழக்கு தொடர்பில் நடிகர் திலீப் கைதான விவகாரம் குறித்து நடிகை பாவனா கூறும்போது, சட்டத்தின் முன் அனைவரும் சமம். இந்த வழக்கில் திலீப் குறித்த உண்மைகள் விரைவில் வெளிவரவேண்டும் மற்றும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

பாவனாவை கடத்தி பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதான ரவுடி பல்சர் சுனிலுக்கும் நடிகர் திலீப்புக்கும் இடையே, ஏற்கனவே இருந்த தொடர்பு குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகி கேரள மாநிலத்தையே அதிரவைத்துள்ளது.

இந்நிலையில் நடிகை பாவனா, நடிகர் திலீப் கைது குறித்தும் வழக்கு குறித்தும் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிப்பதாவது:

கடந்த சில தினங்களாக இந்த வழக்கில் வெளியிடப்பட்டு வரும் விவரங்களை பார்த்து, உங்களைப் போலவே நானும் அதிர்ச்சி அடைந்தேன். அந்த நடிகருடன் கடந்த காலங்களில் சில படங்களில் நான் இணைந்து நடித்து இருக்கிறேன். 

ஆனால், தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக எங்களுக்கு இடையேயான நட்பு பாதிக்கப்பட்டது. தனிப்பட்ட காரணங்களுக்கான இந்த வழக்கில் நான் யாரையும் குற்றவாளியாக்க விரும்பவில்லை. அவருக்கு எதிராக அனைத்து ஆதாரங்களும் இருப்பதாக நான் ஊடகங்கள் வாயிலாகவே தெரிந்து கொண்டேன். 

அவரது சகோதரர் ‘அனுப்’ கூறியது போல அவர் குற்றமற்றவர், இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டு இருக்கிறார் என்றால் உண்மை விரைவாக வெளி வரவேண்டும். அப்படி இல்லையென்றால் அவரது தவறுகள் விரைவில் வெளியே வரவேண்டும் என விரும்புகிறேன்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம். குற்றவாளிகள்  யாரும் தப்பித்துவிடக் கூடாது. அந்தக் குறிப்பிட்ட நடிகருடன், நான் ‘ரியல் எஸ்டேட்’ மற்றும் பிற முதலீடுகளில் கூட்டு வைத்திருப்பதாக சில தகவல்கள் வருகின்றன. அவை அனைத்தும் பொய்யாகும். அத்தகைய உண்மையற்ற செய்திகள் விரைவில் மறைந்துவிடும் என நினைத்தேன். ஆனால், அவை மீண்டும் மீண்டும் ஊடகங்களில் வருகின்றன. 

அதனால்தான் அதுபற்றி நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். வேண்டுமென்றால், தேவைப்படும் எல்லா ஆவணங்களையும் விசாரணை அதிகாரிகளிடம் வழங்கவும் தயாராக உள்ளேன். இவ்வாறு நடிகை பாவனா அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS