அசாமில் வெள்ளபெருக்கு: 85 பேர் பலி! மிருகக்காட்சி சாலை மூழ்கியது!

பிற மாநிலங்கள்
Typography

திஸ்பூர், ஜூலை.14- இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது. மிருகக்காட்சி சாலையில் வெள்ளம் புகுந்ததால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அசாம், அருணாச்சலப்பிரதேசத்தில் பெய்து வரும் வரலாறு காணாத மழையால், பிரம்மபுத்ரா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகள் முழுவதுமாக தண்ணிரில் மூழ்கியுள்ளதால் மக்கள் தங்கள் உடமைகளை முழுவதுமாக இழந்துள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 85 பேர் என கணக்கிடப்பட்டுள்ளது. எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் தெரியவந்துள்ளது. இதனிடையே ‘காசிரங்கா’ தேசிய பூங்காவில் சிக்கித் தவிக்கும் வன விலங்குகளை மீட்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது.

அரியவகை ‘ஒற்றைகொம்பு காண்டாமிருகங்கள்’ இங்கு மட்டுமே பாதுகாக்கப்பட்டு வந்த நிலையில், அவற்றின் நிலை என்ன என்பது தெரியவில்லை. சில மிருகங்கள் மட்டுமே இதுவரை காப்பாற்றப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. பூங்கா முழுவதும் தண்ணிர் சூழ்ந்துள்ளதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்படுவதாக அதிகாரிகள் கூறினர். வெள்ளத்தின் காரணமாக ‘டெங்கு’ உள்ளிட்ட நோய்களும் வேகமாக பரவுவதால் உயிரிழப்புமேலும் அதிகரித்து வருகின்றது. 

இந்நிலையில் அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் மாநிலங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரஜ்ஜூ ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். மேலும் வெள்ள நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS