தெருவில் பிச்சை எடுத்தவர் இன்று நீதிபதியானார்: திருநங்கையின் சாதனை

பிற மாநிலங்கள்
Typography

கொல்கத்தா, ஜூலை.14- பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்த திருநங்கை ஒருவர் இன்று ‘லோக் அதாலத் நீதிபதி’யாக நியமிக்கப்பட்டிருக்கிறார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் ‘ஜோயிதா’, இவர் பள்ளியில் நன்றாக படிக்கும் மாணவியாக இருந்துள்ளார். 

காலப்போக்கில் இவரது உடல் அமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டதால், இவரை சக மாணவ, மாணவிகள் கல்லூரியில் கேலி செய்துள்ளனர். இதனால் இவர் தனது கல்லூரி படிப்பை பாதியிலே நிறுத்தி விட்டார்.

திருநங்கை என்று தெரிந்தவுடன் பெற்றோரும், அவமானம் காரணமாக  அவரை வீட்டை விட்டு துரத்திவிட்ட நிலையில், கொல்கத்தாவில் உள்ள ஒரு கால் சென்டரில் வேலை செய்தார். அங்கும் இவரை கேலி செய்து புறக்கணித்ததால், அங்கிருந்தும் வெளியேறினார்.

அதன் பின் பல்வேறு இடங்களுக்கு சென்று வேலை கேட்ட போதும் திருநங்கை என்பதால், வேலை மறுக்கப்பட்டது. வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஜோயிதா, தெருவில் மற்றவர்களிடம் கையேந்தி பிச்சை எடுக்கும்  நிலைக்கு ஆளானார்.

இந்நிலையில், தினாஜ்பூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு அருகே உள்ள பேருந்து நிலையத்தில் தங்கி இருந்தபோது, ஒருநாள் ஒரு சமூக சேவகரின் அறிமுகம் கிடைத்தது. இவரின் நிலையை அறிந்த அவர், இவரையும் மக்களுக்கு உதவும் ஒரு  சமூக சேவகராக மாறினார். அதன் பின்னர் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட திருநங்கைகளுக்காக குரல் கொடுக்க ஆரம்பித்தார்.

அதுமட்டுமின்றி ‘எல்.ஜி.பி.டி.’ எனப்படும் மாற்றுப் பாலினம் கொண்டவர்களுக்காக ‘அமைப்பு’ ஒன்றை துவங்கினார். இந்த அமைப்பின் மூலம் அரசாங்கத்திலிருந்து மாற்றுப்பாலினத்தவர்களுக்கு கிடைக்க வேண்டிய தேவைகளை நிறைவேற்றினார். பாலியல் தொழிலாளிகளாக இருந்து தற்போது எந்தவித ஆதரவும் இல்லாதவர்களுக்கான முதியோர் இல்லத்தையும் உருவாக்கி உள்ளார்.

அவருடைய இந்த சமூக பணிகளுக்காக தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ‘லோக் அதாலத்’ நீதிமன்றத்தில் நீதிபதி’யாக நியமிக்கப்பட்டிருக்கிறார். நாட்டிலேயே திருநங்கை ஒருவர் இப்பணியில் அமர்த்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.

BLOG COMMENTS POWERED BY DISQUS