இரயில் தடம் புரண்டது! 25 பேர் படுகாயம்!

பிற மாநிலங்கள்
Typography

புதுடில்லி, மார்ச்.31- இந்தியாவில் மத்தியப் பிரதேசத்திலிருந்து புதுடில்லிக்குப் பயணித்துக் கொண்டிருந்த இரயிலில் பின்பகுதியில் உள்ள எட்டு பெட்டிகள் திடீரென தடம் புரண்டன. இச்சம்பவத்தில் 25 பேர் படுகாயம் அடைந்தனர். ‘மகாகோஷல் எக்ஸ்பிரெஸ்’ எனும் அந்த இரயில் நேற்று அதிகாலை 2 மணியளவில், உத்தரப் பிரதேசத்தைக் கடக்கும்போது இச்சம்பவம் நிகழ்ந்தது.

தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு மீட்புப் பணிக் குழு விரைந்தது. காயம் அடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். கவிழ்ந்த ரயில் பாகங்களை அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் இது விபத்தா அல்லது திட்டமிட்ட சதியா என்று ஆராய்ந்து வருவதாக இரயில்வே துறையின் பிரதிநிதி அணில் சக்ஸேனா கூறினார்.

அந்த இரயிலோடு இருந்த தடம் புரண்ட பெட்டிகளின் இணைப்பைத் துண்டித்துவிட்டு, அந்த இரயில் புதுடில்லியில் உள்ள நிசாமுடீன் இரயில் நிலையத்திற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. 

இந்தியாவில் வெள்ளைக்காரர்கள் ஆட்சி செய்தபோது கட்டிய இரயில் தண்டவாளங்கள் பழுதுடைந்தும் மாற்றப்படாமலும் இன்னும் உபயோகத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. பயண சேவையின் டிக்கெட் விலைகளை அதிகரிக்காமல் இருக்க இதுபோன்ற பழுதுபார்க்கும் செலவுகளை அந்த இரயில்வே துறை தவிர்த்து வருகிறது என்றும் தெரிய வருகிறது. 

புள்ளிவிவரப்படி, இந்தியாவில் ஒரு நாளில் சுமார் 2 கோடியே 30 லட்சம் மக்கள் இந்த இரயில் சேவையை பயன்படுத்திகின்றனர் ஆனால் அரசாங்கத்தின் அலட்சியப் போக்கினால் இதுபோன்ற இரயில் விபத்துக்கள் நிகழ்ந்த வண்ணமாகவே உள்ளன என்று பலர் சாடுகின்றனர். 

கடந்த வருடம் உத்தர பிரதேசத்தில் இரயில் கவிழ்ந்ததில் 150 பயணிகள் உயிரிழந்தனர். கடந்த 2014ஆம் ஆண்டில்தான் இந்தியாவில் அதிகளவில் இரயில் விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டது என்று புள்ளிவிவரம் பதிவாகியுள்ளது. சுமார் 27 ஆயிரத்து 581 பேர் அந்த வருடம் இரயில் விபத்தில் பரிதாபமாக பலியாயினர்.

இதுபோன்ற கோர விபத்துக்களைத் தவிர்க்க தக்க நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று பலர் சமூக வலைத்தளங்களில் கருத்துப் பகிர்ந்து வருகின்றனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS