மும்பை, செப்.20- நூறு கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் பணக்காரரரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு இந்தியாவின் முதல்நிலை கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியிடம் ஆலோசனை கேட்ட இளம் பெண்ணுக்கு அவர் 'படார்' பதிலளித்து அசுர வைத்தார்.

பணக்காரர்களை மட்டுமே திருமணம் செய்து கொள்ள விரும்பும் பெண்களுக்கு அவர் அளித்த பதில் ஓர் அதிர்ச்சி தரும் ஆலோசனையாக அமைந்தது.

பூஜா என்ற இளம்பெண், ”பணக்கார ஆண்மகனை திருமணம் செய்து கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று இணையத் தளத்தில் கேள்வி எழுப்பினார். 

மேலும், ”என் வயது 25. நான் பார்க்க மிகவும் அழகாக இருப்பேன். ஸ்டைல் மற்றும் நல்ல ரசனை உள்ள பெண். நான் வருடத்திற்கு நூறு கோடிக்கு மேல் சம்பாதிக்கும் ஆண்மகனை திருமணம் செய்துக் கொள்ள விரும்புகிறேன். அதற்கு என்ன செய்ய வேண்டும்?.” என்று அவர் கேட்டார்.

இந்தப்  பதிவை பார்த்த முகேஷ் அம்பானி அப்பெண்ணிற்கு பதில் இதுதான்:

“உங்களை போல பல பெண்கள் இந்த சந்தேகத்துடன் உலாவி வருகிறார்கள். ஒரு முதலீட்டாளராக உங்கள் இந்த சந்தேகத்திற்கு, ஒரு நல்ல தீர்வைத் தர நான் விரும்பிகிறேன். 

எனது வருட சம்பாத்தியமும் நூறு கோடிக்கு மேலானது தான். ஆனால், உங்களை போன்ற ஒரு பெண்ணைத் தேர்வு செய்வது, எனது பார்வையில் தவறு என்று தான் நான் கருதுவேன். காரணம், அழகு என்பதை பெண்ணாகவும், பணம் என்பதை ஆணாகவும் வைத்துக் கொண்டால். இங்கு ஒரு பெரிய பிரச்சனை எழும். 

அழகு வருடத்திற்கு வருடம் குறைந்துக் கொண்டே போகும். பணம் என்பது வருடத்திற்கு, வருடம் உயர்ந்துக் கொண்டே போகும். பொருளாதார பார்வையில் இதை கண்டால், பணம் எனும் ஆண் (நான்) அதிகரிக்கும் சொத்து, அழகு எனும் பெண் (பூஜா) தேய்மானம் அடையும் சொத்து. 

சுமார் பத்து வருடம் கழித்து பார்க்கும் போது உங்களுக்கான மதிப்பு மிகவும் குறைந்திருக்கும். செழிப்படையும் ஒரு சொத்தை, தேய்மானம் அடையும் சொத்துடன் சேர்க்க எந்த முதலீட்டாளரும் முனையமாட்டார். 

வர்த்தக நிலையில் பார்க்கையில் நூறு கோடிக்கு மேல் சம்பாதிக்கும் எந்தவொரு நபரும் உங்களுடன் 'டேட்டிங்' செய்வாரே தவிர, திருமணம் செய்துக் கொள்ள மாட்டார்.

எனவே, உங்கள் அழகு தோற்றத்தையும், நூறு கோடி சம்பாதிக்கும் ஆண்மகன் தான் வேண்டும் என்பதை மறந்து விட்டு நீங்கள் நூறு கோடி சம்பாதிக்கும் பெண்ணாக வளருங்கள்.” -இவ்வாறு அந்தப் பெண்ணுக்கு முகேஷ் அம்பானி ஆலோசனை கூறினார்.

டில்லி, செப்.16- கர்நாடக இசை கலைஞர் எம்எஸ் சுப்புலட்சுமியைச் சிறப்பிக்கும் வகையில் ரூ.100, ரூ.10 நாணயங்கள் வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடக சங்கீதத்தில் கொடி கட்டி பறந்தவர் எம்.எஸ் சுப்புலட்சுமி. 

இவர் ஆசியாவின் நோபல் பரிசு எனப்படும் ராமன் மகசசே விருது, இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். அவரது நூற்றாண்டு பிறந்த தினம் கடந்த செப் 14-இல் கொண்டாடப்பட்டது. இந்த விழா நிறைவடைவதையொட்டி அவரை கெளரவிக்கும் வகையில் அவர் முகம் பதித்த நாணயங்கள் வெளியிட கோரிக்கை விடப்பட்டது. 

இந்த கோரிக்கையை ஶ்ரீ சண்முகானந்தா பைன் ஆர்ட்ஸ் மற்றும் சங்கீத சபா வைத்தது. அதனையேற்ற மத்திய அரசு இன்று எம்.எஸ் சுப்புலட்சுமியின் முகம் படம் பதித்த ரூ.100, ரூ.10 நாணயங்கலை வெளியிடுகிறது. இதேபோல் எம்ஜிஆரின்  நூற்றாண்டு பிறந்த தினத்தையொட்டியும் அவரது உருவம் பதித்த நாணயங்களை வெளியிட தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.    

 

 

 கொச்சி, செப்.19- பிரபல நடிகையைக் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதாகியுள்ள பிரபல மலையாள நடிகர் திலீப்புக்கு நான்காவது முறையாக ஜாமின் மறுத்துள்ளது நீதிமன்றம். 

பிரபல நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவு செய்யப்பட்ட வழக்கில், நடிகர் திலீப் கடந்த ஜூலை 10-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். 

அலுவா கிளைச் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமின் மனுக்கள், கொச்சியில் உள்ள கேரள உயர் நீதிமன்றத்தில் 2 தடவையும், அங்கமாலி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒரு தடவையும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதையடுத்து, அங்கமாலி நீதிமன்றத்தில் நடிகர் திலீப் மீண்டும் ஜாமின் மனுத் தாக்கல் செய்தார். ஆனால், திலீப்பை ஜாமினில் விடுவித்தால், விசாரணை பாதிக்கப்படும் என்று போலீஸ் தரப்பு கூறியதையடுத்து, திலீப்பின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டது. அவரது நீதிமன்ற காவல், 28-ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது

 

திருவனந்தபுரம், செப்.19- இந்துக்களுக்கு மட்டுமே நுழைய அனுமதி வழங்கப்படும் கேரளாவின் பத்மநாப சுவாமி கோயிலுக்கு செல்ல கிறிஸ்துவரான பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாசுவிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக இசைக் கலைஞரும் பிரபல பின்னணி பாடகருமான கே.ஜே.ஜெசுதாஸ் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோயிலுக்குச் செல்ல அனுமதி கோரி நிர்வாகத்திடம் கடிதம் அனுப்பிருந்தார்.

பொதுவாக, பத்மநாப சுவாமிகள் கோயிலுக்குள் இந்துக்கள் மட்டுமே செல்ல அனுமதி உண்டு என்பதால் அவர் கடிதம் மூலமாக இந்த அனுமதியைக் கோரியிருந்தார். வரும் செப்டம்பர் 30ஆம் தேதி விஜயதசமி அன்று கோயிலுக்கு வர திட்டமிட்டிருப்பதாக அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில்,  கோயில் நிர்வாகம் கமிட்டி கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தி, யேசுதாசுக்கு கோயிலுக்கு வர அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை, செப்.1- மும்பையில் கடும் மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. அதில் சிக்கி 32 பேர் பலியாகினர்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பெண்டி பஜாரில் உள்ள 117 ஆண்டு பழமை வாய்ந்த 5 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. மும்பையில் மழை வெளுத்து வாங்கி வெள்ளக்காடான இரண்டு நாட்களில் இந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. 

இடிந்து விழுந்த 5 அடுக்குமாடி கட்டிடத்தில் 9 குடும்பங்கள் வசித்து வந்துள்ளன. மேலும் அந்த கட்டிடத்தில் ஒரு பாலர் பள்ளியும் செயல்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலத்த மழைக்கு நடுவே மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஆரம்பத்தில் 11 பேர் மட்டுமே பலியானதாக கூறப்பட்டது. ஆனால், இன்று அந்த எண்ணிக்கை அதிகரித்து 32 ஆக அறிவிக்கப்பட்டது.

கட்டிச விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி தனது ஆழந்த இரங்கலைத் தெரிவித்தார்.

ஜார்கண்ட், ஆக. 30 - பிரியா என்னும் 17 வயது சிறுமியும் கிருஷ்ண ராம் என்னும் இளைஞரும் ஒருவரை ஒருவர் காதலித்துள்ளனர். இந்நிலையில் அவர்களின் பழக்கம் நெருக்கமாகவே பிரியா கர்ப்பமாகியுள்ளார். இது குறித்து தனது காதலன் ராமிடம் தான் கர்ப்பமாக இருப்பதைக் கூறியுள்ளார். அதை அறிந்த ராம் அவரை சந்திப்பதை  தவிர்த்துவிட்டார். 

பிரியா கர்ப்பமாக இருப்பது அவருடைய குடும்பத்திற்கும் தெரியவந்துள்ளது. 17 வயது மகள் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருப்பது அக்கம் பக்கத்தினருக்கும் உறவினர்களுக்கும் தெரிந்தால் அவமானமாக இருக்கும் எனக் கருதியதால் குடும்பத்தினரும் பிரியாவை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டனர். இதனால் சுமார் 4 மாதங்கள் தங்க வீடு இன்றி பிரியா தெருவிலும் சாலையிலும் வசித்துள்ளார். 

பின்னர் நிறைமாத கர்ப்பிணியான பிரியா அருகில் இருக்கும் சுகாதார மையத்திற்குப் பிரசவத்திற்காக சென்றுள்ளார். ஆனால் அங்கு பணியாற்றிய ஊழியர்கள் பிரியாவைச் சுகாதார நிலையத்தில் அனுமதிக்க மறுத்தனர். இதனால் மீண்டும் தங்க இடமின்றி தவித்த பிரியா கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி அதிகாலை 5 மணியளவில் தெருவிலேயே குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். 

பின்னர் அந்த வழியாக சென்ற ஓம் பிரகாஷ் என்பவர் தொப்புள் கொடி கூட வெட்டப்படாமல் இருந்த தாயையும் குழந்தையையும் ஒரு ஆட்டோவில் ஏற்றி அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாயும் சேயும் நலமாக இருப்பதாக ஓம் பிரகாஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

புது டெல்லி, ஆக.30 – உலகளாவிய நிலையில் நடத்தப்பட்டு வரும் உபர், இந்தியாவிலுள்ள 4 லட்சத்து 50 ஆயிரம் உபர் டிரைவர்களுக்கு இலவச காப்புறுதி வழங்கப்படுகிறது. விபத்து காரணமாக இறப்பு, விபத்துகளினால் ஏற்படும் உடல் ஊனம் போன்ற காரணங்களுக்கு இலவச காப்புறுதி வழங்கப்படும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

சான் ஃபிரன்சிஸ்கோ ஆதரவு பெற்ற இந்த உபர் நிறுவனம், இந்தியாவில் உள்ள மற்றொரு இணையம் வழி போக்குவரத்து சேவையைச் செய்யும் ஓலாவுடன் போட்டியிடும் வகையில் தனது பணியை விரிவுபடுத்துவதுடன், சட்டப்பூர்வ பிரச்சனைகள் மற்றும் சமீபத்தில் ஏற்பட்ட கசப்பான முரண்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 

இவ்வாண்டு தொடக்கத்தில் இந்தியாவின் உபர் டிரைவர்களிடமிருந்து பல எதிர்புக்களைச் சந்தித்தது உபர் நிறுவனம். டிரைவர்களின் இலாபகரமான ஊக்கங்களை உபர் நிறுவனம் நிறுத்தி விட்டதால் அவர்கள் போராட்டத்தில் குதித்தனர். 

எனவே, இதனைச் சமாளிக்க ஐசிஐசிஐ லம்பார்ட் பொது காப்புறுதி செப்டம்பர் 1 முதல் கொடுக்கப்படுகிறது. மேலும், இறப்பு சம்பவத்திற்கு 5 லட்சமும் ரூபாயும் 50,000 ரூபாய் வெளிநோய் சிகிச்சைக்காகவும் இந்த காப்புறுதி வழங்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெங்களூர், ஆக.25- கார் விபத்தில் பலியான தொலைக்காட்சி நடிகர் ஜீவன் கன்னட 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் இந்த ஆண்டு கலந்துகொள்ள ஆசைப்பட்டாராம். 

 

கன்னடத் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த ரச்சனா, நடிகர் ஜீவன் ஆகியோர் பெங்களூர் அருகே நடந்த கார் விபத்தில் பரிதாபமாக பலியாகினர். இந்த விபத்தில் காயமடைந்த 5 நடிகர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நூறு படங்களுக்கு மேல் துணை நடிகராக நடித்த ஜீவன், இந்த ஆண்டு கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திட்டமிட்டாராம். இந்நிலையில் அவர் பலியாகிவிட்டார்.

கன்னடத் தொலைக்காட்சி தொடர்கள் மூலம் மிகவும் பிரபலமானவர் ரச்சனா. வியாழக்கிழமை மாலை ஷூட்டிங் இருந்ததால் புதன்கிழமை இரவே தனது நண்பர்களுடன் கோவிலுக்கு சென்றுள்ளார். 

படப்பிடிப்பைத் தவறக் கூடாது என்று இரவோடு இரவாக கோவிலுக்கு சென்ற வழியில் விபத்தில் சிக்கி பலியானார் ரச்சனா. விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

காரை ஓட்டியது ஜீவன் தான். தூக்கக் கலக்கத்தில் காரை சாலையோரம் நின்று கொண்டிருந்த கொள்கல லோரி மீது மோதியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஜீவனுக்கு பக்கத்தில் அமர்ந்திருக்கிறார் ரச்சனா.

ஜீவன், ரச்சனா பலியான சம்பவம் குறித்து அறிந்த திரையுலகினர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். ஜீவன் பல படங்களில் நடித்திருந்தாலும் அவரை விட ரச்சனா தான் மிகவும் பிரபலமாக இருந்துள்ளார்.

புதுடில்லி, ஆக.19- இந்தியாவில் மாறிவரும் பருவநிலை மாற்றத்தால் விவசாயம் மிக வேகமாக அழிந்து வருகிறது எனவும் அதனால் பல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் உண்டாவதாகவும் நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு, மத்திய வேளாண்மை துறை அறிக்கை சமர்ப்பித்துள்ளது. 

இந்தியாவில் மற்ற நாடுகளை விட பருவநிலையில் மிகப் பெரிய மாற்றம் உண்டாகி வருகிறது. குறிப்பாக, பருவநிலை மாற்றத்தால் பருவம் தப்பி மழை பெய்தல், அதீத கோடை வெயில், வறட்சி, வெள்ளம் என பல்வேறு பேரிடர்களும் உருவாகி வருகின்றன.

இந்நிலையில், மத்திய வேளாண்துறை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அளித்துள்ள அறிக்கையில் 2100-ஆம் ஆண்டுக்குள் விவசாய உற்பத்தி தற்போது உள்ளதை விட 40 விழுக்காடு குறைந்துவிடும் என கூறியுள்ளது.

தற்போது ஏற்படும் பருவநிலை மாற்றத்தால், பத்து பில்லியன் டாலர் நஷ்டம் உண்டாவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், பருவநிலை மாற்றத்தாலும் மாறிவரும் தொழில்நுட்பத்தை மெதுவாக உள்வாங்குவதால் விவசாயமே அழிந்துவிடும் நிலையும் அதனால் மிகப் பெரிய பஞ்சத்தை இந்தியா எதிர்கொள்ளவேண்டிய சூழல் உருவாகும் எனவும் எச்சரித்துள்ளது.

டெல்லியில் உள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழக விஞ்ஞானிகள் இது குறித்து கூறுகையில், இந்தியா விவசாயத்தில் இதேபோன்ற அணுகுமுறைக் கையாண்டால் தற்போது உணவு உற்பத்தியில் தன்னிறைவை அடைந்துள்ள நிலைக்கு ஆபத்து உண்டாகும். மேலும் பருவ நிலை மாற்றத்தினால் அதிகம் பாதிக்கப்படுவது இந்தியாதான் எனவும் கூறியுள்ளனர். 

பருவநிலை மாற்றத்தால் உருளை, சோயாபீன்ஸ், வேர்க்கடலை உள்ளிட்ட சில பயிர்களின் உற்பத்தி அதிகரிக்கும் என்றும், மற்ற பயிர்களின் உற்பத்தி மிக சரிவடையும் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது. 

பருவநிலை மாற்றத்தால் விவசாய விளைபொருட்களின் உற்பத்தி குறையும். அதேபோல் உறபத்தி குறைவைத் தொடர்ந்து அது அனைவருக்கும் எளிதில் கிடைப்பதும் சிரமமாகும். அதனால் வருமானம் அதிகம் இல்லாத ஏழைகள் அதிகமாக பாதிக்கப்படுவர் எனவும் அவ்வறிக்கை எச்சரிக்கிறது. 

 விஜயவாடா, ஆக.17 – இயக்குனர் சலபதி மற்றும் நடிகர் ஸ்ருஜன் ஆகிய இருவரும் ஓடும் காரில் தன்னை பலாத்காரம் செய்ததாக  இளம் தெலுங்கு நடிகை ஒருவர் விஜயவாடா போலீசில் புகார் செய்துள்ளார்.

அவர் தனது புகார் மனுவில் கூறியிருப்பதாவது: படப்பிடிப்புக்காக பீமாவரம் செல்ல வேண்டியிருந்தது. நான் ரயிலில் வருகிறேன் என்று கூறினேன். அதற்கு நடிகர் ஸ்ருஜன் மற்றும் இயக்குனர் சலபதி என்னை காரில் அழைத்துச் செல்வதாக கூறினார்கள். 

                                              #  நடிகர் ஸ்ருஜன்

காரில் சென்று கொண்டிருந்தபோது அவர்கள் என்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். இதை யாரிடமாவது கூறினால், உன் எதிர்காலமே காலி, பட வாய்ப்பே கிடைக்காமல் செய்துவிடுவோம் என்று மிரட்டினார்கள்.

                                                   # இயக்குனர் சலபதி

அவர்களிடம் இருந்து தப்பியோடினேன். பின்னர் நான் இருக்கும் இடத்தை வாட்ஸ் அப் மூலம் எனக்கு வேண்டிய நண்பர்களுக்குத் தெரிவித்தேன். அவர்கள் விரைந்து என்னை நேராக காவல் நிலையம் அழைத்து வந்தனர் என்று அதில் தெரிவித்துள்ளார்.

பின்னர் அந்த நடிகை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதோடு மருத்துவச் சோதனைகளும் செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்தச் சம்பவம் குறித்து இவர்கள் இருவருக்கும் எதிராக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இயக்குனரைத் தங்களுடைய காவலில் வைத்து விசாரித்து வருகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி, ஆக.6 - துணை அதிபர் தேர்தலில் 30 ஆண்டுக்குப் பின்னர் அதிக வாக்குகள் பெற்று சாதனை படைத்துள்ளார் வெங்கையா நாயுடு. துணை அதிபர் தேர்தலில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட வெங்கையா நாயுடு 516 வாக்குகளையும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிட்ட கோபாலகிருஷ்ண காந்தி 272 வாக்குகளையும் பெற்றனர். துணை அதிபர் தேர்தலில் 30 ஆண்டுக்குப் பின்னர் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார் வெங்கையா நாயுடு.

இத்தேர்தலில் 786 எம்பிக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்ற நிலையில் 771 பேர் அதாவது 98.21% வாக்குகள் பதிவாகின. 15 எம்.பி.க்கள் வாக்களிக்கவில்லை.

11 எம்.பி.க்களின் வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. வாக்களிக்காத 15 எம்.பி.க்களில் 3 பேர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்தவர்கள்.

முஸ்லிம் லீக் கட்சியின் 2 எம்.பி.க்கள், திரிணாமுல் காங்கிரஸின் 4 எம்.பி.க்கள், காங்கிரஸ் கட்சியின் 2 எம்.பி.க்கள், தேசியவாத கட்சி எம்.பி. ஒருவர் வாக்களிக்கவில்லை. 

பாஜகவின் விஜய் கோயல், சன்வர்லால் ஜாட் ஆகியோர் மருத்துவமனையில் இருந்ததால் வாக்களிக்கவில்லை. பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸும் தேர்தலில் வாக்களிக்கவில்லை. எதிர்க்கட்சிகளின் 20 எம்.பி.க்களும் வெங்கையா நாயுடுவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இத்தேர்தலில் வெற்றி பெற்ற வெங்கையா நாயுடு, நான் ஒருபோதும் நாட்டின் துணை அதிபராவேன் என நினைத்துப் பார்த்தது இல்லை. ராஜ்யசபா தலைவர் என்ற முறையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து செயல்படுவேன் என கூறினார்.

 

More Articles ...