புதுடில்லி, மே 2- வித்தியாசமான செல்பி புகைப்படத்திற்கு ஆசைப் பட்ட உயிரைப் பணயம் வைப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் டெல்லியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன்  வித்தியாசமான செல்ஃபி புகைப்படம் எடுப்பதற்காக தமது தந்தையின் துப்பாக்கியுடன்  படம் எடுத்த  போது, துரதிஷ்டவசமாகத் தன்னைத் தானே சுட்டுக்கொண்டான். தலையில் பலத்த காயமடைந்த அந்த 15 வயது சிறுவன் தற்போது  பஞ்சாப், பதன்கோட் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறான். 

கடந்த  வெள்ளிக்கிழமை, அச்சிறுவன் தமது தந்தை அலமாரியில் வைத்திருந்த உரிமம் பெற்ற ரிவால்வரை எடுத்து விளையாடியுள்ளான். 

 "அந்த துப்பாக்கியுடன் தமது மகன் செல்பி எடுக்க முயன்றார்" என போலீசார்  தெரிவித்துள்ளனர். அச்சிறுவன் எடுக்கும் அளவுக்கு  சுடும் ஆயுதத்தை அஜாக்கிரதையாக வைத்திருந்தது, முழுக்க முழுக்க அவனது தந்தையின் தவறு" என  போலீசார் வர்ணித்துள்ளனர்.  

பெங்களூர், 30 ஏப்ரல்-  உணவுடன் சேர்த்து அப்படியே சாப்பிடக்கூடிய  உணவு பொட்டல முறையை   பெங்களூரில் உள்ள கே.எஃ.சி எனப்படும்  கெண்டகி  பிரைட் சிக்கன் துரித உணவகம் அறிமுகப்படுத்தியுள்ளது.    

கர்நாடக அரசின் "பிளாஸ்டிக் வேண்டாம்" கொள்கையுடன் இணைந்து  கே.எஃ.சி  துரித உணவக நிறுவனம்  இந்த வாரம்  அதன் சோதனையைத் தொடங்கவுள்ளது. வாடிக்கையாளர்களின்  வரவேற்புக்கு ஏற்ப  மற்ற நகரங்களுக்கும் இம்முறை விரிவுபடுத்தப்படும்.  

தொடக்கக் கட்டமாக டார்ட்டில்லா ரைஸ் பவுல்  மட்டும்  ரைஸ் பவுல்களின் விற்பனையை அதிகரிக்க அப்படியே சாப்பிடக்கூடிய உணவு பொட்டல முறையைக் கொண்டு அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. 

பிளாஸ்டிக் கிண்ணங்கள் கப்புகள் போன்றவற்றில் இருந்து பேப்பருக்கு மாறியுள்ள நிலையில் மேலும்  பொட்டல துறையில்  பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க இது உதவும் என நம்பப்படுகிறது. 

லக்னோ, எப்ரல் 28- நி்ச்சயிக்கப்பட்ட திருமணம் நின்று போவது சர்வ சாதாரண காரியமாகி வருகிறது. உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரு திருமண விழா விருந்துபசரிப்பில் ஐஸ்கிரீம் இல்லாததால் இரு குடும்பங்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக பலர் காயமுற்றதுடன் திருமணமே நின்று போனது. அண்மையில் வரதட்சணை கேட்கும் மாப்பிள்ளை வேண்டாம் என்றும் திருமணம் செய்ய மாட்டேன் என பெண்கள் துணிவுடன் கூறும் காலமாகிவிட்டது.

இந்நிலையில் ,உத்தரபிரதேசம் மாநிலம் மதுராவில் ஒரு திருமண விருந்து நிகழ்ச்சி சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. தாலி கட்டும் முன்னதாக ஐஸ்கிரீம் கொடுக்கப்பட்டது. ஆனால்,ஐஸ்கிரீம் பற்றாக்குறையானதால் ஆத்திரமுற்ற மாப்பிள்ளை வீட்டார் தகராறில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து பெண் வீட்டாருக்கும் , மாப்பிள்ளை வீட்டாருக்கும் கை கலப்பு ஏற்பட்டது.

 இதில் பலர் காயமுற்றதைத். தொடர்ந்து போலீசார் சிலரை கைது செய்தனர். போலீஸ் நடவடிக்கைக்கு எதிராக பெண் வீட்டார் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். இதில் ஆத்திரமுற்ற ஒரு பிரிவினர் போலீசார் மீது கல் வீசி தாக்கினர். போலீசார் சிலரும் இதில் காயமுற்றனர்.  இந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து திருமணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

பெங்களூர், ஏப்ரல் 27-  தனது கைத்தொலைப்பேசியை  உடைத்த  90 வயது பாட்டியை வாலிபர் ஒருவர் உருக்கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார்.  பெங்களூர் பனசங்கரி பகுதியைச் சேர்ந்த லஷ்மம்மாவுக்கு 90 வயது. இவரது 22 வயது பேரன் சிவராஜ் வீட்டின் வரவேற்பறையில்    தனது கைத்தொலைப்பேசியை  சார்ஜ் செய்துள்ளார்.  கண்பார்வை குறைபாடு கொண்ட லஷ்மம்மா வரவேற்பறைக்குச் சென்ற போது  கைபட்டு,  சிவராஜின்  கைத்தொலைபேசி  கீழே விழுந்தது. 

விழுந்த வேகத்தில் கைத்தொலைப்பேசியின் திரை  கண்ணாடி நொறுங்கியது.  சத்தம் கேட்டு வந்து பார்த்த சிவராஜ் கைத்தொலைப்பேசி உடைந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். 

இதனால் ஆத்திரமடைந்த அவர்,  ஒரு உருட்டுக்கட்டையை எடுத்து பாட்டியின் கழுத்தில் ஓங்கி அடித்தார். நிலைக்குலைந்து விழுந்த லஷ்மம்மாவை பதறியடித்து ஓடி வந்த குடும்பத்தினர் படுக்கையில் படுக்க வைத்ததோடு, சிவராஜைக் கண்டித்தனர். 

இந்நிலையில், படுக்க வைக்கப்பட்டவர் தான்.   மறுநாள் காலை   லஷ்மம்மா  எழுந்திருக்கவே இல்லை.   உடனே அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.  

இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பில்   போலீசார் சிவராஜைக் கைது செய்துள்ளனர். 

பிஹார், ஏப்ரல் 27- இந்தியாவின் பீகார் மாநிலத்தில் நிலவும் கடுமையான வெப்பநிலையுடன் கூடிய காலை நேரத்தில் தற்போது ஏற்படும் தீ விபத்துக்களை தவிர்ப்பதற்காக பகல்பொழுதில் சமைக்க வேண்டாம் என்று அம்மாநிலத்தின் பேரிடர் அமைப்பு அதிகாரிகள் கிராம மக்களை கேட்டிருக்கிறார்கள்.

மத வழிபாட்டுக்கான ஹோமம் போன்ற தீயையும் ஏற்ற வேண்டாம் என்றும் அவர்கள் கேட்டிருக்கிறார்கள்.

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரியை விட அதிகமாகியிருக்கும் நிலையில், தீ சம்பந்தப்பட்ட சம்பவங்களில் 67 பேர் பலியானதாக வருகின்ற தகவல்களை அடுத்தே இந்த அறிவிப்பு வந்திருக்கிறது.

பெரும்பாலான மக்களின் உயிரிழப்புகள் சமையலின்போது ஏற்பட்ட தீ விபத்துக்களிலேயே நடந்துள்ளன.

விசாகப் பட்டிணம், 27 ஏப்ரல்- ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் உள்ள பயோடீசல்  உற்பத்தி ஆலையில் பயங்கர தீ ஏற்பட்டுள்ளது.   இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது. 

விசாகப்பட்டிணம் நகரில் உள்ள துவ்வடா எனும் பகுதியில்  பயோமெக்ஸ் என்ற  பயோடீசல்  உற்பத்தி  ஆலை ஒன்று அமைந்துள்ளது. 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆலையில்  தீப்பற்றியது. அங்குள்ள அமைந்துள்ள 12 டேங்கர்களில் தீ பரவியது. 

தீ எரிபொருளில் பரவுவதால் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைப்பதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.   13 மணி நேரமாகப் போராடியும் 70 விழுக்காடு தீ தான் அணைக்கப்பட்டுள்ளது. 

இச்சம்பவம் இரவு நிகழ்ந்ததால், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன. 

புதுடில்லி, ஏப்ரல் 26- அதிநவீனத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கும் இந்தியாவின் புதிய முயற்சி தான் ‘உமாங்’ என அழைக்கப்படும் செயலி.

இந்தச் செயலியில் 200க்கும் மேற்பட்ட மத்திய, மாநில, மற்றும் உள்ளூர் நிர்வாக சேவைகள் இணைக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. , பாஸ்போர்ட் பதிவு செய்தல், வருமான வரி தாக்கல் செய்வது மற்றும் இதர கட்டணங்களை கைப்பேசிலேயே செய்து முடிக்க முடியும் என்பது இந்த செயலியின் தனிச் சிறப்பாகும். ஒரே செயலியில் அனைத்து நிர்வாகங்களையும் இணைக்கும் இந்த முயற்சியை சாத்தியப்படுத்த தனியார் நிறுவனங்ளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இப்பொழுது, அனைவரும் அதிநவீன கைப்பேசிகளை உபயோகித்து வரும் நிலையில், இந்த முயற்சி கண்டிபாக சாத்தியப்படும் என நம்பப்படுகிறது. இதைத்தவிர, மக்களின் தேவைகளை எங்கிருந்தாலும் இதன் மூலம் பூர்த்தி செய்ய முடியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

 

புனே, ஏப்ரல் 25- புனேவில் உள்ள கார்வேர் கலைக் கல்லூரி மாணவர்கள் சிலர் ஒரு வாட்ஸ் அப் குரூப்பில் இருந்துள்ளனர். குரூப்பில் இருந்த ஒரு இளைஞருக்கு நேற்று பிறந்த நாள். அந்த இளைஞரின் பிறந்த நாளையோட்டி, அவரது பெயரையே குரூப்பின் பெயராக வைத்துள்ளனர். 

ஆனால் இது குரூப்பில் இருந்த சிலருக்கு பிடிக்கவில்லை. இதனால் மாணவர்கள் இடையே பிரச்சனை ஏற்பட்டு, பின்பு அது கை கலப்பாக மாறியுள்ளது. இதில் மொத்தமாக 5 பேர் கயம் அடைந்தனர். பலத்த காயம் அடைந்த ஒரு மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பாக சன்கீத் சாலுன்க் என்ற 22 வயதுடைய பி.பி.ஏ. மாணவர் போலீசில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து 22 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கொல்கத்தா,  23  ஏப்ரல் -  "விமானத்தில் பணிப்பெண்ணும் காக்பீட் அறையில் தமக்கு அருகில் அமர வேண்டும்" எனக்கட்டாயப் படுத்திய  விமானி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி கொல்கத்தாவிலிருந்து  பாங்காக்  நோக்கிச் சென்ற அவ்விமானத்தில், விமானப் பணிப்பெண்ணும்  தமக்கு அருகில் அமர கட்டாயப்படுத்தியதாக, சம்பந்தப்பட்ட அந்த விமானி மீது புகார் எழுந்தது.   

மீண்டும் கொல்கத்தா புறப்படும் அவ்விமானி அதே தவறைப் புரிந்துள்ளார். இது குறித்து விசாரணை   நடத்தப்பட்ட நிலையில், தற்போது அந்த விமானி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவ்விவகாரம் தொடர்பில்  போக்குவரத்து இயக்குனரகம்  விசாரணை நடத்தி வருகிறது. 

சாரோட், ஏப்ரல் 22- ’உணவு ஏதும் உட்கொள்ளாமல், தண்ணீரை மட்டுமே அருந்தி, கடந்த 70 ஆண்டுகளாக ஒரு துறவி உயிர்வாழ்வதாகக் கூறியுள்ளார்.

நீண்ட சடாமுடி மற்றும் தாடியுடன் காணப்படும் இந்த 83 வயதுத் துறவி தான், தியானத்தின் மூலம் சக்தியைப் பெறுவதாகத் தெரிவித்துள்ளார். 

சிவப்பு நிற ஆடையுடனும் மூக்கில் வளையம் அணிந்தவராகவும் காணப்படும் இந்தத் துறவி, குஜராத்திலுள்ள மேக்சானா மாவட்டத்திலுள்ள சாரோட் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்.

இவர் தனக்கு 8 வயதாக இருக்கும் போது அன்னை சக்தியின் ஆசி பெற்றதாகவும் அதனாலேயே உணவின்றி உயிர்வாழ முடிவதாகவும் தெரிவித்தார். கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக தண்ணீரை மட்டுமே உணவாக எடுத்துவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மருத்துவமனை ஒன்றில் இவரை அடைத்து வைத்து வெறும் குடிநீரை மட்டுமே உணவாக அளித்து சோதனை செய்து பார்த்தனர். இவ்வாறு 15 நாட்கள் மருத்துவமனை கண்காணிப்பில் இருந்த அவர், நீரை தவிர உணவேதும் உண்ணாமல் இருந்ததை கண்டு மருத்துவர்கள் அதிசயித்தனர்.

 

தாவாங், ஏப்ரல் 22- இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் இடைவிடாது பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் தாவாங் நகருக்கு அருகே தொழிலாளர் முகாமில் குறைந்தது பதினைந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இரண்டு பேர் காணாமல் போயிருக்கிறார்கள். அவர்களைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை முகாமில் தொழிலாளர்கள் தங்கியிருந்த நேரத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

மலைப்பாங்கான எல்லைப் பகுதிகளில் நிலச்சரிவுகள் தொடர்ந்து ஏற்படும் என்றாலும், அது பெரும்பாலும், ஜூன் மாதத்திலிருந்து செப்டம்பர் மாதத்திற்கு இடைப்பட்ட காலத்தில் வரும் பருவமழையின் போதே ஏற்படும்.

ஏப்ரல் மாதத்தில் நிலச்சரிவுகள் ஏற்படுவது வழக்கத்திற்கு மாறானது என்று கருதப்படுகிறது.

More Articles ...