போபால், ஜுன் 9 - விவசாயப் பொருள்களுக்கு உரிய விலை, கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய பிரதேச மாநில விவசாயிகள், கடந்த 2 -ம் தேதியில் இருந்து போராட்டம் நடத்திவருகின்றனர். மான்ட்சர்  மாவட்டத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில், போலீஸார் நடத்திய தூப்பாக்கிச்சூட்டில் 5 விவசாயிகள் உயிரிழந்தனர். மத்திய பிரதேச அரசின் இந்த நடவடிக்கை நாடு முழுவதும் உள்ள விவசாயிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாகப் பேசிய தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அய்யாகண்ணு, ''விவசாயிகளை இந்த அரசு அடிமையாகப் பார்க்கிறது. விவசாயிகள் போராடினால் அவர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவதை வழக்கமாக வைத்துள்ளது. உயிரிழந்த விவசாயிகளுக்கு நீதி கிடைக்கும்வரை எங்களுடைய போராட்டம் ஓயாது.

மேலும், மத்திய பிரதேச அரசின் இந்த அராஜகத்தைக் கண்டித்து அகில இந்திய அளவில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். அதற்கான அறிவிப்பை வரும் 16-ஆம் தேதி தெரிவிக்க உள்ளோம்'' என்றார்.

மத்திய பிரதேசத்தில் நடந்துள்ள துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பிரதமர் மோடி அமைச்சர்களுடன்  ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து மத்திய பிரதேசத்துக்குத் துணை ராணுவப் படைகளை மத்திய அரசு அனுப்பியுள்ளது. ஆனாலும், தொடர்ந்து மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் செளகான் அரசுக்கு எதிராக விவசாயிகள் போராடி வருகின்றனர்.

மும்பை, ஜூன் 8- காதில் 'இயர்போனை' போட்டுக் கொண்டு தனது கைப்பேசியில் பாட்டுக் கேட்டுக்கொண்டே தண்டவாளத்தைத் தாண்ட முயன்ற இளம் பெண் ஒருவர் ரயிலால் மோதப்பட்டார். இருப்பினும் அப்பெண் உயிர் பிழைத்துள்ளது அதிசயம் எனக் கூறி சம்பவ காணொளியை வைரலாக பரப்பி வருகின்றனர் நெட்டிசன்கள். 

மும்பையில் உள்ள குர்லா ரயில் நிலையத்தில் தான் இச்சம்பவம் நிகழ்ந்தது. சம்பவத்தன்று, பாண்டுப்பைச் சேர்ந்த பிரதிக்‌ஷா நடேகர் எனும் 19 வயது பெண் குர்லா ரயில் நிலையத்தில் 7வது நடைபாதைக்கு வருவதற்காக தண்டவாளத்தில் நடந்து வந்துள்ளார். அவர் சும்மா நடந்து வரவில்லை. காதில் அணியும் இசைக்கருவி வழி (இயர்போன்) கைப்பேசியில் பாட்டு கேட்டு வந்துள்ளார் அப்பெண். 

    ### காணொளி: நன்றி MONA LIZZA

நடைப்பாதையில் ஏறுவதற்காக வேகமாக தண்டவாளத்தைத் தாண்டியபோது அங்கே ரயில் வருவதை அவர் பார்க்கவில்லை. சட்டென்று சுதாகரித்துக் கொண்டு தண்டவாளத்திலிருந்து வெளியே ஓட அப்பெண் முயற்சிக்கும் போது ரயில் மோதி அப்பெண் தண்டவாளத்தில் விழுகிறாள்.

அப்பெண் இறந்திருப்பாள் என அங்கிருந்த அனைவரும் நினைக்க, உயிரோடு இருந்த அவளை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று காப்பாற்றி விட்டனர்.

இச்சம்பவம் நடந்தது என்னமோ மே 13ம் தேதி தான். ஆனால் கடந்த இரு நாட்களாக தான் இதன் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. உள்ளூர் செய்திக்கு பேட்டி அளித்த பிரதிக்‌ஷா, "ரயில் வந்ததைப் பார்த்து தனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ரயில் மோதிய பிறகு என்ன நடந்தது என்பது தெரியாது. மருத்துவமனையில் கண் விழித்தப் பின்பே நான் உயிரோடு இருப்பது தெரிந்தது" என கூறியுள்ளார்.

பெங்களூர் ஜூன் 6 - கர்நாடகாவிலுள்ள அரசு மருத்துவமனையில் வயது முதிர்ந்த நோயாளிக்கு எக்ஸ்ரே அறைக்கு செல்ல சக்கரவண்டி தர மறுத்ததால் அவரது மனைவி தன் கணவனின் காலை பிடித்து தரதரவென இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து மருத்துவமனை இயக்குநர் சுஷில் கூறுகையில், "இந்த வீடியோ 2 நாட்கள் முன்பு எடுக்கப்பட்டு எனக்கு தகவல் வந்ததும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன்" என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், மருத்துவமனையில் போதிய அளவுக்கு சக்கரவண்டி உள்ளன. அப்படியிருந்தும் ஏன் இம்மாதிரியான சம்பவம் நடைபெற்றது என்பது எனக்கு புரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இப்படிப்பட்ட சம்பவம் நடைபெறுவது கர்நாடகாவில் அரசு மருத்துவமனைகளுக்கு புதிது கிடையாது. இதற்கு முன்பாக மே 23-ம் தேதி, கோலார் அரசு மருத்துவமனையின் மேற்கூறை பகுதி இடிந்து விழுந்ததில், பிறந்து 2 நாட்களேயான குழந்தைக்கு காயம் ஏற்பட்டதும், மார்ச் 23ம் தேதி ஹூப்ளி மாவட்ட அரசு மருத்துவமனையில் ஒரே ஸ்ட்ரெட்சரில் 4 கர்ப்பிணி பெண்கள் வைத்து அழைத்துச் சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டில்லி ஜூன் 6 - இன்று அதிகாலை டில்லியில்  திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அலறியபடி வீடுகளை விட்டு வெளியேறினர். டில்லி மற்றும் வடமாநில பகுதிகளில் இன்று காலை 4.20 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் ஒரு நிமிடம் வரை நீடித்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவானது.

ஹரியானா மாவட்டத்தின் ரோட்டக் பகுதியில் நிலநடுக்கத்தின் மையப்புள்ளி உணரப்பட்டுள்ளது. இதனால் கட்டடங்கள் குலுங்கி வீட்டில் இருந்த பொருட்கள் கீழே விழ ஆரம்பித்தன.

இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் பதறி துடித்து பின்னர் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். ஆனால் இந்த நிலநடுக்கத்தால் எந்த சேதமும் ஏற்படவில்லை.

கடந்த 28ஆம் தேதி ஜம்மு - காஷ்மீரின் பதர்வா மற்றும் தோடா ஆகியப் பகுதிகளில் இரண்டு முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலை 7.23 மணியளவில் 4.7 ரிக்டர் அளவிலும் இதைத் தொடர்ந்து இரவு 7.48 மணிக்கு 3.2 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

அமராவதி, மே 30- பாசம் வைத்து விட்டால் மனிதனாவது மிருகமாவது.. அடிப்பட்ட குரங்கிற்கு மருத்துவம் பார்த்த ஊர் மக்கள் அந்த குரங்கு இறந்த பின் மனிதருக்கு செய்வது போல் இறுதி சடங்கு செய்துள்ள சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ளது குப்பம் என்ற கிராமம். சில நாட்களுக்கு முன்பு குரங்கு ஒன்று சாலை விபத்தில் அடிபட்டு, பலத்த காயத்துடன் இருந்த அந்தக் குரங்கை கிராம மக்கள் மீட்டு, மருத்துவரை வரவழைத்து சிகிச்சை அளித்தனர். இரண்டு நாட்களாக குரங்குக்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் குரங்கு இறந்துவிட்டது.  

   ### காணொளி: நன்றி  ஒன்இந்தியா தமிழ் 

குரங்கின் மேல் அதிக பாசம் வைத்த குப்பம் கிராம மக்கள் அதற்கு மனிதர்களுக்கு செய்வது போல் இறுதிச் சடங்கு செய்யதனர். அதன்படி ஒரு மனிதருக்கு செய்வது போல் பாடைகட்டி, மாலை போட்டு பறை ஒலிக்க ஆட்டம் ஆடி ஊர்வலமாக எடுத்துச் சென்று புதைத்தனர். இந்த நிகழ்வு பார்ப்பவரை நெகிழச் செய்தது. 

 

லக்னோ, மே 30- உத்திர பிரதேசத்தைச் (உ.பி) சேர்ந்த பெண் அமைச்சர் ஒருவர் 'பார்' எனும் மதுபான கடையைத் திறந்து வைக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானதை அடுத்து அவருக்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.

உ.பி.யில் பாஜக தலைமையிலான யோகி ஆதித்யநாத் ஆட்சி நடக்கிறது. முதல்வராக பதவியேற்ற சில காலத்திலேயே மக்களுக்கு தேவையான விசயங்களை பூர்த்தி செய்து வருவதால் இவரின் ஆட்சி மீது மக்களுக்கு நல்ல எண்ணம் உருவாகியுள்ளது.

இந்நிலையில் பெண்கள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் சுவாதிசிங் மதுபான கடையைத் திறந்து வைத்துள்ளது கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று லக்னோவில் பீர் மதுபான விற்பனை மையத்தின் புதிய பார் ஒன்றின் திறப்பு விழாவில் சுவாதிசிங் பங்கேற்றார். 

அவர் ரிப்பன் வெட்டி கடையைத் திறந்து வைக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியுள்ளது. சம்பவம் குறித்து விரிவான அறிக்கை தருமாறு முதல்வர் யோகி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐதராபாத், ஜூன் 29- ஒன்றாக சேர்ந்து வாழலாம் என்று கூறி ஏமாற்றி அழைத்துச் சென்று சவுதி அரேபியாவில் உள்ள ஒரு ஷேக்குக்குத் தன் மனைவியை விற்ற கணவனின் செய்தி பலரின் கண்டனத்திற்கு ஆளாகி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த 23 வயது நிறைந்த சயிரா பானுவுக்கும், ஒமருக்கும், 2014-இல் திருமணம் நடந்தது. சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் வேலை செய்து வரும் ஒமர், திருமணம் முடிந்தவுடன், அங்கு சென்று விட்டான். ஐதராபாத் வரும்போதெல்லாம், மனைவியைக் கொடுமை படுத்தியுள்ளான் என்று போலீசார் கூறியுள்ளனர்.

'ரியாத்துக்கு அழைத்துச் செல்கிறேன். அங்கு ஒரு ஷேக் வீட்டில் வேலை பார்ப்பதற்கு விசா கிடைத்துள்ளது. ஒரு மாதம் அங்கிருக்க வேண்டும். அதன்பின், நாம் இருவரும் சேர்ந்து வாழலாம்' என ஆசை வார்த்தைக் காட்டி பேசியுள்ளான். சாயிரா பானுவுக்கு போலி பாஸ்போர்ட் தயாரிக்க வைத்து, ரியாத் அழைத்துச் சென்றுள்ளான். 

மே 2-ஆம் தேதி ரியாத் சென்றடைந்த சாயிரா பானுவை ஒரு ஷேக் வீட்டில் தங்கியிருக்க வைத்தான். அங்கு வீட்டு வேலை செய்ய வேண்டும் என ஒமர் கூறியுள்ளான். ஆனால், அந்த ஷேக், சாயிராவுக்கு பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்துள்ளான்.

சாயிரா தன் கணவனுக்கு அழைத்து அந்த ஷேக் பாலியில் தொந்தரவு கொடுப்பதாகக் கூறினாள். அவன் 'நான் உன்னை ஷேக்குக்கு விற்று விட்டேன். இப்போது உன்னை விவாகரத்து செய்கிறேன்' என தொலைபேசியில் கூறியுள்ளான் அந்தக் கொடூரன்.

சாயிரா பானுவின் தாய் பானு பேகம், போலீசில் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து விசாரித்து வருகிறோம் என்று  போலீசார் கூறினர். சவுதியில் உள்ள தன் மகளை மீட்க உதவ வேண்டும் என, மத்திய வெளியுறவு அமைச்சர்  சுஷ்மா சுவராஜுக்கு, சாயிராவின் தாய் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

சண்டிகர், மே 25- பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கை கொலை செய்யப் போவதாக மிரட்டல் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. கனடாவைச் சேர்ந்தவர்கள் இந்த மிரட்டலை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்துகிறது. அதற்கு அமரீந்தர் சிங் முதல்வராக உள்ளார். இவரைக் கொலைச் செய்யப்போவதாக காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட காணொளியில் முதல்வர் அமரீந்தர் சிங்கையும் லூதியானா தொகுதி எம்பி ரவ்நீத் சிங்கையும் கீழ்த்தரமாக சிலர் பேசியுள்ளனர். பின்னர் இருவருக்கும் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். 

அந்த காணொளி கனடாவில் எடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. முன்பு, கனடா பாதுகாப்பு துறை அமைச்சர் ஹர்ஜித் சிங் இந்தியா வந்தபோது அவருக்கு தகுந்த மரியாதை அளிக்கவில்லை என்றும் சீக்கியர்களுக்கு எதிராக செயல்பட்டு வந்தார் எனவும் குற்றச்சாட்டப்பட்டு அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.  

மும்பை, மே 24- ஆசிட் வீசப்பட்டு முகம் கருகி போக, 17 அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு உடல் நலம் தேறிய பின்னும் தன்னை யார் மணந்து கொள்வார் என பெண் ஒருவர் கலங்கி நிற்க, தவறான தொலைப்பேசி அழைப்பு அவரின் வாழ்க்கையே மாற்றி அமைத்தது. 

உத்தரபிரதேசத்தை சேர்ந்த லலிதா (வயது 26) என்ற பெண் மீது தனிப்பட்ட விநோதம் காரணமாக 2012ம் ஆண்டு அவரின் உறவினர் ஆசிட் வீசியுள்ளார். அமிலத்தினால் முகம் மாறி போக, இவருக்கு மொத்தம் 17 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் பழைய முகத்தை கொண்டு வரமுடியவில்லை. 

மனம் தளராது சோகத்தை தன்னுள் மறைத்துக் கொண்டு வாழ்ந்த லலிதாவிற்கு தவறான தொலைப்பேசி அழைப்பு வந்தது. பின்னர் அதுவே தொடர இருவரும் நண்பர்களாக மாறினர். பின்னர் அதுவே காதலாகவும் மாறியது. 

இருவர் குடும்பமும் இவர்களின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க, இவர்களின் திருமணம் அண்மையில் நடந்தேறியது. இவரை மணந்த ராகுல் என்பவர் சிசிடிவி ஆப்ரேட்டராக பணியாற்றுகிறார். என்னால் ஒரு நல்லது நடக்கவேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். என் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்ததால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இவர்களின் திருமணத்திற்கு இந்தி திரையுலக பிரபலங்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். 

கவுகாத்தி, மே 23- அசாம் வானவெளியில் பறந்து கொண்டிருந்தபோது போர் விமானம் ஒன்று தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டது. மாயமான விமானம் விபத்துக்குள்ளானதா அல்லது தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதா என இராணுவம் விசாரித்து வருகிறது.

அசாமின் தேஸ்பூரில் வடக்கு பகுதியில் சென்றபோது சுகோய் 30 ரக விமானம் ரேடாரிலிருந்து மறைந்ததாக கூறப்படுகிறது. மாயமான விமானத்தில் இரு போர் வீரர்கள் இருந்ததாகவும் விமானம் விபத்தில் சிக்கியிருக்கலாம் என நம்புவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதேவேளையில், விமானத்தை தீவிரவாதிகள் கடத்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும் அந்த கோணத்தில் விசாரணை நடப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

போர் விமானம் காணாமல் போனது ராணுவ மட்டத்தில் மட்டுமல்லாது பொதுமக்களிடையேயும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூர், மே 19- ஒன்பது வயது மட்டுமே நிரம்பிய சிறுவனைப் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிய பின்னர் கொலைச் செய்த காமுகனைக் கர்நாடகப் போலீசார் கைதுச் செய்தனர். 

மன்னனயகான கோப்பா கிராமத்தைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுவன் கொலைச் செய்யப்பட்டு கிடந்ததை அடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அச்சிறுவன் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக போலீசார் துருவி துருவி விசாரித்ததில் ஆடவன் ஒருவனைப் போலீசார் கைதுச் செய்தனர்.

அவ்வூருக்கு அருகில் உள்ள இடத்தைச் சேர்ந்த 42 வயது சுபாஷ் ஆகாசிமாணி என்பவனைப் போலீசார் கைதுச் செய்தனர். அவன் பொக்சோ சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டான். கைதுச் செய்யப்பட்ட சுபாஷ் ஓரின சேர்க்கையாளன் என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் கூறினர். 

More Articles ...