லக்னோ, மே 30- உத்திர பிரதேசத்தைச் (உ.பி) சேர்ந்த பெண் அமைச்சர் ஒருவர் 'பார்' எனும் மதுபான கடையைத் திறந்து வைக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானதை அடுத்து அவருக்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.

உ.பி.யில் பாஜக தலைமையிலான யோகி ஆதித்யநாத் ஆட்சி நடக்கிறது. முதல்வராக பதவியேற்ற சில காலத்திலேயே மக்களுக்கு தேவையான விசயங்களை பூர்த்தி செய்து வருவதால் இவரின் ஆட்சி மீது மக்களுக்கு நல்ல எண்ணம் உருவாகியுள்ளது.

இந்நிலையில் பெண்கள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் சுவாதிசிங் மதுபான கடையைத் திறந்து வைத்துள்ளது கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று லக்னோவில் பீர் மதுபான விற்பனை மையத்தின் புதிய பார் ஒன்றின் திறப்பு விழாவில் சுவாதிசிங் பங்கேற்றார். 

அவர் ரிப்பன் வெட்டி கடையைத் திறந்து வைக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியுள்ளது. சம்பவம் குறித்து விரிவான அறிக்கை தருமாறு முதல்வர் யோகி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐதராபாத், ஜூன் 29- ஒன்றாக சேர்ந்து வாழலாம் என்று கூறி ஏமாற்றி அழைத்துச் சென்று சவுதி அரேபியாவில் உள்ள ஒரு ஷேக்குக்குத் தன் மனைவியை விற்ற கணவனின் செய்தி பலரின் கண்டனத்திற்கு ஆளாகி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த 23 வயது நிறைந்த சயிரா பானுவுக்கும், ஒமருக்கும், 2014-இல் திருமணம் நடந்தது. சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் வேலை செய்து வரும் ஒமர், திருமணம் முடிந்தவுடன், அங்கு சென்று விட்டான். ஐதராபாத் வரும்போதெல்லாம், மனைவியைக் கொடுமை படுத்தியுள்ளான் என்று போலீசார் கூறியுள்ளனர்.

'ரியாத்துக்கு அழைத்துச் செல்கிறேன். அங்கு ஒரு ஷேக் வீட்டில் வேலை பார்ப்பதற்கு விசா கிடைத்துள்ளது. ஒரு மாதம் அங்கிருக்க வேண்டும். அதன்பின், நாம் இருவரும் சேர்ந்து வாழலாம்' என ஆசை வார்த்தைக் காட்டி பேசியுள்ளான். சாயிரா பானுவுக்கு போலி பாஸ்போர்ட் தயாரிக்க வைத்து, ரியாத் அழைத்துச் சென்றுள்ளான். 

மே 2-ஆம் தேதி ரியாத் சென்றடைந்த சாயிரா பானுவை ஒரு ஷேக் வீட்டில் தங்கியிருக்க வைத்தான். அங்கு வீட்டு வேலை செய்ய வேண்டும் என ஒமர் கூறியுள்ளான். ஆனால், அந்த ஷேக், சாயிராவுக்கு பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்துள்ளான்.

சாயிரா தன் கணவனுக்கு அழைத்து அந்த ஷேக் பாலியில் தொந்தரவு கொடுப்பதாகக் கூறினாள். அவன் 'நான் உன்னை ஷேக்குக்கு விற்று விட்டேன். இப்போது உன்னை விவாகரத்து செய்கிறேன்' என தொலைபேசியில் கூறியுள்ளான் அந்தக் கொடூரன்.

சாயிரா பானுவின் தாய் பானு பேகம், போலீசில் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து விசாரித்து வருகிறோம் என்று  போலீசார் கூறினர். சவுதியில் உள்ள தன் மகளை மீட்க உதவ வேண்டும் என, மத்திய வெளியுறவு அமைச்சர்  சுஷ்மா சுவராஜுக்கு, சாயிராவின் தாய் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

சண்டிகர், மே 25- பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கை கொலை செய்யப் போவதாக மிரட்டல் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. கனடாவைச் சேர்ந்தவர்கள் இந்த மிரட்டலை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்துகிறது. அதற்கு அமரீந்தர் சிங் முதல்வராக உள்ளார். இவரைக் கொலைச் செய்யப்போவதாக காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட காணொளியில் முதல்வர் அமரீந்தர் சிங்கையும் லூதியானா தொகுதி எம்பி ரவ்நீத் சிங்கையும் கீழ்த்தரமாக சிலர் பேசியுள்ளனர். பின்னர் இருவருக்கும் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். 

அந்த காணொளி கனடாவில் எடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. முன்பு, கனடா பாதுகாப்பு துறை அமைச்சர் ஹர்ஜித் சிங் இந்தியா வந்தபோது அவருக்கு தகுந்த மரியாதை அளிக்கவில்லை என்றும் சீக்கியர்களுக்கு எதிராக செயல்பட்டு வந்தார் எனவும் குற்றச்சாட்டப்பட்டு அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.  

மும்பை, மே 24- ஆசிட் வீசப்பட்டு முகம் கருகி போக, 17 அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு உடல் நலம் தேறிய பின்னும் தன்னை யார் மணந்து கொள்வார் என பெண் ஒருவர் கலங்கி நிற்க, தவறான தொலைப்பேசி அழைப்பு அவரின் வாழ்க்கையே மாற்றி அமைத்தது. 

உத்தரபிரதேசத்தை சேர்ந்த லலிதா (வயது 26) என்ற பெண் மீது தனிப்பட்ட விநோதம் காரணமாக 2012ம் ஆண்டு அவரின் உறவினர் ஆசிட் வீசியுள்ளார். அமிலத்தினால் முகம் மாறி போக, இவருக்கு மொத்தம் 17 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் பழைய முகத்தை கொண்டு வரமுடியவில்லை. 

மனம் தளராது சோகத்தை தன்னுள் மறைத்துக் கொண்டு வாழ்ந்த லலிதாவிற்கு தவறான தொலைப்பேசி அழைப்பு வந்தது. பின்னர் அதுவே தொடர இருவரும் நண்பர்களாக மாறினர். பின்னர் அதுவே காதலாகவும் மாறியது. 

இருவர் குடும்பமும் இவர்களின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க, இவர்களின் திருமணம் அண்மையில் நடந்தேறியது. இவரை மணந்த ராகுல் என்பவர் சிசிடிவி ஆப்ரேட்டராக பணியாற்றுகிறார். என்னால் ஒரு நல்லது நடக்கவேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். என் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்ததால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இவர்களின் திருமணத்திற்கு இந்தி திரையுலக பிரபலங்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். 

கவுகாத்தி, மே 23- அசாம் வானவெளியில் பறந்து கொண்டிருந்தபோது போர் விமானம் ஒன்று தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டது. மாயமான விமானம் விபத்துக்குள்ளானதா அல்லது தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதா என இராணுவம் விசாரித்து வருகிறது.

அசாமின் தேஸ்பூரில் வடக்கு பகுதியில் சென்றபோது சுகோய் 30 ரக விமானம் ரேடாரிலிருந்து மறைந்ததாக கூறப்படுகிறது. மாயமான விமானத்தில் இரு போர் வீரர்கள் இருந்ததாகவும் விமானம் விபத்தில் சிக்கியிருக்கலாம் என நம்புவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதேவேளையில், விமானத்தை தீவிரவாதிகள் கடத்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும் அந்த கோணத்தில் விசாரணை நடப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

போர் விமானம் காணாமல் போனது ராணுவ மட்டத்தில் மட்டுமல்லாது பொதுமக்களிடையேயும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூர், மே 19- ஒன்பது வயது மட்டுமே நிரம்பிய சிறுவனைப் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிய பின்னர் கொலைச் செய்த காமுகனைக் கர்நாடகப் போலீசார் கைதுச் செய்தனர். 

மன்னனயகான கோப்பா கிராமத்தைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுவன் கொலைச் செய்யப்பட்டு கிடந்ததை அடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அச்சிறுவன் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக போலீசார் துருவி துருவி விசாரித்ததில் ஆடவன் ஒருவனைப் போலீசார் கைதுச் செய்தனர்.

அவ்வூருக்கு அருகில் உள்ள இடத்தைச் சேர்ந்த 42 வயது சுபாஷ் ஆகாசிமாணி என்பவனைப் போலீசார் கைதுச் செய்தனர். அவன் பொக்சோ சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டான். கைதுச் செய்யப்பட்ட சுபாஷ் ஓரின சேர்க்கையாளன் என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் கூறினர். 

புதுடில்லி, மே 18 - இந்தியாவின் மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தேவ் உடல் நலக்குறைவு காரணமாகக் காலமானார். பிரதமர் மோடி அமைச்சரவையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராகப் பணியாற்றி வந்த 60 வயதான இவருக்கு உடல் நடலக் கோளாறு காரணமாக இன்று காலை அவர் மரணமடைந்தார். 

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இவர் பாஜகவின் முக்கிய தலைவராக திகழ்ந்து வந்தார். கடந்த சில வாரங்கள உடல் நலம் குன்றியிருந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தின் ராஜ்ய சபா எம்பியாக இருந்த வந்த அனில் தேவ்வை 2016-ம் ஆண்டு சுற்றுச்சூழல் துறை அமைச்சராகப் பிரதமர் மோடி நியமித்தார். மத்திய பிரதேசத்த்தில் பாஜகவின் முக்கிய தலைவராக இருந்து கட்சியை வளர்த்தவராகவும் இவர் திகழ்கிறார். 

மறைந்த அமைச்சரின் உடல் தலைவர்களின் அஞ்சலிக்காக டெல்லியில் வைக்கப்பட்டு, பின்னர், சொந்த மாநிலமான மத்திய பிரதேச மாநிலத்தில் இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது. அமைச்சரின் மறைவிற்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு உள்ளிட்ட அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

திருப்பதி, மே 17- கணினி நிபுணர்களை மட்டுமல்ல சாதாரண மக்களைக் கூட அலற வைத்துள்ளது ரான்சம்வேர். எது வைரஸ் எது குறுஞ்செய்தி என தெரியாமல் குழம்பி கொண்டிருக்க, திருப்பதி ஏழுமலையானைக் கூட விட்டு வைக்கவில்லை இந்த வைரஸ்.

இந்த ரான்சம்வேர் வைரஸால் திருப்பதி தேவஸ்தானத்தின் கணினிகள் பாதிக்கப்பட்டு கோயிலின் இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் இருந்த 10 கணினிகளிலும் இந்த வைரஸ் பரவியுள்ளது.

இதனால், கோயில் பற்றியும் தேவஸ்தானத்தின் கணக்கு வழக்குகள் கொண்ட நிர்வாக கோப்புகளும் அழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தேவஸ்தானத்தின் இணையதளத்தைப் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அது முடக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லக்னோ, மே 10- பல திருமணங்களைச் செய்து கட்டிய பெண்களையும் தன் சொந்த மகளையும் விற்று வந்த சொந்த அப்பனின் அம்பலத்தை வெளியே சொல்லி விடுவாள் என்ற பயத்தில் மகளின் முகத்தில் ஆசிட் வீசிய கொடூர சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்ததுள்ளது.

20 வயதான குஷ்பூ தேவி எனும் பெண், தன் தந்தையான மாணிக் சந்திரா, விபசாரத்திற்கு விற்பதற்காக இளம் பெண்களை மணம் முடித்து அவர்களை ஏமாற்றி வந்ததை அறிந்துள்ளார். மகள் தன் சுய ரூபத்தை வெளியே சொல்லி விடுவாள் என்ற பயத்தில் அந்த கொடூரன், நள்ளிரவு வேளையில் மகளின் வீட்டிற்கு சென்று கதவைத் தட்டியுள்ளான். 

தட்டியது யார் என்று தெரிந்து கொள்ள கதவைத் திறந்தபோது அங்கு நின்றுக் கொண்டிருந்த மாணிக் சந்திரா சட்டென்று தான் மறைத்து வைத்திருந்த எரி திராவகத்தை எடுத்து குஷ்பூ தேவி முகத்தில் வீசியுள்ளான். இதில் குஷ்பூவின் ஒரு பக்க முகத்தில் ஆசிட் பட, பின்னால் படுக்கையில் தூங்கி கொண்டிருந்த கணவன் மற்றும் அவரின் மகள் திரிஷா மீதும் ஆசிட் துளிகள் விழுந்தன.

ஆசிட் பட்டதால் மூவரும் அலறி கதற, அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். 

சம்பவம் குறித்து பேசிய குஷ்பூ, என் அம்மா சரிதா தேவிக்கு பிறகு என் அப்பா பல பேரை மணந்து விற்றுள்ளார். தொடக்கத்தில் எனக்கு சிறு வயது என்பதால் எனக்கு விவரம் புரியவில்லை. என் அம்மா சரியாக சமைப்பதில்லை, உடைகளைத் துவைப்பதில்லை என கூறியே தொடக்கத்தில் வீட்டிற்கு பல பெண்களை அப்பா கூட்டிக் கொண்டு வருவார். 

"உறவினர் என்பார் ஆனால் சிறிது நாள் கழித்து மணந்து கொள்வார். சில காலம் கடந்து எனக்கு உண்மை விளங்கியது. ஆனால் எங்களுக்கு புரியவில்லை என்பது போல நினைத்து அவர் இச்செயல்களைத் தொடர்ந்து செய்து வந்தார். இதற்கிடையில் எனக்கு 14 வயது மட்டுமே ஆனபோது விநோத் என்பவருடன் எனக்கு திருமணம் நடந்தது. அவரிடம் வாங்கிய கடனை அடைக்க முடியாததால் என் அப்பா விநோத்திற்கு என்னை மணமுடித்தார்.

இந்நிலையில் என் இளைய தங்கையை 50 வயதான ஒருவருக்கு விற்க என் அப்பா முயற்சித்தபோது முதல் முறை தடுத்து விட்டோம். ஆனால் மறுமுறை 30 வயது ஆடவருக்கு திருட்டுத்தனமாக மணமுடித்து விட்டார் அவர். இது குறித்து போலீசில் புகார் செய்தபோது அவர்கள் கைது செய்து பின்னர் லஞ்சம் வாங்கி கொண்டு அப்பாவை வெளியே விட்டு விட்டனர்." என குஷ்பூ கூறினார்.

இதற்கிடையில் நாங்கள் போலீஸ் சென்றதால் தான் காமுகனான என் அப்பா என் மீது ஆசிட் வீசினார். ன் கணவருக்கு குறைவான சம்பளம் தான், மருந்துக்கே அது சரியாகிறது. அன்றாட உணவு சாப்பிடக்கூட நாங்கள் சிரமப்படுகிறோம் என குஷ்பூ கண்ணீரோடு கூறினார்.  

புதுடில்லி, ஏப்ரல் 18- கோடிக்கணக்கில் கடன் வாங்கி பின் நாட்டை விட்டு தப்பி சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் விரைவில் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய வங்கிகளில் ஏறக்குறைய ரூ. 9,000 கோடி வரை கடன் வாங்கி அதனைத் திருப்பி செலுத்தாமல் சர்ச்சைக்குள்ளாகியவர் தொழிலதிபர் விஜய் மல்லையா. கடன் கட்ட முடியாமல் நெருக்குதல் அதிகமான நிலையில் அவர் லண்டனுக்கு தப்பி சென்றார். 

லண்டனில் சுதந்திரமாக இருந்த விஜய் மல்லையா அங்கு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்தியாவின் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அவர் மீது பல அழைப்பாணைகளை அனுப்பியது. ஆனாலும், அவர் எந்த விசாரணைக்கும் ஆஜராகவில்லை. இதனையடுத்து அவருக்கு எதிராக நீதிமன்றம் மூலம் கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது.

தொடர்ந்து மத்திய அரசு சார்பில் அவரை நாடு கடத்தவும் இங்கிலாந்து அரசிடம் கோரிக்கை விடப்பட்டது. இந்நிலையில் லண்டன் ஸ்காட்லாந்து போலீசார் விஜய் மல்லையாவைக் கைது செய்தனர்.

மண்டியா, ஏப்ரல்,18- கர்நாடகா மாநிலத்திலுள்ள மண்டியா என்ற இடத்தில் திடிரென ஏராளமான குரங்குகள் இறந்து கிடந்ததைக் கண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பாண்டவபுரா என்ற வனப்பகுதியை ஒட்டிய இந்த ஊரிலுள்ள பிரசித்திப் பெற்ற கோயில் வட்டாரங்களில் குரங்குகள் இறந்து கிடந்தன. மேலும் பல குரங்குகள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தைக கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

# விஷம் வைக்கப்பட்ட பின்னர் மருத்துவர்களால்  காப்பாற்றப்பட்ட தாயும் சேயும்..#

இது குறிது மக்கள் உடனடியாகப் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். மேலும் வன விலங்குத் துறையினருக்கும் புகார் செய்யப்பட்டது. வனத் துறையினர் விரைந்து வந்து பார்த்தபோது பல குரங்குகள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தன. உடனடியாக அவற்றுக்குச் சிகிச்சை அளிக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர். 

அவற்றில் சிலவற்றை மட்டுமே அவர்களால் காப்பாற்ற முடிந்தது. இதற்கு என்ன காரனம் என்று குரங்குகளிடம் மருத்துவப் பரிசோதனை செய்து பார்த்ததில் அவற்றுக்கு விஷம் வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

மிகவும் கொடிய விஷம் என்பதால் பல குரங்குகள் உயிர் பிழைக்க வாய்ப்பில்லாமல் போனதாக வன விலங்குத் துறை மருத்துவ அதிகாரிகள் கூறினர்.

இந்தக் குரங்களுக்கு விஷம் வைத்தது யார்? இரக்கமற்ற அந்தக் கொடியவர்கள் யார்? என்பதைக் கண்டறியும் புலன் விசாரணையைப் போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். இவ்வட்டாரத்திலுள்ள சில விவசாயிகளும் போலீசாரால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

பயிர் விளைச்சல்களுக்கு இந்தக் குரங்குகளால் சேதம் ஏற்படும் என அஞ்சி அவர்களில் யாரேனும் விஷம் வைத்திருக்கக்கூடுமோ என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

More Articles ...