மும்பை, ஏப்ரல் 4- கல்லூரி மாணவர் ஒருவர் தான் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டதை முகநூலில் நேரலையாக ஒளிப்பரப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பெங்களூரைச் சேர்ந்த அர்ஜூன் பரத்வாஜ் எனும் மாணவர் மும்பையில் உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.காம் படித்து வந்தார். இந்நிலையில், நேற்று மாலை 6.30 மணிக்கு அந்த மாணவர் தான் தங்கிருந்த ஐந்து நட்சத்திர தாஜ் ஓட்டலின் 19வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துக் கொண்டார். 

தான் தற்கொலை செய்யும் முன் அதனைத் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்து விட்டு  அம்மாணவர் கீழே குதித்துள்ளார். 

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் அம்மாணவர் வழக்கம் போல இருந்ததாகவும் யாரிடமும் பிரச்சனை ஏதும் தரவில்லை என்பதால் யாருக்கும் சந்தேகம் வரவில்லை என போலீசார் கூறினர். தற்கொலைக்கு காரணம் அம்மாணவர் மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டிருந்ததால் தான் என போலீசார் தெரிவித்தனர். 

முன்னதாக, தற்கொலைச் செய்துக் கொண்ட மாணவர் தனது முகநூலில் தற்கொலை செய்து கொள்வது எப்படி என்று சொல்லி நேரடி ஒளிபரப்பு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

புதுடில்லி, ஏப்ரல் 4- இந்தியாவின் வர்த்தகக் கப்பலைச் சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தி சென்றனர். கடத்தப்பட்ட கப்பலில் 11 மாலுமிகள் இருந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் கடற்கொள்ளையர்கள் அதிகம். இங்கு அடிக்கடி கப்பல் கடத்தும் சம்பவங்கள் நடக்கும். இந்நிலையில், இந்தியாவைச் சேர்ந்த கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தி சென்றனர்.

சோமாலியா நாட்டு கடற்கரையை நோக்கி சென்றுக் கொண்டிருந்த வர்த்தக கப்பலை கடற்கொள்ளையர்கள் சுற்றி வளைத்தனர். வளைகுடா பகுதியான துபாயில் இருந்து இந்த கப்பல் சோமாலியாவின் பொஷாஸ்ஷோ துறைமுகம் நோக்கி சென்றபோது இந்த கடத்தல் சம்பவம் நிகழ்ந்ததாக கடற்கொள்ளை தடுப்பு உயரதிகாரி கூறினார்.

கடத்தப்பட்ட கப்பல் 11 மாலுமிகளுடன் புன்ட்லேண்ட் மாகாணத்தில் உள்ள ஈல் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. 

கடந்த மாதம், சோமாலியா கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த, எண்ணெய் டாங்கர் ஏற்றி வந்த கப்பலை, கொள்ளையர்கள் கடத்திச் சென்றது குறிப்பிடத்தக்கது.

ஶ்ரீநகர், ஏப்ரல் 3- வெடிகுண்டுகளுடன் டில்லிக்கு செல்ல முயன்ற எல்லைப் பாதுகாப்பு படை இராணுவ வீரர் கைதுச் செய்யப்பட்டார். அவர் எதற்காக வெடிகுண்டுகளை வைத்திருந்தார் மற்றும் டில்லியைத் தகர்க்க ஏதேனும் சதி திட்டமா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஶ்ரீ நகர் விமான நிலையத்தில் ஆடவர் ஒருவர் கைப் பையுடன் நின்றிருந்தார். டில்லி விமானத்தில் ஏறுவதற்காக காத்திருந்த அவ்வாடவரை விமான நிலைய அதிகாரிகள் சோதனை இட்டனர். அதில் இரு கையெறி வெடிகுண்டுகள் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. 

இதனைக் கண்ட அதிகாரிகள் அதிர்ச்சியைடைந்து உடனடியாக அந்த ஆடவரைக் கைதுச் செய்து விசாரித்தனர். அப்போது, அவ்வாடவர் எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த இராணுவ வீரர் என்பது தெரியவந்தது. காஷ்மீரின் உரி பகுதியில் பாதுகாப்பு பணியில் அவர் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது. 

இவர் எதற்காக கையெறி குண்டுகளை டில்லி விமானத்தில் கொண்டு செல்ல முயன்றார் மற்றும் இதில் தீவிரவாத பின்னணி ஏதேனும் உண்டா எனப் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

புதுடில்லி, ஏப்ரல் 1- டில்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்க திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலின் நேரில் சென்றார். போராட்டம் குறித்துப் பிரதமரைச் சந்திக்க முயற்சித்தபோதும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என அவர் கூறினார்.

வறட்சி நிவாரணம், கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் கடந்த 19 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஸ்டாலினும் டில்லி சென்று அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். அவருடன் எம்பி டிகேஎஸ் இளங்கோவன், திருச்சி சிவா ஆகியோரும் சென்றிருந்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், விவசாயிகளின் பிரச்சனையை மத்திய, மாநில அரசுகள் கண்டுக் கொள்ளவில்லை என கூறினார். இது தனக்கு மிகுந்த வேதனையைத் தருகிறது என அவர் கூறினார்.

புதுடில்லி, மார்ச்.31- இந்தியாவில் மத்தியப் பிரதேசத்திலிருந்து புதுடில்லிக்குப் பயணித்துக் கொண்டிருந்த இரயிலில் பின்பகுதியில் உள்ள எட்டு பெட்டிகள் திடீரென தடம் புரண்டன. இச்சம்பவத்தில் 25 பேர் படுகாயம் அடைந்தனர். ‘மகாகோஷல் எக்ஸ்பிரெஸ்’ எனும் அந்த இரயில் நேற்று அதிகாலை 2 மணியளவில், உத்தரப் பிரதேசத்தைக் கடக்கும்போது இச்சம்பவம் நிகழ்ந்தது.

தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு மீட்புப் பணிக் குழு விரைந்தது. காயம் அடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். கவிழ்ந்த ரயில் பாகங்களை அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் இது விபத்தா அல்லது திட்டமிட்ட சதியா என்று ஆராய்ந்து வருவதாக இரயில்வே துறையின் பிரதிநிதி அணில் சக்ஸேனா கூறினார்.

அந்த இரயிலோடு இருந்த தடம் புரண்ட பெட்டிகளின் இணைப்பைத் துண்டித்துவிட்டு, அந்த இரயில் புதுடில்லியில் உள்ள நிசாமுடீன் இரயில் நிலையத்திற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. 

இந்தியாவில் வெள்ளைக்காரர்கள் ஆட்சி செய்தபோது கட்டிய இரயில் தண்டவாளங்கள் பழுதுடைந்தும் மாற்றப்படாமலும் இன்னும் உபயோகத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. பயண சேவையின் டிக்கெட் விலைகளை அதிகரிக்காமல் இருக்க இதுபோன்ற பழுதுபார்க்கும் செலவுகளை அந்த இரயில்வே துறை தவிர்த்து வருகிறது என்றும் தெரிய வருகிறது. 

புள்ளிவிவரப்படி, இந்தியாவில் ஒரு நாளில் சுமார் 2 கோடியே 30 லட்சம் மக்கள் இந்த இரயில் சேவையை பயன்படுத்திகின்றனர் ஆனால் அரசாங்கத்தின் அலட்சியப் போக்கினால் இதுபோன்ற இரயில் விபத்துக்கள் நிகழ்ந்த வண்ணமாகவே உள்ளன என்று பலர் சாடுகின்றனர். 

கடந்த வருடம் உத்தர பிரதேசத்தில் இரயில் கவிழ்ந்ததில் 150 பயணிகள் உயிரிழந்தனர். கடந்த 2014ஆம் ஆண்டில்தான் இந்தியாவில் அதிகளவில் இரயில் விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டது என்று புள்ளிவிவரம் பதிவாகியுள்ளது. சுமார் 27 ஆயிரத்து 581 பேர் அந்த வருடம் இரயில் விபத்தில் பரிதாபமாக பலியாயினர்.

இதுபோன்ற கோர விபத்துக்களைத் தவிர்க்க தக்க நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று பலர் சமூக வலைத்தளங்களில் கருத்துப் பகிர்ந்து வருகின்றனர்.

பெங்களூரு, மார்ச்.30- கர்நாடகாவில் உள்ள கய்கா எனும் கிராமத்திற்குள் நான்கு மீட்டர் நீள நாகபாம்பு ஒன்று புகுந்ததில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த நாகபாம்பு மிகவும் சீற்றமாக இருந்ததை உணர்ந்த கிராமத்து மக்கள், மீட்புப் பணியினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.

தற்போது அந்த மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கடும் வறட்சி பரவி வருகிறது. அதனால் அந்த நாக பாம்பு தாகம் தாங்காமல் தண்ணீரைத் தேடி கிராமத்திற்குள் புகுந்துவிட்டது என மீட்புப் பணியினர் கூறினர்.

###கானொளி: நன்றி Caters Clips###

மீட்புப் பணியினர் அந்தப் பாம்பை ஒரு இரும்பு கம்பியல் பிடித்து, அதற்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்தனர். இந்தச் சம்பவத்தைப் பொதுமக்களில் ஒருவர் வீடியோ எடுத்து இணையத் தளத்தில் பதிவேற்றம் செய்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.

தண்ணீர் அருந்திய பின் அமைதியடைந்த அந்த நாகபாம்பை, பிடித்து மீட்பு பணியினர் வனவிலங்குகள் காப்பகத்திற்கு கொண்டு சென்றனர்.

கோப்புப் படம்

கராச்சி, மார்ச் 27- மீன் பிடிக்க சென்ற 100 மீனவர்களைப் பாகிஸ்தானின் கடற்படைக் கைதுச் செய்துள்ளது. தங்கள் நாட்டில் எல்லைப் பகுதிக்குள் மீன் பிடிக்க வந்ததாக கூறி அவர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.

குஜராத்தைச் சேர்ந்த 100 மீனவர்கள் கடந்த வாரம் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அப்போது எல்லைப் பகுதியைத் தாண்டி தங்களது நாட்டிற்குள் புகுந்து மீன் பிடித்ததாக கூறி பாகிஸ்தான் கடற்படை அந்த 100 மீனவர்களையும் கைதுச் செய்தது.

கைதுச் செய்யப்பட்ட அனைவரும் இன்று நீதிமன்றதில் நிறுத்தப்பட்டு தடுத்து வைக்கப்படுவர் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

கடந்த மார்ச் மாதம் இதே காரணத்தைக் காட்டி, பாகிஸ்தான் கடற்படை இந்தியாவின் 225 மீனவர்களைக் கைதுச் செய்தனர். அதேபோல, அண்மையில் 12 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைதுச் செய்தது குறிப்பிடத்தக்கது.

விஜயவாடா. மார்ச் 24- அமெரிக்கா, நியூ ஜெர்சியில் வசித்து வந்த இந்தியாவைச் சேர்ந்த அம்மாவும் 7 வயது மகனும் கொலைச் செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் இருவரும் ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூ ஜெர்சியில் மென்பொருள் நிபுணர்களாக வேலைச் செய்து வந்தனர் சசிகலாவும் (வயது 40) அவரது கணவர் ஹனுமந்தாவும். இவர்களுக்கு 7 வயதில் அனிஷ் சாய் என்ற மகன் இருந்தான். இவர்கள் கடந்த 9 வருடங்களாக நியூ ஜெர்சியிலேயே தங்கி வேலைச் செய்து வந்தனர். 

சசிகலாவும் மென்பொருள் நிபுணர் என்றாலும் அவர் வீட்டில் இருந்த தனது வேலையைக் கவனித்து வந்தார். இந்நிலையில், ஹனுமந்தா ராவ் நேற்று மாலை வேலை முடிந்து வீடு திரும்பியபோது வீட்டில் தனது மனைவியும் மகனும் கொலைச் செய்யப்பட்டு கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். 

சம்பவத்தை விசாரித்த போலீசார், அம்மாவும் மகனும் கழுத்து நெரிக்கப்பட்டு கொலைச் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். 

அண்மைய காலமாக அமெரிக்காவில் இருக்கும் இந்திய வம்சாவழியினர் கொல்லப்பட்டு வருவது இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர் கடந்த மாதம், தெலுங்கானாவைச் சேர்ந்த ஶ்ரீநிவாஸ் எனும் பொறியிலாளர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மும்பை, மார்ச்.24- விமானத்தில் இருக்கைப் பிரச்சனையினால் வாக்குவாதத்தில் ஈடுபட்டு விமான பணியாளரின் கண் கண்ணாடியை உடைத்து, சட்டையைக் கிழித்து 25 முறை செருப்பால் அடித்த சிவசேனா கட்சியின் எம்பி ரவிந்திரா கெய்க்வாட், இனி எந்த 'ஏர் இந்தியா' விமானத்திலும் பயணிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அவர் மீது போலீஸ் புகாரும் அளித்தது ஏர் இந்தியா நிறுவனம். இந்தச் சம்பவம் எல்லா எம்பிக்களுக்கும் மிகவும் அவமானத்திற்குரியது எனப் பலரும் ரவிந்திராவுக்கு கண்டனம் தெரிவித்தனர். அவர் இதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் பலர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

புனேயிலிருந்து புதுடில்லிக்கு சென்ற 'ஏர் இந்தியா ஏஐ 852' விமானத்தில் நேற்று இச்சம்பவம் நடந்தது. அவர் வைத்திருந்த பயண டிக்கெட் வேறொரு பயணத்திற்கு உரியது.

ஆனால், அதில் பயணிக்காமல் இந்த விமானத்தினுள் அவர் நுழைந்துள்ளார். முதல் வகுப்பு டிக்கெட் வைத்திருந்த இவருக்கு இரண்டாம் வகுப்பு இருக்கை அளிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்தார். உண்மையில் அந்த விமானத்தில் முதல் வகுப்பு பயண வசதியே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

புதுடில்லி சென்றடைந்த பின்னர் இறங்குமாறு கோரியும் அந்த விமானத்தை விட்டு இறங்காமல் ஒரு மணிநேரம் அங்கேயே அமர்ந்திருந்தார் ரவிந்திரா. இதனால் இவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த விமான பணியாளர், பிரதமர் நரேந்திர மோடியிடம் புகார் அளிப்பேன் என்று கூறினார். 

இதைக் கேட்டு கோபமுற்ற ரவிந்திரா, அந்த விமான பணியாளரின் கண் கண்ணாடியை உடைத்து, சட்டையைக் கிழித்து, காலணியால் 25 முறை அடித்துள்ளார். இதற்கு சிறிதும் வருந்தாத ரவிந்திரா உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியிலும் இதைப் பற்றிக் கூறியிருக்கிறார்.

தொடர்ந்து பலமுறை விமானப் பயணிகளால் ஏற்படும் பிரச்சனைகளில் இது உச்சக்கட்டமாக இருப்பதாகவும் இதற்காக சிறப்புப் பணிக்குழு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்றும் பயணிகளும் விமான பணியாளர்களும் தங்களுக்கு நிகழும் பிரச்சனைகளை இந்தக் குழுவிடம் முறையிடலாம் என்றும் பொதுவிமான போக்குவரத்து அமைச்சர் அஷோக் கஜபதி ராஜூ தனது டிவிட்டரில் கூறியுள்ளார்.

ஹூப்ளி, மார்ச் 24- கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் நான்கு கர்ப்பிணி பெண்களைப் படுக்கும் வகையிலான ஒற்றை தள்ளு வண்டியில் கொண்டு சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காணொளி தற்போது இணையத்தில் பரவலாகி வருகிறது.

கர்நாடகா, ஜுப்ளி பகுதியில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் நேற்று காலை கர்ப்பிணி பெண்கள் சிலர் தங்களது வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வந்திருந்தனர். அப்போது, அவர்களை ஸ்கேன் செய்வதற்காக ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு ஊழியர்கள் கொண்டுச் சென்றனர். 

   ###காணொளி: நன்றி டிவி9 கர்நாடகா

வழக்கமாக, படுக்கும் வகையிலான தள்ளு வண்டியில் வைத்து தான் அவர்களை மற்ற பகுதிக்கு தள்ளி செல்வர். ஆனால், நேற்று பரிசோதனைக்கு வந்திருந்த நான்கு கர்ப்பிணி பெண்களையும் மருத்துவமனை ஊழியர் ஒருவர் ஒரே தள்ளு வண்டியில் அமர வைத்து கொண்டுச் சென்றார். அவர்களை மின்தூக்கியில் ஏற்றி செல்ல இவ்வாறு செய்யப்பட்டது.

இதனை யரோ இருவர் காணொளியாக படம் எடுத்து, அதை இணையத்தில் வெளியிட்டார். காணொளியைப் பார்த்த பொதுமக்கள் இச்செயலை வன்மையாக கண்டித்தனர். இச்சம்பவத்திற்கு காரணம் வண்டி பற்றாக்குறையா அல்லது ஊழியர்களின் சோம்பேறி தனமா என்றும் கேள்வி எழுப்பினர். 

இதனையடுத்து, மருத்துவமனை மீது புகார் செய்யப்படவே, மருத்துவமனை நிர்வாகம் மூன்று ஊழியர்களைப் பணி இடைநீக்கம் செய்தது. 

முஷாபார் நகர், மார்ச்.23- தன்னுடைய மகளின் காதலுக்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வந்த தந்தை, ஆவேசமடைந்து பெற்ற மகளின் கழுத்தை அறுத்து, பிணத்தைக் கொண்டு போய் அவளுடைய காதலின் வீட்டு முன்பு போட்ட கொடூரச் சம்பவம் இங்கு திகிலைப் பரப்பியுள்ளது

தன் மகளின் காதலுக்கு எதிராக இருந்த ஜப்பார் குரேஷி மகளைக் கொன்று காதலன் வீட்டின் முன் வீசியது முஸாபார் நகர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது.

பலமுறை தடுத்தும் அந்தப் பெண் நேற்றிரவு அவள் காதலனுடன் அவர்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஒரு காலியான கடையில் ரகசியமாக சந்தித்து பேசிக் கொண்டிருந்தாள். அதைக் கண்ட அவளின் தாய் அந்தக் கடையை வெளிப்புறம் பூட்டிவிட்டு வேலைக்கு சென்ற தன் கணவனுக்கு தகவல் தெரிவித்தார். 

தன் மகனை ஒரு கடையில் பூட்டி வைத்திருக்கிறார்கள் என்று தெரிந்த அந்த பையனின் குடும்பத்தினர் அருகிலிருக்கும் போலிஸ் நிலையத்தில் புகார் செய்து அந்த இரு காதலர்களையும் கடையிலிருந்து மீட்டனர்.

வேலையிலிருந்து வீடு திரும்பிய ஜப்பார் குரேஷி, ஆத்திரமடைந்து தன் மகளை அடித்துக் கழுத்தை அறுத்துக் கொன்றார். பிறகு அந்த பெண்ணின் சடலத்தை அவள் காதலனின் வீட்டின் முன்புறம் எறிந்துவிட்டு அருகிலிருக்கும் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். 

இந்த சம்பவம் குறித்து முஸாபார் நகரில் கலவரம் ஏற்படக்கூடும் என்பதால் போலீசார் முன் எச்சரிக்கையாக பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். 

More Articles ...