அநொய்டா,  டிசம்பர் 13-    இந்திய அரசாங்கம் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மீட்டுக்கொண்டதையடுத்து,  மாற்றுத் திறனாளிகளான மகாவீர் மற்றும் அவரது  மனைவி  இருவரும்  கவலையடைந்தனர்.   உத்தரபிரதேச மாநிலம்,கிரேட் நொய்டாவைச் சேர்ந்த இவர்களிடம்,   தங்கள் மகளின் திருமணம் நடத்த   பணம் இல்லை. பின்னர் குறிப்பிட்ட சிலரை மட்டும் அழைத்து திருமணத்தை நடத்த திட்டமிட்டனர்.   

பின்னர் குறிப்பிட்ட  சிலரை மட்டும் அழைத்து திருமணத்தை நடத்த திட்டமிட்டனர். திருமண விருந்தில் கலந்துகொண்ட விருந்தினர்களுக்கு வெறும் டீ மட்டும் வழங்கப்பட்டது.பணத்தட்டுபாடு காரணமாகத் தங்கள் மகளின் திருமணத்தை எளிமையாக நடத்தினர். 

மணமகனை ஆசிர்வதிக்கும் போது, மகாவீர் வெறும் 11 ரூபாய் மட்டுமே கொடுத்தார். இக்குடும்பத்தின் நிலையைப் பார்த்து, கிராமத்திலுள்ள சில இளைஞர்கள்  தங்கள் செலவில் இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தனர். 

அண்மையில் கர்நாடகாவில் 650 கோடி ரூபாய் செலவில்  திருமணம் நடத்தப்பட்ட அதே இந்தியாவில் தான், வெறும் டீ  மட்டும் வழங்கப்பட்ட திருமணமும் நடந்தேறியுள்ளது என பலர் கருத்து தெரிவித்துள்ளனர். 

 

 

ஹால்ட்வானி, டிசம்பர் 5-  உத்தரகாண்ட் மாநிலம்  ஹால்ட்வானி என்ற இடத்தில் கால்வாயில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மிதந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனைக் கண்ட பொது மக்கள் மீன் வலையை வீசி பணத்தை எடுத்தனர். 

காஷ்மீர், டிசம்பர் 3- காஷ்மீரில் குல்காம் மாவட்டத்தில் இராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்குமிடையே கடும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. அப்போது இரு தீவிரவாதிகள்   இருவர் தப்பி ஓடிவிட்டனர். இவர்களைத் தேடும் பணியில்  பாதுகாப்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

முன்னதாக, காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தில் நேற்றிரவு தீவிரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது, இந்திய இராணுவத்தினரும்  பதிலுக்குத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இன்று காலை வரை நீடித்த துப்பாக்கிச் சண்டையைத் தாக்குப் பிடிக்க முடியாமல் இரண்டு தீவிரவாதிகள் தப்பி விட்டனர். 

ஜம்மு-காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதால், அம்மாநிலம் முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  

கடந்த மூன்று நாட்களில் நடைபெற்ற  இரண்டாவது தாக்குதல் இதுவாகும். 

டெல்லி,  டிசம்பர் 3-  கடந்த ஆண்டைப் போலவே இவ்வாண்டும், டெல்லியில்  குளிர்காலத்தில் கடும் உறைபனி பெய்து வருகிறது.   பின்னிரவில் தொடங்கும்  பனி மூட்டம் காலை 10 மணி வரை  நீடிக்கிறது.   சாலையில்  செல்லும் வாகனங்கள்  முன்புற விளக்கை எரியவிட்டுச் செல்லும் அளவுக்கு    பனிப்பொழிந்து வருகிறது.  டெல்லி  இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ள  பகுதியிலும் இதே நிலை ஏற்பட்டதால், ஓடு தளம் இருண்டு காணப்பட்டது. 

இதனால் நேற்றும் இன்றும் ஏறக்குறைய  140க்கும் மேற்பட்ட விமானப் பயணங்களில்  தாமதம் ஏற்பட்டது.  மேலும் 16 விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன. 

இதே போல் டெல்லி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய 41 ரயில்களின் நேரமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. டெல்லிக்கு வந்து சேர வேண்டிய 81 ரயில்கள் காலத்தாமதமாக வந்து சேரும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

டெல்லி நகரம் முழுவதும் பனித்திரையால் மூடப்பட்டது போல்  காட்சியளிப்பதால்,  மக்களின் இயல்பு வாழ்க்கைப் பெரிதும்  பாதிக்கப்பட்டுள்ளது.   இந்நிலை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை  மையம் தெரிவித்துள்ளது. 

மைசூரு,  டிசம்பர்  1 -  மைசூரு அருகே விடுதி ஒன்றில் கொதிக்கும் சாம்பாரில் விழுந்து, மூன்று வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. 

மைசூரைச் சேர்ந்த மகாதேவச்சாரி - கவிதா  தம்பதிக்கு மூன்று வயது குழந்தை ஒன்று உள்ளது. கவிதா விஜயநகரில் உள்ள விடுதி ஒன்றில் பாத்திரம் கழுவும் வேலை செய்து  வருகிறார்.  குழந்தையைக் கவனித்துக் கொள்ள ஆள் இல்லாததால், கவிதா வேலைக்குச் செல்லும் போது குழந்தையைத் தன்னுடன் கொண்டுச் சென்றுள்ளார்.  

இந்நிலையில்  கடந்த திங்கட்கிழமை கவிதா பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த போது, அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அடுப்பில் பெரிய அண்டாவில் கொதித்துக் கொண்டிருந்த சாம்பாரில்  தவறுதலாக விழுந்து விட்டான். கொதிக்கும் சூட்டில் விழுந்த குழந்தை வலி தாங்காமல் துடிதுடித்து கதறினான்.  சத்தம் கேட்டு ஓடி வந்தவர்கள், குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். 

எனினும், உடல் முழுவதும் வெந்து தீக்காயங்களுக்கு இலக்கான குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.  

 

சென்னை, டிசம்பர் 1-  தி.மு.க  கட்சியின் தலைவர் மு.கருணாநிதி  உடல் நலக் கோளாறு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஊட்டச்சத்து, மற்றும் நீர்ச்சத்து குறைபாட்டிற்காக அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . இதற்கான அவர் இன்னும் சில நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெறுவார் என்றும் கூறப்படுகிறது.  

மருந்துகளால் ஏற்பட்ட  உடல் ஒவ்வாமை காரணமாக கடந்த ஒரு மாத காலமாக பொது நிகழ்வுளில் கலந்துகொள்வதைத் தவிர்த்து வந்தார் கருணாநிதி  பொது நிகழ்வுகளில் பங்கேற்பதைத் தவிர்த்து வந்தார்.  மேலும் கருணாநிதி ஓய்வில் ஒருப்பதால், பார்வையாளர்கள் அவரைச் சந்திக்க வருவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

டெல்லி,  நவம்பர் 29-கறுப்பு பணத்தஒ ஒழிக்க பிரதமர் மோடி எடுத்து வரும் நடவடிக்கைக்குப் பெங்களூரைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஆதரவு தெரிவித்துள்ளார். 

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள்  செல்லாது என்ற அறிவிப்பை பிரதமர் மோடி கடந்த 8-ஆம் தேதி அறிவித்தார். இந்நிலையில், கர்நாடக மாநிலம்   பெங்களூரு என்.பி பள்ளியில் 2-ஆம் வகுப்பு பயின்று வரும் ஶ்ரீயா என்ற சிறுமி கறுப்பு பண ஒழிப்புக்கு பிரதமர் மோடி எடுத்து வரும் நடவடிக்கை குறித்து ஆதரவு அளிக்கும் வகையில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 

இந்தியாவை கறுப்புப் பணம் இல்லாத நாடாக மாற்ற மோடி எடுத்து வரும் நடவடிக்கையால் ஏழை மக்கள் பயனடைவார்கள் என்று அக்கடிதத்தில்  அந்த சிறுமி  குறிப்பிட்டுள்ளார். 

 

சென்னை, நவம்பர் 28-  திருமணக்கனவுகளோடு இருந்த மணப்பெண்ணை, திருமணத்திற்கு முந்தைய நாள் இரு  பெண்கள் அவரது முகத்தில் ஆசிட் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். 

உத்தரபிரதேசம், பரேலி என்ற மாவட்டத்தைச் சேர்ந்த   இளம்பெண் ஒருவருக்குத் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்குள்ள ஓர் மண்டபத்தில், மணமகள்  தயார் செய்யப்பட்டாள்.   அங்குள்ள  ஓர் அறையில் தமது பாட்டியுடன் அந்த மணமகள் இருந்தபோது, திடீரென அந்த அறைக்குள் இரண்டு பெண்கள் புகுந்துள்ளனர். ஒரு பெண் மணமகளைப் பிடித்துக் கொள்ள,  மற்றொரு பெண் அவரது முகத்தில் எரித்திராவகத்தை ஊற்றியுள்ளார்.   

வலியால் மணப்பெண் அலறித் துடித்த போது, இருவரும் வெளிப்புறமாக கதவை பூட்டி விட்டுத் தப்பியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம்  அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை, நவம்பர் 22-  தமிழகத்தில் தஞ்சை,அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் நெல்லித்தோப்பு ஆகியத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்  வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றன. இத்தேர்தலில், 3 தொகுதிகளிலும்  ஆளுங்கட்சியான அ.தி.மு.க  வெற்றிப்பெற்ற நிலையில், நெல்லித் தோப்பு தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 

திருப்பரங்குன்றத்தில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஏ.கே போஸ் 27,744 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். அவருக்கு 78,610 வாக்குகள் கிடைத்த வேளையில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர், சரவணனுக்கு 50866 வாக்குகளும் கிடைத்தன.

அரவக்குறிச்சி தொகுதியில், அதிமுக வேட்பாளர்  செந்தில் பாலாஜி  14,648 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றிப்பெற்றார்.  இத்தொகுதியில் செந்தில் பாலாஜிக்கு 47,666 வாக்குகள் கிடைத்த வேளையில், அவருடன் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கே.சி பழனிசாமிக்கு 33018 வாக்குகள் கிடைத்தன. 

இதனிடையே தஞ்சையில்,   அதிமுக வேட்பாளர் ரங்கசாமி 27,468 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். அவருக்கு 90,784 வாக்குகள் கிடைத்த நிலையில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அஞ்சுகத்திற்கு 63,316 வாக்குகள் கிடைத்தன.  

நெல்லித் தோப்பு பகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த  நாராயணசாமி வெற்றி பெற்றார். அவருக்கு 18,707 வாக்குகள் கிடைத்தன. 

கான்பூர்,  நவம்பர் 20-   உத்தரபிரதேச மாநிலம்  புக்ரையான் எனும் இடத்தில் விரைவு ரயில்  விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்குப் பிரதமர்  மோடி மற்றும், ரயில்வே அமைச்சர் சுரேஷ் பாபு ஆகியோர் நஷ்ட ஈடு அறிவித்துள்ளனர். பாட்னா-இந்தூர் விரைவு  தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் இதுவரை 63 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவ்விபத்தில் காயமடைந்த 100க்கும் மேற்பட்டோர் மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விபத்துக்குள்ளான  ரயில் பெட்டிகள் குறுக்கும் நெடுக்குமாக  கிடப்பதால்   ரயில் போக்குவரத்துப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில் இவ்விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாயும்,  பலத்த காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். 

இதே போல், மத்திர ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவும், ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின்  குடும்பங்களுக்கு 3.50 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு 25 ரூபாயும் வழங்கப்படும் என தெரிவித்தார். 

63 பேரை பலிகொண்ட இவ்விபத்து குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. 

புதுடில்லி,  நவம்பர் 18 -செல்பி எடுக்கும் போது ஏற்படும் மரண எண்ணிக்கையில் இந்தியா தான் முதலிடம் வகிப்பதாக,  ஆய்வில் தெரியவந்துள்ளது.  

வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட  இந்த ஆய்வை   புது டில்லியில் உள்ள இன்ட்ராபாஸ்ட்ரா  கழகத்தின்  தகவல் பிரிவு மேற்கொண்டுள்ளது. 

அந்த ஆய்வில், உலகம் முழுவதும் 126 பேர் செல்பி புகைபடம் எடுக்கும் போது மரணம் அடைந்துள்ளனர். இதில் 76 சம்பவங்கள் இந்தியாவில் நிகழ்ந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 

பாகிஸ்தான்  9 மரணச் சம்பவங்களுடன் இரண்டாவது இடத்தையும், மூன்றாவது இடத்தில் 8 சம்பவங்களுடன் அமெரிக்கா, ரஷ்யா  சம்பவங்கள், சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் முறைய 4 சம்பவங்களையும், ஸ்பெயின் 3 சம்பவங்களையும் பதிவு செய்துள்ளது அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 

இந்தோனேசியா, போர்த்துகள்,  பெரு, துருக்கி ஆகிய நாடுகள் முறையே 1 சம்பவங்களும், ரொமானியா, ஆஸ்திரேலியா, மெக்ஸிகோ தென்னாப்பிரிக்கா, செர்பியா, சிலே, நேபாள் மற்றும் நேபாள் ஆகிய நாடுகள் முறையே 1 சம்பவங்களையும் பதிவு செய்துள்ளன. 

செல்பி எடுக்கும் போது மரணமடைந்தவர்களில் பெரும்பாலோர் 24 வயதுக்கும் கீழ்ப்பட்டவர்களாவர். 

இவ்வாறு செல்பி எடுக்கும் போது நிகழும் மரணங்கள் பெரும்பாலும் கட்டிடத்திலிருந்து விழுவது (29 சம்பவங்கள்), மலையிலிருந்து விழுவது மற்றும் ரயில் மோதுவது (11 சம்பவங்கள்) ஆகியவற்றால்   நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles ...