டெல்லி,   நவம்பர் 17-  பிரதமர் மோடியின் தாய் ஹிரோபன், தன்னிடம் இருந்த 500 மற்றும் 1000  ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிக்குச் சென்றது கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது. தள்ளாடும் வயதில் வங்கிக்குப் பணம் மாற்றச் சென்ற அவரை பத்திரிகைகள் பேட்டி எடுத்தன.  

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  'மோடி எனக்கு மகனே இல்லை, எனக்கென்று யாரும் கிடையாது. மோடி என்வயிற்றில் பிறந்தாலும் அவன் பாரத மாதாவின் பிள்ளையாகி பல வருடங்கள் ஆகிவிட்டது.

மோடி எனக்கு மகன் இல்லை அவன் இந்த தேசத்தின் மகன் அவனை நான் இந்த தேசத்திற்கு தத்து கொடுத்துவிட்டேன்' என்று கூறி ஆனந்தக் கண்ணீர் விட்டார்.

டெல்லி, நவம்பர் 17- இந்தியாவில் புதுடில்லி உள்ளிட்ட சில வடமாநிலங்களின் சில பகுதிகளில் இன்று காலை 4.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.   

ஹரியானா மாநிலம், பவால் நகரின் தெற்குப் பகுதியிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையமிட்டிருந்தது. 

ரிக்டர் கருவியில் 4.2-ஆகப் பதிவாகிய இந்நிலநடுக்கத்தால் உயிருடற்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. 

டெல்லி, நவம்பர் 11- ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரும்  தமிழக அரசின் சீராய்வு மனுவை உச்சமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது. இதன் மூலம், ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்து பிறப்பித்த உத்தரவு தொடரும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

உச்சநீதிமன்றத்தில், தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு அனுமதித்து மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கைக்கு எதிராக விலங்குகள் நல அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன. 

இதனால் ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இத்தடைக்கு எதிரான தமிழக சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.  

இதனையடுத்து, இம்மனு மீதான இறுதி விசாரணை இன்று நடைபெற்றது.அப்போது, குதிரைப்பந்தயங்களுக்கும் பட்டாசுகளுக்கும் தடை விதிக்கவில்லை.ஆனால், ஜல்லிக்கட்டுக்கு மட்டும் தடைவிதிப்பது ஏன் என கேட்கப்பட்டது. 

இக்கேள்விக்கு பதிலளித்த நீதிபதிகள், 'ஜல்லிக்கட்டை பொழுதுபோக்காக நடத்த முடியாது, மத ரீதியான நிகழ்ச்சியாகவும் பார்க்க முடியாது. ஜல்லிக்கட்டு என்பதே கொடூரமானது. எனவே, தமிழக அரசின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என தெரிவித்துவிட்டனர். 

டெல்லி, நவம்பர் 16- பார்க்கும் பொருளை ஏதாவது எடுத்து வாயில் எடுத்து வைத்துவிடுவார்களோ என்ற பயம் சிறு குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு எப்போதுமே இருக்கும். ஆனால், இவ்வாறு கண்ணில் படும் மண், சிறு கற்கள், என எதையாவது எடுத்து வாயில் போட்டுக்கொள்ளும் பழக்கம் இருந்தாலும், சில வருடங்களில் அப்பழக்கம் மறைந்துவிடும்.  

ஆனால், இந்தியாவைச் சேர்ந்த 78 வயது மூதாட்டி ஒருவர்,  தமது நீண்ட ஆயுளுக்குக் காரணம் மண் சாப்பிடுவது தான் என கூறுகிறார். 

சிறு வயதாக இருக்கும் போது தமக்கு அடிக்கடி  வயிற்று உப்புசம் உள்ளிட்ட வயிற்றுக்கோளாறுகள்  குஸ்மாவதி எனும் அந்த மூதாட்டிக்கு இருந்து வந்தது. ஆனால், நாளடைவில்,  மண் சாப்பிடத் தொடங்கியதும், அவரது தீராத வயிற்று வலியும், வயிறு கோளாறுகளும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டதாக குஸ்மாவதி தெரிவித்தார். 

"இந்த அழுக்கான மண்ணை இவர் எப்படித்தான் சாப்பிடுகிறாரோ என மற்றவர்கள் முகம் சுளித்தாலும்,மண் உப்பும், இனிப்பும் கலந்த சுவையைத் தமக்குத் தருவதாக குஸ்மாவதி கூறுகிறார். 

இதனிடையே, குஸ்மாவதியைச் சோதித்த மருத்துவர்கள், அவருக்கு  மண் சாப்பிடுவதால் எந்த  பிரச்சனையும் இல்லை என்பதை உறுதி படுத்தியுள்ளனர்.  ஆனால், குஸ்மாவதியின் இந்த பழக்கம் குறித்து அறியும் பலர், மண் சாப்பிடுவதால், கண்ணுக்குப் புலப்படாத உடல் நலக்கோளாறு அவருக்கு ஏற்படலாம் என  கவலை  தெரிவித்துள்ளனர். 

 

டெல்லி,  நவம்பர் 16-  டெல்லி அருகே  ஒரு திருமண விழாவிற்கு வந்திருந்த பெண் சாமியார் ஒருவரும் அவருடைய கோஷ்டியும் துப்பாக்கியால் சுட்டு சுட்டு கொண்டாடிய போது,  தோட்டா பாய்ந்து பெண் ஒருவர் பரிதாபமாக பலியான சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

இச்சம்பவத்தைத் தொடர்ந்து அந்த சாமியார் கோஷ்டி அங்கிருந்து தப்பி விட்டது.  

சாத்வி  தேவா தாக்கூர் எனும் அந்த பெண் சாமியார் கலந்துகொண்டார். விழாவில் தங்களை மிகைப்படுத்திக்காட்டுவதற்காக, அவர்கள் துப்பாக்கிகளால் வானை நோக்கி  சுட்டு சுட்டு கொண்டாடினர். அப்போது திடீரென மணமகனின் அத்தை மீது குண்டு பாய்ந்ததில் அவர் நிலைக்குலைந்து விழுந்து பலியானார். விபரீதத்தை உணர்ந்த  அந்த சாமியார் கோஷ்டி அங்கிருந்து மாயமானது. 

பாவம் திருமண வீட்டு உறவினர்கள் தான் கதறித்துடித்தனர். போலீசார் தற்போது, இவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

டெல்லி,  நவம்பர் 15-  இந்தியப்  பிரதமர் நரேந்திர மோடியின் தாய்  தன்னிடம் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிக்கு வந்த சம்பவம் பரபரப்பாகியுள்ளது. 

தங்களிடம் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற இந்திய மக்கள் வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் வரிசை பிடித்து காத்திருக்கின்றனர்.   பிரதமரின் இந்த திடீர் அறிவிப்பால், மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். 

இந்நிலையில்,  குஜராத் மாநிலத்தில் வாழும், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார்  வங்கிக்கு வந்து தம்மிடம் உள்ள பணத்தை மாற்றியுள்ளார். மோடியின் தாயாருக்கு 97 வயதாகிறது. பென் காந்திநகரில் உள்ள வங்கிக்கு மோடியின் தாயார் சக்கர நாற்காலியில் வந்தார். 

தள்ளாடியபடி நடந்து வந்த அவர் தம்மிடம் உள்ள பழைய 500 மற்றும் ரூபாய்களை மாற்றி புதிய நோட்டுகளாக 4500 ரூபாயை அவர் பெற்றுச் சென்றார். 

கடந்த  10-ஆம் தேதி முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதில் பிரதமரின் தாய் கூட விதிவிலக்கு அல்ல என்பதையே நமக்குப் புலப்படுத்துகிறது. 

 

சூரத், நவ.15- ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் வாபஸ் பெற்ற பிறகு நடக்கும் சம்பவங்கள் பல ஆச்சரியத்தை தந்து கொண்டிருக்க, குஜராத் மாநிலத்தில் வைர வியாபாரி ஒருவர் தன்னிடம் இருந்த ரூ.6000 கோடி கறுப்புப் பணத்தை வருமான வரித்துறையிடம் ஒப்படைத்துள்ளார்.

சூரத்தில் கட்டுமானத் தொழில், ரியல் எஸ்டேட் மற்றும் வைர வியாபாரம் செய்பவர் லால்ஜி பாய் பட்டேல். மோடியின் சொந்த ஊரான குஜாத்தில் பிறந்து வளர்ந்தவர் இவர். பெரிய பணக்காரராக விளங்கும் இவர், பிரதமர் மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து கறுப்புப் பணத்தை மாற்ற முயன்றுள்ளார். இவர் மாற்ற நினைத்தது வெறும் ரூ.6000 அல்ல, ரூ.6000 கோடியை.

இவ்வளவு பெரிய தொகையை மாற்ற முடியாது என்ற நிலையில் என்ன செய்வது யோசித்த அவர் பேசாமல் அதனை வருமான வரித்துறையிடமே கொடுத்து விடலாம் என முடிவெடுத்து அவ்வாறு செய்துள்ளார். ஒரு ஆளிடம் மட்டும் கறுப்பு பணமாக இவ்வளவு பெரிய தொகையா என வருமான வரித்துறை அதிர்ச்சியடைந்ததாக தகவல். 

இந்நிலையில், கறுப்பு பணம் வைத்திருப்போரிடம் 30 விழுக்காடு வரியும் வரிப் பணத்தின் மீது 200 விழுக்காடு வரி விதிக்கப்படும் என அரசாங்கம் கூறியுள்ள நிலையில் இந்த வைர வியாபாரி வரியாக மட்டும் ரூ. 5400 கோடி ரூபாய் தொகையைச் செலுத்த வேண்டும்.

இந்த லால்ஜி பற்றி மற்றொரு தகவலும் உண்டு. மோடி அணிந்திருந்த அதிக விலை மதிப்புடைய ஆடையை இவர் தான் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

டெல்லி,  நவம்பர் 15- விடிந்தால் கல்யாணம் ஆக இருந்த நிலையில்,  கையில் பணம் இல்லாததால், மணமகன்  விடிய விடிய  ஏ.டி.எம் அலுவலகம் முன் காத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியா முழுவதுமுள்ள மக்கள் 500 மற்றும் 1000 ரூபாயை மாற்றுவதற்காக வங்கிகள் மற்றும் ஏ.டி.எம் மையங்களில் வரிசை பிடித்து காத்திருக்கின்றனர். இவர்களில், டெல்லியைச் சேர்ந்த சுனில் என்பவர்,  நாளை திருமணத்தை வைத்துக்கொண்டு,   கையில் பணமில்லாததால் மணமகன் ஒருவர் விடிய விடிய  ஏ.டி.எம்  முன்பு விடிய விடிய காத்திருந்துள்ளார். 

திருமணத் தேவைக்காகப் பலருக்கு அவர் பணம் கொடுக்க வேண்டியிருந்ததால், பணம் எடுப்பதற்காக விடிய விடிய காத்திருந்ததாக அவர் தெரிவித்தார்.  

தமது  இரு சகோதரர்களும் வெவ்வேறு ஏ.டி.எம் மையங்கள் முன்பு காத்திருப்பதாகவும், சுனில் தெரிவித்தார். 

மும்பை, நவ.14- ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் வாபஸ் பெறப்படும் என பிரதமர் மோடி அறிவித்ததை அடுத்து பழைய நோட்டுகளை மாற்றி கொள்ள மக்கள், ரூ.1.5 லட்சம் கோடி பணத்தை வங்கிகளில் வைப்பு தொகையாக செலுத்தியுள்ளனர்.

கடந்த 8ம் தேதி மத்திய அரசு இரு நோட்டுகளை வாபஸ் பெற்றதை அறிவித்ததை அடுத்து, மக்கள் தங்களிடம் இருந்த பணத்தை மாற்றி கொள்ள வங்கிகளில் வரிசை கட்டி நின்றனர். 10ம் தேதி முதலே வங்கிகளில் பணத்தை மாற்ற முடியும் என்ற நிலையில் கடந்த 4 நாட்களில் மட்டும் இதுவரை ரூ.1.5 லட்சம் கோடி வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது.

இதில் ஸ்திரெய்ட் பேங்க் ஆஃப் இந்தியா எனும் வங்கியில் மட்டும் ரூ.75,945 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதோடு, ரூ.3,700 கோடி அளவிலான ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டுள்ளன. 

இரு நோட்டுகளை அரசு வாபஸ் வாங்கிய வேளை, ரூ.2000 நோட்டினை அரசு அறிமுகப்படுத்தியது. எனவே, பொதுமக்கள் புதிய நோட்டினை பெறவும் வங்கிகளில் முறியடித்தனர். நேற்று வரை ரூ.7705 கோடி மதிப்பிலான ரூ.100 மற்றும் ரூ.2000 நோட்டுகள் வங்கியிலிருந்து எடுக்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

போபால், நவ.10- ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை மீட்டுக் கொள்வதாக பிரதமர் மோடி அறிவித்த நிலையில், பொதுமக்கள் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். கல்யாண வீடு முதல் இறப்பு வீடுகள் வரை அனைவரும் சங்கடத்தில் சிக்கியுள்ளனர்.

இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் சதார்பூரில் மூதாட்டி ஒருவரின் உடலை அடக்கம் செய்வதில் சிக்கல் உண்டானது. 70 வயது பாட்டியான ராஜ்பாய், நீண்ட நாள் உடல் நலமில்லாமல் இருந்துள்ளார். வயதானவர் என்பதால் இவரின் உடலை உடனடியாக அடக்கம் செய்ய குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

ஆனால், ரூ.500, ரூ1000 செல்லாது என்ற அறிவிப்பின் எதிரொலியாய் இறுதி சடங்குக்கு தேவையான எந்த பொருட்களையும் அவர்களால் வாங்க முடியவில்லை. எவ்வளவோ முயன்றும் கடைக்காரர்கள் பணத்தை வாங்க மறுத்துள்ளர். தங்களிடம் குறைந்த அளவு 50 மற்றும் 100 ரூபாய் மட்டுமே இருக்க, என்ன செய்வது என்று தெரியாமல் இருந்துள்ளனர்.

இவர்களின் சூழ்நிலை பார்த்து அந்த ஊரில் இருந்த மக்கள், தங்களிடம் இருந்த 100 மற்றும் 50 ரூபாய் நோட்டுகளை கொடுத்து உதவி செய்துள்ளனர்.

அதன் பிறகு தான், மூதாட்டியின் இறுதி சடங்கு செய்யப்பட்டு உடல் தகனம் நிறைவு பெற்றது. இதனைக் கண்ட ஊர் மக்கள் இன்னும் என்ன பிரச்சனைகளைத் தாங்கள் எதிர்நோக்க வேண்டுமோ என குழப்பத்தில் இருக்கின்றனர்.

புதுடில்லி, நவ.9- இந்தியாவில் இன்று முதல் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அதிரடி அறிவிப்பினை வெளியிட்டார். இந்த அதிரடி அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளில் காலையிலேயே குவிந்தனர்.

விடியும் முன்னமே நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்த நிலையில், இந்த திடீர் அறிவிப்பால் வங்கி கணக்குகளில் மாற்றம் செய்ய வங்கிகளுக்கு இன்று விடுப்பு விடப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 30ம் தேதிக்குள் பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றி கொள்ளலாம் என மோடி அறிவித்திருந்த போதும் மக்கள் பயம் கொண்டு தங்கள் நோட்டுகளை மாற்றிக் கொள்ள துடித்தனர்.

கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் ரூ.1.25 லட்சம் கோடி கருப்பு பணத்தை அரசாங்கம் மீட்டுள்ளது. ஊழலை ஒளிக்க மின்னூடக பயன்பாட்டினை அமல்படுத்துவதே சிறந்த வழி என அரசாங்கம் உணர்ந்துள்ளதால் இந்த அறிவிப்பை வெளியிடுவதாக மோடி கூறினார்.

More Articles ...