திருவனந்தபுரம்,   ஜனவரி 7 -  சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், ஆலயத்தின் பாரம்பரியம், சம்பிரதாயம், ஆகியவற்றை மீற யாரையும் அனுமதிக்க முடியாது எனறும் தேவசம்போர்டு தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

அன்று தொட்டு இன்று வரை சபரிமலையில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. சபரிமலை கோயில் தொடக்கக் காலம் முதல் இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  ஆனால், சபரிமலையில் பெண் நுழைய அனுமதிக்க வேண்டும் எனக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, நிலுவையில் உள்ளது. 

இந்நிலையில், சபரிமலை ஆலயத்திற்குள் 100 பெண்களுடன் நுழையப்போவதாக  "பூமாதா படை "என்ற  அமைப்பின் தலைவர் திருப்தி தேசாய் சமீபத்தில் அறிவித்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து, சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள். கோயிலின் சம்பிரதாயம், பாரம்பரியம் ஆகியவற்றை யாரும் மீறுவதற்கு அனுமதிக்க முடியாது என சபரிமலை தேவசம்போர்டு தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 

வாரணாசி, ஜனவரி 5 -  நம் வீட்டில் சிறு குழந்தைகள் கீழே விழுந்த பொருட்களை மீண்டும்  எடுத்து வாயில் வைத்தாலே,  "சீ சீ, அது மண்ணு, அழுக்கு, கீழே போடு "என முகம் சுளிப்பது வழக்கம். ஆனால், வாரணாசியில் குஸ்மாவதி என்ற 78 வயது பாட்டி, கடந்த 63 வருடங்களாக மணலை அள்ளி வாயில் போட்டு மென்றுத் தின்கிறார். 

தம்முடைய 15 வயதிலிருந்து மணல்  சாப்பிடத் தொடங்கியுள்ளார். ஆரம்பத்தில் வயிறு வலித்தாலும்,  அதன் பின்னர் பழகி விட்டதாகவும் கூறுகிறார் பண்ணைத் தொழிலாளியான குஸ்மாவதி.  

இப்பழக்கம் குறித்து யாராவது தம்மிடம் கேட்டால்,  "எனக்கு பிடிச்சிருக்கு, சாப்பிடுகிறேன் " என்கிறார் சகஜமாய். 

கடினமான கல்லை கடித்து சாப்பிட்டாலும், தமக்கு எதுவும் ஆவதில்லை. மேலும், தாம் ஆரோக்கியமாக இருப்பதற்கும் இந்த மணல் உண்ணும் பழக்கம் தான் காரணம் என்கிறார் இந்த பாட்டி. 

மொரே, 4 ஜனவரி- இந்தியா- மியன்மார் எல்லையில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உலுக்கியது.  இதன் எதிரொலியாக அருணாச்சல பிரதேசம் அதிர்ந்தது.  

நில அதிர்வுகளை உணர்ந்த மக்கள், பீதியில் சாலையை நோக்கி ஓடி வந்தனர். 

இதற்கு முன்னதாக, நேற்று  திரிபுராவிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது அஸ்ஸாம், மேகாலயா, உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களை உலுக்கியது. 

இந்நிலையில் இன்று அதிகாலை இந்தியா-மியன்மார் எல்லையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் கருவியில் 5.4-ஆகப் பதிவாகியது. 

பீஜி தீவுகளில் நிலநடுக்கம்

இதனிடையே, பசிபிக் பெருங்கடலில் உள்ள பிஜி தீவுகளிலும்  இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.  கடலுக்கடியில்  10 கிலோமீட்டர் ஆழத்தில், ரிக்டர் கருவியில் 7.2-ஆகப் பதிவாகிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,  சுனாமி எச்சரிக்கை  விடப்பட்டு, பின்னர் வாபஸ் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனையடுத்து, அங்குள்ள மக்கள் அனைவரும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். 

மேற்குவங்காளம்,  ஜனவரி 3-மேற்கு வங்காளத்தில் சிறுத்தை  ஒன்று சாலையில் வெறிகொண்டு அலைந்துக் கொண்டிருப்பதால், அங்குள்ள மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். ரைன்காஜ் என்பவர்  வீடமைப்புப் பகுதியில் அலைந்துக்கொண்டிருந்த அந்த சிறுத்தையைப் பிடித்து வலையில் கட்டி கிடத்தி வைத்துள்ளார். 

எனினும், வலையில் சுற்றப்பட்டிருந்த அந்த சிறுத்தை எப்படியோ வெளியாகி   மக்கள்  நடமாட்டம் மிகுந்த சாலையை நோக்கி ஓடியதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  இச்சம்பவம்  தொடர்பில் வெளியான காணொளி தற்போது  வைரலாகியுள்ளது. இதில், சிறுத்தை தாக்கியவரைத் தாக்கிய ஆடவரை இருவர் தூக்கிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.  

இதனிடையே இந்த சிறுத்தை, குழந்தை ஒன்றைத் தாக்கி காயம் ஏற்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. ஊருக்குள் உலாவிக் கொண்டிருக்கும் சிறுத்தை எந்த நேரத்திலும், யாரை வேண்டுமானாலும் தாக்கலாம் என்பதால், சிறுத்தையைக் கண்டுபிடிக்கும்  முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

 

புனே, டிசம்பர் 31- மராட்டிய மாநிலமான, புனே நகரின் கொண்ட்வா எனும், பகுதியில் பேக்ஸ் எண்ட் ஜேக்ஸ் எனும் பேக்கரில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு உறங்கிக் கொண்டிருந்த 6 பேர் தீயில் கருகியும், மூச்சுத் திணறியும் பலியாகியுள்ளனர்.

தீ ஏற்பட்ட போது, பேக்கரியின் கதவு வெளிப்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததால், அதில் இருந்த 6 பேரும் வெளியேற முடியாமல் உள்ளேயே, மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில், பேக்கரில் வேலை செய்தவர்கள் ஏன் உள்ளே வைத்துப் பூட்டப்பட்டார்கள் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

ராஞ்சி,  டிசம்பர்  30- ஜார்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்ததில்  அதில்  வேலை செய்துகொண்டிருந்த 40 தொழிலாளர்களின் நிலை  என்னவென்று  தெரியவில்லை. 

ஜார்க்கண்ட் மாநிலம் கோடா எனுமிடத்தில்  உள்ள பகரியா போடாய் எனுமிடத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய நிலக்கரி சுரங்கத்தில் நிலக்கரியை வெட்டி எடுக்கும் பணிகளை மகாலெட்சுமி எனும் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.  

சம்பவத்தின் போது,   அந்த நிலக்கரி சுரங்கத்தில்  சுமார் 40 பேர் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென நிலக்கரி சுரங்கம்  இடிந்து விழுந்தது.  இதில் சுரங்கத்திற்குள்   சிக்கிக் கொண்டனர். 

நேற்றிரவு நிகழ்ந்த இச்சம்பவத்தின் போது, கடும் பனிப்பொழிவும் இருளும் சூழ்ந்திருந்ததால்,  இன்று காலை முதல் மீட்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இடிபாடுகளுக்குள் சிக்கிய 40 தொழிலாளர்களையும் உயிருடன் மீட்கும்  முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும் இன்று மதியம் வரை யாரும் உயிருடன் மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஈப்போ,  டிசம்பர் 29-  தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள்  தங்கள் ஊழியர்களின் சம்பளத்தை வங்கிகள் மூலம் தருவதைக் கட்டாயமாக்கும் சட்ட மசோதாவிற்கு இந்திய அதிபர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். 

இந்தியாவின் புதிய சம்பள திருத்தச் சட்டம்  ரூ.18,000 வரையில் சம்பளம் பெறும் ஊழியர்களின் சம்பளத்தைக் காசோலை மூலம், வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்துவதன் மூலம் வழங்க வகை செய்கிறது.  இச்சட்டத்தின் படி,  ஊதியத்தை வங்கிகள் மூலம் வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஊழியர்களிடம் முன் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. 

இந்நிலையில், ஊழியர்களிடம் முன் அனுமதி பெற அவசியமில்லை எனும் இந்த புதிய சட்ட மசோதாவை மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கடந்த 15-ஆம் தேதி மக்களவையில் அறிமுகப்படுத்தினார். எனினும்,   அப்போது பணத்தட்டுப்பாடு காரணமாக, மசோதா நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில், இந்த மசோதாவுக்குக் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். எனினும், எதிர்வரும் 6 மாதத்திற்குள்  இந்த சட்டமசோதாவிற்கு அரசு ஒப்புதல் தர வேண்டும்.

ஶ்ரீ நகர், 29 டிசம்பர்-   ஜம்மு காஷ்மீரில், பண்டிபோரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படைகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கிடையே துப்பாக்கிச் சூடு நிகழ்ந்து வருகிறது.  

இதில் இரு பாதுகாப்புப் படையினர் காயமடைந்துள்ளனர். இதனிடையே, பதுங்கி மறைந்தோடிய தீவிரவாதிகளைப் பிடிக்கும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.  

பல இடங்களிலும் பாதுகாப்பு முடுக்கிவிடப்பட்டுள்ளதால்,  காஷ்மீரில் பதற்றம் நிலவி வருகிறது. 

புதுடெல்லி, டிச.28- உத்தரபிரதேசத்தில் கான்பூர் அருகே விரைவு ரயில் ஒன்று தடம் புரண்டது. அதில் பயணித்த இருவர் பலியான நிலையில் மேலும் 43 பேர் படுகாயம் அடைந்தனர். இது கடந்த வாரங்களில் நடந்த இரண்டாவது சம்பவமாகும்.

கான்பூரில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் அஜ்மீர் சால்டா விரைவு ரயில் ஒன்று சுரங்கம் அருகே தடம்புரண்டது. அதில் 14 ரயில் பெட்டிகளும் தடம் புரண்டன. இதில் இருவர் பலியாயினர். மேலும் 43 பேர் காயமடைந்தனர். 

காயமடைந்தவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்த அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். முன்னதாக கடந்த மாதம் 21ம் தேதி பாட்னா விரவு ரயில் ஒன்று தடம் புரண்டதில் 146 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

ரயில் சேவையில் உலகில் நான்காவது பெரிய நாடாக விளங்கும் இந்தியாவில் வருடந்தோறும் ஆயிரக்கணக்கானோர் ரயில் விபத்துகளில் பலியாகி வருகின்றனர். பெரும்பாலான இடங்களில் பிரிட்டிஷ் கால தண்டவாளங்களே பயன்படுத்தப்படுவது விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.

ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு பழைய தண்டவாளங்களை மாற்ற உறுதி அளித்துள்ள நிலையில் இதற்கான செலவு 20 திரிலியன் ரூபாய் (ஏறக்குறைய ரிம ஒன்றரை லட்ச கோடி) என கணக்கிடப்பட்டுள்ளது.

ஜெய்ப்பூர்,  டிசம்பர் 23-  லஞ்சம் தர மறுத்ததால் பச்சிளம் குழந்தையை ஹீட்டர் அருகே காட்டி முகத்தைப் பொசுக்கிய சம்பவம் ஜெய்ப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.  அங்கு  மாயா என்ற பெண் பிரசவத்திற்காக  அனுமதிக்கப்பட்டிருந்தார்.  அவருக்குக் கடந்த திங்கட்கிழமை பெண்குழந்தை ஒன்று பிறந்தது. அவரது பிரசவத்திற்கு உதவிய தாதி நீது குர்ஜார், லஞ்சம் கேட்டுள்ளார்.  ஆனால், தாதி கேட்ட 300 ரூபாய் லஞ்சத்தைக் குடும்பத்தினர் கொடுக்க முன்வரவில்லை.  

இதனால், அதிர்ச்சியடைந்த  தாதி நீது,  புதிதாய் பிறந்த பச்சிளம் குழந்தை எனும் பாராமல்,  குழந்தையை ஹீட்டர் அருகே  தூக்கிப் பிடித்ததால், குழந்தையின்  முகத்தில் காயங்கள் ஏற்பட்டன. இதனைத் தொடர்ந்து அந்த குழந்தை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. 

இச்சம்பவம் குறித்து குழந்தையின் தந்தை போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து,  போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

மும்பை,  டிசம்பர் 20-   மும்பையின் மத்தியப் பகுதியில் பைகுல்லா எனுமிடத்தில் விக்னகர்தா என்ற எனும் அடுக்குமாடி குடியிருப்பின் 15-வது மாடியில்  இரு பெண்களுக்கு இடையே வாய்த்தகராறு முற்றியது. 

இதனால் கோபமடைந்த இருவரில் ஒரு பெண்  பக்கத்து வீட்டுப் பெண்ணின் 15-வது மாடியிலிருந்து தூக்கி வீசினார். இதில் தலையிலும், உடம்பிலும் பலத்த காயத்திற்கு இலக்கான அந்த சிறுமி சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே பலியானாள். இச்சம்பவம் குறித்து போலீசார் அப்பெண்ணைக் கைது செய்ததோடு  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

More Articles ...