பூட்டிய காருக்குள் மாட்டிக்கொண்டு மூச்சுத் திணறி உயிர்விட்ட சிறுமிகள்!

India
Typography

 குர்கான், ஜூன்.15– ஹரியானாவிலுள்ள குர்கான் நகரில், கதவு திறந்து இருந்த காருக்குள் சென்ற இரண்டு சிறுமிகள் கார் கதவை முடியதால் திறக்க முடியாமல் மூச்சுத் திணறி இறந்தனர்.

இந்தியாவின் குர்கான் நகருக்கு அருகிலுள்ள ஜமல்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராணுவ வீரர் கோபிந்த்குமார், இவரின் வீட்டின் வெளியே  ஒரு கார், கதவில் பிரச்சினை என்பதால் பூட்டப்படாமல் நிறுத்தப்பட்டிருந்தது. ராணுவ வீரரின் மகள்களான 5 வயது ஹர்ஷிதா மற்றும் ஹர்ஷா என்ற இரட்டை குழந்தைகள் நாய்க்குட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். 

அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரின் கதவு திறந்திருப்பதை அந்தக் குழந்தைகள் கண்டனர். இதையடுத்து காருக்குள் அவர்கள் ஏறிக் கதவைப் பூட்டிக்கொண்டனர். மீண்டும் காரின் கதவைத் திறக்க முயன்ற போது, கதவு திறக்காததால் உள்ளேயே சிக்கிக் கொண்டனர். சிறிது நேரத்தில் மூச்சு திணறி காருக்குள்ளேயே மயங்கி விழுந்தனர்.

இந்தச் சம்பவம் மாலை 4.30 மணிக்கு நடந்தது. ஆனால், 7.30 மணிக்குத்தான் சிறுமிகளின் தந்தை, தனது குழந்தைகளைக் காணவில்லை என்று தேடியிருக்கிறார். மகள்கள் இருவரும் காருக்குள் மயங்கிய நிலையில், சரிந்து கிடப்பதை கண்டதும் அலறியடித்தபடி தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார். 

பரிசோதித்த டாக்டர்கள், இரட்டைக் குழந்தைகள் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காருக்குள் சிக்கி இரட்டைக் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS