மலேசியா

மாரான் புனித நடைப் பயணம்: பக்தர்கள் காராக்கை அடைந்தனர்!

கோலாலம்பூர், மார்ச் 27- பத்துமலை சுப்பிரமணியர் சன்னிதானத்தில் இருந்து இன்று அதிகாலை 3.30 மணியளவில் மாரான் மரத்தாண்டவர் ஆலயத்திற்கான புனித நடைப் பயணத்தை நான்கு குழுக்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் தொடங்கினர்.

பத்துமலை ஆலயத்தில் நடந்து சிறப்புப் பூஜைக்குப் பின்னர், இவர்கள் தங்களின் புனித நடையைத் தொடங்கினர்.  ஆண்டு தோறும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கோலாலம்பூரில் இருந்து பக்தர்கள் மாரான் மரத்தாண்டவர் ஆலயத்திற்குப் புனித நடை செல்வது  வழக்கமாகும்.

அந்த வகையில் இந்த ஆண்டும் பல்வேறு வேண்டுதல்களை மனதில் கொண்டு பக்தர்கள் தங்களின் நடைப் பயணத்தை ஆரம்பித்தனர்.  முதல் நாள் இரவன்றே பத்துமலையில் திரண்டு விட்ட பக்தர்கள், அதிகாலையில் இதமான மழைத்தூறல்களுக்கு இடையே புனித நடையைத் தொடங்கினர் என்று கிளப் கெபஜிக்கான் மரத்தோன் மரத்தாண்டவர் மலேசியா என்ற அமைப்பின் தலைவரான எஸ். மனோகரன் தெரிவித்தார்.

அதிகாலை தொடங்கி நண்பகல் 12 மணிக்கெல்லாம் பக்தர்கள் லிந்தாங் அருவிக் கரையை வந்தடைந்தனர். நண்பகல் உணவை முடித்துக் கொண்டு சற்று இளப்பாறிய பக்தர்கள் மீண்டும் பக்திப் பரவசத்துடன் பாடல்களை இசைத்தவாறு காராக்கை நோக்கி நடக்கத் தொடங்கினர்.  இரவு 8 மணியளவில் காரக்கை அடைந்த பக்தர்கள், இங்குள்ளல சீனப் பள்ளி மண்டபத்தில்  இரவு இடைத்தங்கலை   மேற்கொண்டனர்  என்று மனோகரன் சொன்னார்.

தங்களுடைய குழு சார்பில் 15 பக்தர்கள் புனிதப் பயணத்தில் பங்கேற்றுள்ளனர் என்றார். மேலும் இதர 3 பக்தர்கள் குழுக்களும் பயணத்தை தொடங்கியுள்ளனர். இந்தக் குழுக்களில் குறைந்த பட்சம் 250 முதல் 300 பக்தர்கள் வரை இடம் பெற்றுள்ளனர்.

பக்தர்கள் களைப்படையாமல் இருக்க, பக்திப்பாடல்கள் பெரிதும் உதவுகின்றன. வழிநெருகிலும் பக்தர்களுக்குத் தேவையான பானங்கள் மற்றும் பழங்கள் வழங்கப்படுகின்றன.

மேலும் முதலுதவிக்காக பக்தர்களை ஆம்புலன்ஸ் மற்றும் முதலுதவி சேவையாளர்களும் பின் தொடர்கின்றனர். மாரான் மரத்தாண்டவர் ஆலயத்திற்கான 204 கிலோமீட்டர் புனித நடைப்பயணம் பூர்த்தி அடைய நான்கு நாள்கள் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker