மலேசியா

கள்ள நோட்டை கட்டணமாகத் தந்த சஞ்சீவுக்கு 3 ஆண்டுச் சிறை!

செம்பாவாங், ஏப்ரல்.3- தாம் பயணித்த வாடகைக் காருக்கு கட்டணமாக கள்ள நோட்டை வழங்கிய சஞ்சீவ் ஜெயகுமார் என்ற சிங்கப்பூரியருக்கு 3 ஆண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

வாடகைக் கார் ஓட்டுநரிடம் கள்ள நோட்டான 50  சிங்கப்பூர் டாலரை வழங்கிய குற்றத்தை சஞ்சீவ் ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு  இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14-ஆம் தேதியன்று, மர்சிலிங் இரயில் நிலையத்திலிருந்து செம்பாவாங் செல்வதற்காக டான் சியாக் கிவாங் என்ற 71 வயது வாடகைக் கார் ஓட்டுநரின் காரில் சஞ்சீவ் ஏறினார்.

அந்தப் பயணத்திற்கான கட்டணம் 11.70  (சிங்கப்பூர் டாலர்) என்று டான் தெரிவித்த போது, சஞ்சீவ், அவரிடம் 50  சிங்கப்பூர் டாலரை கொடுத்தார். அந்தப் பணம் கள்ள நோட்டு என்று அறியாத அந்தக் கார் ஓட்டுனர், சஞ்சீவிடம்  மீதிப் பணத்தை வழங்கினார்.

ஒரு வாரம் கழித்து, யு.ஓ.பி வங்கியின் பணச் சேமிப்பு இயந்திரத்தில் அந்தப் பணத்தை உள்ளே போட்ட போது, அந்த இயந்திரம் அப்பணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அதன் பின்னரே, அது கள்ள நோட்டு என்று அந்த முதியவருக்கு தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து, அச்சம்பவம் குறித்து அந்தக் கார் ஓட்டுனரும், யு.ஓ.பி வங்கியும் போலீசில் புகார் செய்தனர். அதன் பின்னர், சஞ்சீவ் கைது செய்யப்பட்டார்.

சஞ்சீவிற்கு குறைந்தப்பட்சத்  தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும், அவருக்கு அந்தக் கள்ள நோட்டை வேறொரு ஆடவர் வழங்கினார் என்றும் அவரின் வழக்கறிஞர் ராஜன் சுப்ரமணியம் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker