மலேசியா

பிரிபூமி தற்காலிக ரத்து; சட்டத்திற்கு எதிரானது! -மகாதீர் குற்றச்சாட்டு

கோலாலம்பூர், ஏப்ரல்.6- மலேசிய பிரிபூமி கட்சியைத் தற்காலிகமாக ரத்து செய்யும் ஆர்.ஓ.எஸ்-சின் அறிக்கை சட்டத்திற்கு எதிரானது என்று அக்கட்சியின் தலைவர் துன் மகாதீர் முகமட் கூறினார்.

அந்தக் கட்சி தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது என்ற ஆர்.ஓ.எஸ்-சின் கடிதம், அக்கட்சியின் தலைமையகத்திற்கு அனுப்பப்படவில்லை என்றும், அந்தக் கடிதம் தவறான முகவரிக்கும், தவறான ஒருவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது என்றும் மகாதீர் தெரிவித்தார்.

”கட்சிக்கு எதிராக அனுப்பப்பட்டுள்ள அறிக்கை சட்டத்திற்கு எதிரானது என்ற அடிப்படையில், அந்த அறிக்கையை நாங்கள் ஏற்றுக் கொள்வதாக இல்லை” என்று அவர் சொன்னார்.

1966-ஆம் ஆண்டின் சங்கங்களின் சட்டத்தின் 62-ஆவது பிரிவின் படி, ஒரு கட்சியை ரத்து செய்யும் பொருட்டு, ஆர்.ஓ.எஸ், அக்கட்சியின் கீழ் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ள நான்கு அலுவலகங்களுக்கு அக்கட்சியின் ரத்து குறித்து அறிவிக்கும் அறிக்கையை அனுப்ப வேண்டும்.

தங்களின் கட்சியின் முகவரியாக டாமான்சாராவிலுள்ள முகவரி ஒன்றை ஆர்.ஓ.எஸ்-சிற்கு அக்கட்சி அனுப்பி வைத்துள்ள வேளையில், ஆர்.ஓ.எஸ் அக்கட்சி தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது என்று  அவர்களின் புதிய அலுவலக முகவரியான மெனாரா யாயாசான் சிலாங்கூர் என்ற முகவரிக்கு அந்த அறிக்கையை அனுப்பி வைத்துள்ளது என்று மகாதீர் தெரிவித்தார்.

பிரிபூமி கட்சி புதிதாக தொடங்கப்பட்ட கட்சி என்பதால், அக்கட்சி முறையான சந்திப்பு நிகழ்வுகளை ஏற்பாடு செய்யவில்லை என்று அக்கட்சியின் தலைமைத்துவம் பலமுறை ஆர்.ஓ.எஸ்-சிடம் எடுத்துரைத்த போதிலும், அக்கட்சியின் சந்திப்பு அல்லது கூட்டங்கள் குறித்து முறையான ஆவணங்களை அனுப்ப வேண்டும் என்று ஆர்.ஓ.எஸ் தொடர்ந்து கேட்பதாகவும் அவர் தெரிவித்தார்.

”நாங்கள் என்னென்ன ஆவணங்களை ஆர்.ஓ.எஸ்-சிடம் சமர்ப்பிக்கவில்லை என்று ஆர்.ஓ.எஸ் கூறுகிறதோ, அந்த ஆவணங்களை நாங்கள் சமர்ப்பித்து விட்டோம்” என்று அவர் சொன்னார்.

இதன் தொடர்பில் அக்கட்சி, உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடியின் மேல்முறையீடு செய்யவிருப்பதாகவும், அதை அவர் நிராகரித்தால், தாங்கள் நீதிமன்றத்திடம் முறையிடப் போவதாகவும்  மகாதீர் தெரிவித்தார்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker