மலேசியா
52 தொகுதிகளிலும் நாங்கள் போட்டி போடுவோம்! – மகாதீர்

கோலாலம்பூர், ஏப்ரல் 6 – பிரிபூமி பெர்சத்து கட்சியை தற்காலிகமாகக் கலைக்க வேண்டும் என்று சங்கங்கள் பதிவகம் (ஆர்.ஓ.எஸ்) உத்தராவிட்டுள்ள போதிலும் நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 52 தொகுதிகளில் வேட்பாளர்களை நாங்கள் நிறுத்துவோம் என்று துன் மகாதீர் அறிவித்துள்ளார்.
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி எங்கள் கட்சிக்கு 52 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. எங்கள் கட்சி இன்னும் 29 நாள்களுக்குத் தான் உயிர் வாழும் என்றாலும், பொதுச் சின்னத்தில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் கீழ் தங்களுடைய வேட்பாளர்கள் போட்டியிடக்கூடும் என்றார் அவர்.
எதிர்க்கட்சி கூட்டணியைச் சேர்ந்த அமானா நெகாரா, பிரிபூமி பெர்சத்து, ஐசெக மற்றும் பி.கே.ஆர் ஆகிய நான்கு கட்சிகளும் பொதுவான ஒரே சின்னதால் போட்டியிடவுள்ளன. அந்தப் பொதுச் சின்னம் எது என்பது நாளை இரவு வெளியிடப்படும் என்றார் அவர்.
எங்கள் கட்சி சட்ட விரோதமானது என்று ஆர்,ஓ.எஸ், கூறுமேயானால், பின்னர் நாங்கள் பிரிபூமி பெர்சத்து கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ள முடியாது. எனவே நாங்கள் அனைவரும் தனிப்பட்டவர்களாகத் தான் போட்டியிட நேரும். இருப்பினும், அது பொதுச் சின்னத்தின் கீழ் இருக்கலாம் என்று மகாதீர் சொன்னார்.