மலேசியா

மன்னிப்பு கேட்க வேண்டும் துன் மகாதீர்! – இந்து சங்கம் கோரிக்கை

கோலாலம்பூர், ஏப்ரல் 9- முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர், ‘கெலிங்’ மற்றும் ‘போடா’ என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியது மலேசிய இந்தியர்களை அவமதிக்கும் வகையில் உள்ளது என மலேசிய இந்து சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் டத்தோ மோகன்ஷாண் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

துன் மகாதீர் பயன்படுத்திய சம்பந்தப்பட்ட இரண்டு வார்த்தைகளும், இந்தியர்களைப் பொறுத்தவரை மரியாதையற்ற வார்த்தைகளாகும். தமிழில் எத்தனையோ நல்ல சொற்கள் இருக்கும்போது இந்த சொற்களைப் பயன்படுத்தியது  நாகரீகமான செயல் அல்ல.

சம்பந்தப்பட்ட வார்த்தை பயன்பாடு குறித்து துன் மகாதீர், தாம் சிறுவயது முதல் தன் நண்பர்களை அவ்வாறு தான் அழைத்ததாகவும் அவர்கள் மகாதீரைக் கண்டித்தது கிடையாது என்று விளக்கம் அளித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. இது இந்தியர்கள் மீது தரக்குறைவான எண்ணத்தை மகாதீர் கொண்டிருக்கிறார் என்று எண்ண வைக்கிறது.

இதற்கு முன்னர், இதே அவமரியாதைச் சொல்லை துன் மகாதீர் கூறியபோது மலேசிய முழுதும் கண்டனக் குரல்கள் எழுந்தன. ஆனாலும், துன் மகாதீர் அதே சொல்லை மீண்டும் பயன்படுத்தி வருவது ஏன்? என்று மலேசிய இந்து சங்கத்திற்கு புரியவில்லை.

இதுபோன்ற தலைவர் நாட்டை ஆளும் பொறுப்புக்கு வந்தால் இந்தியர்கள் மீண்டும் அடிமை நிலைக்கே சென்று விடுவார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இதற்கு முன்னர், ‘இண்டர்லோக்’ புத்தகத்தில் இதே போன்று இந்தியர்களை அவமதிக்கும் சொல் இடம்பெற்றிருந்த போது, சமுதாய தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்தியர்கள் மனம் நோகும்படி, அவமரியாதையான சொல்லைப் பயன்படுத்திய துன் மகாதீர் மலேசிய இந்தியர்களிடம் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு இந்து சங்கத்தலைவர் டத்தோ மோகன் ஷாண் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker