மலேசியா

டத்தோஶ்ரீ சுப்ராவை எதிர்த்து எட்மண்ட் ஷந்தாரா போட்டி!

கோலாலம்பூர், ஏப்ரல்.10- 14-ஆவது பொதுத் தேர்தலில் சிகாமாட் நாடாளுமன்ற தொகுதியில், மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியத்தை எதிர்த்து தொழிலதிபர் எட்மண்ட் ஷந்தாரா போட்டியிடக் கூடும் என்று ஜொகூர் மாநில பிகேஆர் தலைவர் ஹசான் கரீம் தெரிவித்துள்ளார்.

பிகேஆர் தலைவர்களும், எட்மண்ட் ஷந்தாரா அந்தத் தொகுதியில் போட்டியிடுவதை ஆதரிக்கின்றனர் என்று ஹசான் சொன்னார். “கடந்த மூன்று ஆண்டுகளாக அத்தொகுதி மக்களுக்கு எட்மண்ட் சேவையாற்றி வருகிறார். அதனால், அத்தொகுதியில் சுப்ராவை தோற்கடிக்கும் திறன் எட்மணுக்கு உண்டு” என்று ஹசான் கூறினார்.

கடந்த 13-ஆவது பொதுத் தேர்தலில், சிகாமாட் தொகுதியில் பிகேஆர் சார்பில் போட்டியிட்ட சுவா ஜுய் மெங்கை 1,217 வாக்கு வித்தியாசத்தில் டாக்டர் சுப்ரா தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்முறை, டாக்டர் சுப்ரா வேறு ஒரு தொகுதியில் போட்டியிடக் கூடும் என்று சில தரப்புகள் கூறிய வேளையில், கடந்த மாதம், தான் மீண்டும் சிகாமாட் நாடாளுமன்ற தொகுதியில் தான் போட்டியிடவிருப்பதாக சுப்ரா அறிவித்தார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக, அத்தொகுதி வாழ் மக்களுக்காக அரசாங்கம் பல்வேறு உதவிகளைச் செய்து வருவதாகவும், அத்தொகுதியில் தாம் வெற்றிப் பெறும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் பட்சத்தில், தாம் வேறு தொகுதியில் போட்டியிடுவதற்கான அவசியம் ஏதும் இல்லை என்று சுப்ரா சொன்னார்.

சிகாமாட் தொகுதியில் மொத்தம் 47,000 பேர் வாக்காளர்களாக பதிவு செய்துள்ளனர். அவர்களில் 46 விழுக்காட்டினர் சீனர்கள், 44 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள் மற்றும்  10 விழுக்காட்டினர் இந்தியர்கள் ஆவர்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker