மலேசியா

பினாங்கு வீடமைப்பு பகுதியில் தீ! எழுவர் அதிர்ஷ்டவசமான உயிர்தப்பினர்!

ஜோர்ஜ் டவுன், ஏப்ரல்.10- இங்கு மவுண்ட் எர்ஸ்கீன், பெர்சியாரான் ஹலியா-3,  என்ற இடத்திலுள்ள குறைந்த விலை வீடுகள் அமைக்கும் பகுதியில் ஏற்பட்ட தீயில் சிக்கிக் கொண்ட ஏழு தொழிலாளர்கள் தீயணைப்பு வீரர்களால் காப்பாற்றப்பட்டனர்.

கட்டப்பட்டு வரும் அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் ஆறாவது மாடியில் நேற்று மாலை 5.30 மணிக்கு திடீரென்று தீப்பற்றியது. அந்தக் கட்டிடத்தின் 46-ஆவது மாடியில் இருவர் மாட்டிக் கொண்டனர். மேலும் ஐவர், ஆறாவது மாடியில் சிக்கிக் கொண்டனர் என்று தீயணைப்பு மற்றும் மீட்புப் படை பேச்சாளர் கூறினார்.

”மூச்சு விட இயலாமல் சிரமப்பட்ட ஒரு தொழிலாளர் மட்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மற்ற அறுவருக்கும் எவ்வித பாதிப்பும் நேரவில்லை. அக்கட்டிடம் கட்டப்பட்டு வருவதால், 46-ஆவது மாடியில் மாட்டிக் கொண்ட இருவரை மாடிப் படிகளில் ஏறிச் சென்று தீயணைப்பு வீரர்கள் மீட்டு வந்தனர்” என்றார் அவர்.

ஆறாவது மாடியில் பற்றிய தீ, குப்பைகள் வாயிலாக அக்கட்டிடத்தின் இதர பகுதிகளுக்கு பரவியதாக அந்தப் பேச்சாளர் கூறினார். சுமார் மாலை 7.15 மணிக்கு அத்தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், அதன் பின்னர்  தீ முற்றாக அணைக்கப்பட்டது.

இந்தத்  தீ விபத்துச் சம்பவம் எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பிலான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.  இதனிடையே, கார் நிறுத்தும் பகுதியில் அந்தத் தீ ஏற்பட்டதாக  அக்கட்டிட மேம்பாட்டாளர் சமூக வலைத்தளத்தில் அறிக்கை ஒன்றில் வாயிலாக தகவல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker