மலேசியா

‘மகாதீரை குறைக் கூறாதீர்; நிதியை தவறாக பயன்படுத்தியது மஇகாவே..!!’ – இராமசாமி

கோலாலம்பூர், ஏப்ரல்.11- இந்தியச் சமுதாய மேம்பாட்டிற்காக பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்  ஒதுக்கிய நிதிகள் இந்திய மக்களுக்கு நன்மையளித்ததா? என்று ஜ.செ.க. தலைவர்களில் ஒருவரான பினாங்கு மாநில இரண்டாவது துணை முதல்வர் டாக்டர் பி.இராமசாமி கேள்வி எழுப்பினார்.

“மகாதீரைக் காட்டிலும், நஜிப் இந்தியர்களுக்கு கூடுதல் நிதியை ஒதுக்கியுள்ளார் என்ற போதிலும், அந்த நிதி இந்திய மக்களைச் சென்றடைந்து, அவர்களின் வாழ்க்கை மேம்பட வழிவகுத்ததா? என்பது கேள்விக் குறியே!” என்று அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.

அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட அந்த நிதிகள், சில இந்திய அமைப்புகளின் வாயிலாக அவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்று கூறப்பட்டது. அந்த நிதிகள் முறையாக பகிர்ந்தளிக்கப் படவில்லை என்று டாக்டர்  இராமசாமி சொன்னார்.

மகாதீர் இந்திய மக்களுக்கு ஒதுக்கீடு வழங்கவில்லை என்று சில தரப்பினர் கூறுகின்றனர். அவரால் வழங்கப்பட்ட ஒதுக்கீடுகள் மக்களிடத்தில் சேர்க்கப்படவில்லை. மஇகாவைச் சேர்ந்த சில தரப்பினர் அந்த ஒதுக்கீடுகளை தங்களின் விருப்பத்திற்கு பயன்படுத்திக் கொண்டதாக இராமசாமி கருத்து தெரிவித்தார்.

மகாதீரால் வழங்கப்பட்ட அந்த ஒதுக்கீடுகள் முறையாக இந்திய மக்களைச் சென்றடைந்திருந்தால், இன்று இந்திய சமுதாயம் பல மேம்பாடு களை கண்டிருக்கும் என்று அவர் சொன்னார்.

முன்னாள் பிரதமரான துன் மகாதீர், தனது ஆட்சிக் காலத்தின் போது இந்திய மக்களின் நலனில் அக்கறை கொள்ளவில்லை என்றும், அவர்களின் வளர்ச்சிக்கு அவர் ஏதும் செய்யவில்லை என்றும் கூட்டரசு பிரதேச மஇகா தலைவர் டத்தோ எம்.சரவணன் பேசியதற்கு பதிலளிக்கும் வகையில், இராமசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker