Latestமலேசியா

இரண்டரைக் கால் தான் உண்டு, ஆனாலும், போராட்டத்தில் வெற்றிகண்ட செல்லக் குட்டி!

கிள்ளான், ஏப்ரல்.18- ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, கடுமையான காயங்களுடன் ஒரு நாய்க்குட்டி கைவிடப்பட்டு கிடப்பதாக எம்.டி.டி.பி எனப்படும் ‘Malaysian Dogs Deserve Better’ என்ற நாய்கள் காப்பகத்திற்கு தொலைபேசி அழைப்பு வந்தது.

ஒரு மாதம் நிரம்பிய அந்த நாய்க்குட்டியின் முன்புற கால்கள் இரண்டும் சிதைந்து நிலையில், அவை மோசமாக பாதிக்கப்பட்டிருந்தன.

அந்த நாய்க்குட்டி ஒரு மாதக் குட்டியாக இருந்ததால், விலங்குகள் மருத்துவமனையில் அதனை அனுமதித்து, அதற்கான சிகிச்சையை பெறுவதிலும் எம்.டி.டி.பி காப்பகத்தினர் சிரமத்தை எதிர்நோக்கினர்.

“நல்ல வேளை, ஜாலான் காஸிங்கில் உள்ள விலங்குகள் மருத்துவமனையில் பாட்ச் என்ற பெயரைக் கொண்ட பிறந்து ஒரு மாதமே ஆன நாய்க் குட்டியைச் சிகிச்சைக்காக அனுமதித்தனர்” என்று எம்.டி.டி.பி தொண்டூழியர் டிரீன் லீ கூறினார்.

பல நாட்களுக்கு பாட்ச்சிற்கு சிகிச்சை வழங்கப்பட்டது. மோசமாக பாதிக்கப்பட்ட பாட்ச்சின் முன்புற கால்கள் வெட்டி எடுக்கப்பட்டன. ஆபத்தான சூழ்நிலையில் இருந்த போதிலும், பாட்ச் உயிர் வாழ வேண்டும் என்ற தனது எண்ணத்தை கைவிடவில்லை. அதற்காக தொடர்ந்து போராடியது அந்த செல்ல நாய்க்குட்டி.

“வெட்டப்பட்ட கால்களுக்கு மருந்து போடும் போதும், அந்தக் கால்களில் சுற்றப்பட்டுள்ள துணியை மாற்றிய போதும், பாட்ச் தனது வலியை எங்களிடம் காட்டிக் கொள்ளவில்லை” என்று பாட்ச்சை இரண்டு ஆண்டுகளாக தனது பாதுகாப்பில் வைத்து பராமரித்துக் கொண்ட டிரீன் லீ கூறினார்.

இன்று எம்.டி.டி.பி காப்பகத்தின் மிகவும் பிரபலமான வலம் வந்துக் கொண்டிருக்கிறது பாட்ச். கவிதா கணேசன் என்ற தொண்டூழியரால் பராமரிக்கப்பட்டு வரும் பாட்ச், மற்ற நாய்க்குட்டிகளையும் பராமரித்து வருகிறது.

“பாட்ச் அனைவரிடமும் மிகவும் செல்லமாக நடந்துக் கொள்ளும். அதன் ‘வாலு’த்தனத்தை பார்த்து நாங்கள் அன்றாடம் சிரிப்போம்” என்று கவிதா சொன்னார்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட நாய்களை ஊசி போட்டு கொன்று விட வேண்டும் என்று சிலர் கருதுவதைச் சுட்டிக்காட்டி, “நம்மால் காப்பாற்ற முடிந்த நாய்க் குட்டிகளையும், நாய்களையும் நாம் காப்பாற்றி, அவையும் வாழ்வதற்கு நாம் வாய்ப்பளிக்க வேண்டும்” என்று கவிதா சொன்னார்.

எம்.டி.டி.பி நாய்கள் காப்பகத்தில் இவ்வாறு கால்கள் இழந்து, மற்றும் உடலில் இதர பிரச்சனைகளை கொண்ட நாய்கள் பராமரிக்கப்பட்டு வருவதாக கவிதா தெரிவித்தார்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker