Latestமலேசியா

சிகாமாட்டில் சுப்ராவை வெல்ல முடியும்! -எட்மண்ட் ஷந்தாரா நம்பிக்கை!

ஜொகூர் பாரு, ஏப்ரல்.18- கடந்த பொதுத் தேர்தலில் அறிமுகமே இல்லாத நிலையில், வெறும் 999 வாக்குகளை மட்டுமே பெற்ற டத்தோஶ்ரீ எட்மண்ட் ஷந்தாரா, இம்முறை சிகாமாட் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டால், தம்மால் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ். சுப்ரமணியத்திற்கு கடுமையான போட்டியைக் கொடுத்து அவரை வெல்ல முடியும் என்று நம்பிக்கை கொண்டுள்ளார்.

நான்காவது முறையாக சிகாமாட் தொகுதியில் போட்டியிடவிருக்கும் மஇகா தேசியத் தலைவரான டாக்டர் சுப்ரமணியத்தை, தோற்கடிப்பதே தனது லட்சியம் என்று பிகேஆர் கட்சியைச் சேர்ந்த தொழிலதிபர் எட்மண்ட் ஷந்தாரா தெரிவித்துள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளாராக உலு சிலாங்கூர் தொகுதியில் போட்டியிட்டு 999 வாக்குகள் மட்டுமே பெற்ற எட்மண்ட், இம்முறை சிகாமாட் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு தனக்கு வழங்கப்பட்டால், அந்தத் தொகுதியை கைப்பற்ற தாம் போராடவிருப்பதாக சொன்னார்.

“பிகேஆர் கட்சி என் மீது நம்பிக்கை வைத்துள்ளது” என்று அவர் கூறினார். வர்த்தக நிர்வாகத் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ள 47 வயதான எட்மண்ட் ஷந்தாரா, பிகேஆர் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமாவார்.

பக்காத்தான் கூட்டணியின் தலைவரான துன் மகாதீர் முகமட் மற்றும் முன்னாள் பக்காத்தான் ராக்யாட் தலைவருமான டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இருவருக்கும் இடையிலாக பிரச்சனைகள் சுமூகமான தீர்வு கண்டிருப்பதால், கடந்த பொதுத் தேர்தலைக் காட்டிலும், 14-ஆவது பொதுத் தேர்தலில் பக்காத்தான் கூட்டணிக்கு மக்களின் ஆதரவு கூடியுள்ளதாக எட்மண்ட் கருதுகிறார்.

சிகாமாட் தொகுதி மக்களுக்குத் தேவையான வீட்டு வசதி மற்றும் இந்திய சமூதாய மேம்பாட்டிற்கு உதவும் வகையில் 25 முக்கியக் குறிக்கோள்களை எட்மண்ட் அடையாளம் கண்டுள்ளார்.

“இத்தொகுதியில் 2,800 இந்தியர்கள் உள்ளனர். அவர்களில் பலர் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளனர். வீட்டு வாடகையைச் செலுத்துவதில், நல்ல உணவை உண்பதிலும் அவர்கள் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்” என்று அவர் சொன்னார்.

எட்மண்ட் ஜொகூரைச் சேர்ந்தவர் அல்ல என்று தேசிய முன்னணி கூறுவதை மறுத்த எட்மண்ட், தனது பெற்றோர் குளுவாங்கில் ரப்பர் மரம் வெட்டும் தொழில் புரிந்தார்கள் என்று அவர் தெரிவித்தார்.

“நான் குளுவாங்கில் தான் பிறந்தேன். அங்குதான் வளர்ந்தேன். ஜொகூர் மாநிலத்தின் சார்பில் சதுரங்கப் போட்டியில் மாநில ரீதியில் கலந்து கொண்டு, நான் வெற்றியும் பெற்றுள்ளேன்” என்றார் அவர்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker