Latestமலேசியா

சொத்துக்களை அறிவித்தனர் பி.எஸ்.எம். வேட்பாளர்கள்!

கோலாலம்பூர், ஏப்ரல்.19- 14-ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் பி.எஸ்.எம் எனப்படும் மலேசிய சோசலிஸக் கட்சி வேட்பாளர்கள் இன்று கோலாலம்பூர் சிலாங்கூர் சீன மாநாட்டு மண்டபத்தில் தங்களின் சொத்துகளை அறிவித்ததோடு, இன வாதத்திற்கு எதிராக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

அக்கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 16 வேட்பாளர்களின் சொத்துக்கள் ரிம.3,000-இல் தொடங்கி ரிம.3 மில்லியன் வரை என்று அறிவிக்கப்பட்டது.

பொதுத் தேர்தலில் மக்களின் ஆதரவை தங்கள் பக்கம் திருப்பும் பொருட்டு, இனவாத அரசியலை தாங்கள் நடத்தப் போவதில்லை என்றும் அந்த 16 வேட்பாளர்களும் இன்று நடந்த கூட்டத்தில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

கடந்த 2008-ஆம் ஆண்டு தொடங்கி, பி.எஸ்.எம் கட்சி வேட்பாளர்கள் தங்களின் சொத்துகள் குறித்து வெளிப்படையாக அறிவித்து வருகின்றனர் என்றும், அவ்வாறு செய்யும் முதல் அரசியல் கட்சி பி.எஸ்.எம். கட்சிதான் என்றும் அதன் பொதுச் செயலாளர் ஏ.சிவராஜன் கூறினார்.

அக்கட்சியால் தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர்கள், கவுன்சிலர்கள் உட்பட, தங்களின் சொத்துகள் குறித்து ஒவ்வொரு ஆண்டும் அறிவித்து வருகின்றனர் என்று அவர் சொன்னார்.

“பொது அலுவலகங்களில் மக்களுக்காக சேவை செய்துக் கொண்டிருக்கும் வேளையில், அரசியல்வாதிகள், அதன் வாயிலாக சொத்துகளை சேர்த்துக் கொள்கின்றனரா? என்பதை மக்கள் அறிந்துக் கொள்ள விரும்புகிறார்கள்” என்று சிவராஜன் கூறினார்.

பணம் சம்பாதிக்கும் எண்ணத்தில் யாரும் அரசியலில் நுழையக் கூடாது என்று அவர் அறிவுறுத்தினார். அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி வேட்பாளர்களும் தங்களைப் போன்றே சொத்து விபரங்களை அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இம்முறை நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலில், 4 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 12 சட்ட மன்ற தொகுதிகளில், பி.எஸ்.எம் கட்சி போட்டியிடவிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker