Latestமலேசியா

டாக்டர் ஶ்ரீராம் விவகாரம்: வாக்குகளுக்காக எதிர்க்கட்சி நாடகம்! – ஹசான் சாடல்

கோலாலம்பூர், மே.1- 14-ஆவது பொதுத் தேர்தலில் இந்தியர்கள் தங்களுக்கு வாக்களிக்கும் பொருட்டு, எதிர்க்கட்சி கூட்டணியான பக்காத்தான் ஹராப்பான் நாடகம் நடத்துகிறது என்று நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ முகமட் ஹசான் சாடியுள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் வேட்பாளர் அட்டையை அணிந்திராத காரணத்திற்காக ரந்தாவ் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை டாக்டர் எஸ். ஶ்ரீராம் இழந்தார். அதனைத் தொடர்ந்து, அந்தத் தொகுதியில் போட்டியின்றி முகமட் ஹசான் வெற்றி பெற்றார்.

அந்த நிகழ்வை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, ரந்தாவ் தொகுதியிலுள்ள இந்தியர்களின் வாக்குகளை பெற்று விட பக்காத்தான் கூட்டணி நாடகம் நடத்துவதாக முகமட் ஹசான் சொன்னார். ரந்தாவ் தொகுதியில் கிட்டத்தட்ட 27 விழுக்காட்டினர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

“தேசிய முன்னணி மற்றும் அம்னோ உறுப்பினர்கள்பந்த வேட்பாளர் வேட்பு மனுவை சமர்ப்பிக்க அனுமதிக்கவில்லை என்று பக்காத்தான் கூட்டணி பொய்யுரைத்து வருகிறது. ஆனால், உண்மை அதுவல்ல. அவர்களின் வேட்பாளர் தேர்தல் ஆணையத்தின் அட்டையை அணிந்து வரவில்லை” என்று அவர் தெரிவித்தார்.

“துன் மகாதீர் அந்த அட்டையை அணிந்து வந்தார். நஜிப் அணிந்து வந்தார். டாக்டர் ஶ்ரீராம் அந்த அட்டையை அணிந்து வரவில்லை. அது தவறாகும். அந்த அடிப்படையில் தான் அவர் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை” என்றார் அவர்.

தேர்தல் ஆணையத்தைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டு, தனக்கு எதிராக யாரும் போட்டியிடக் கூடாது என்று தாம் செயல்பட்டதாக பக்காத்தான் பொய்யுரைத்து வருவது நாடகத்தன்மையாக இருப்பதாக ஹசான் சொன்னார்.

“எனது கம்பத்தில் ஶ்ரீராம் நுழைந்த போது, அவரை கம்பத்து மக்கள் விரட்டி விட்டனர். அவரை என் மக்கள் புறக்கணித்து விட்டனர். அவர் செல்லத்தகாதவர். அதனை மக்கள் புரிந்துக் கொண்டனர்” என்று அவர் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker