Latestமலேசியா

எனது முடிவுகளிலேயே ஜிஎஸ்டி தான் கடுமையான முடிவு! -நஜிப்

கோலாலம்பூர், மே.8- பிரதமராக தாம் பொறுப்பேற்ற நாளிலிருந்து இதுவரை தாம் பல முடிவுகளை எடுத்துள்ள போதிலும், ஜி.எஸ்.டியை அமல்படுத்தியது தான் தாம் எடுத்த முடிவுகளில் மிகவும் கடினமான முடிவு என்று பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக் கூறினார்.

“பொருள் சேவை வரியை அமல்படுத்தியதே நான் எடுத்த முடிவுகளில் கடினமான ஒன்று. இந்த வரியை அமல்படுத்துவதன் வாயிலாக, சில பொருட்களின் விலை உயரும் என்பதை நான் அறிந்திருந்தேன். அதனால் மலேசியர்கள் சிரமப்படுவார்கள் என்பதையும் நான் உணர்ந்தேன்”என்று நஜிப் கூறினார்.

இருந்த போதிலும், ஜி.எஸ்.டியை அமல்படுத்தியதன் வாயிலாக, சுயேட்சையான மற்றும் நிலையான நாடாக மலேசியா செயல்பட்டு வருவதாகவும், எண்ணெய் விலையை மட்டுமே சார்ந்திருக்கவில்லை என்றும் அவர் தெளிவுப் படுத்தினார்.
“எண்ணெய் விலையை மட்டும் சார்ந்திருந்ததால், நாம் பல விளைவுகளை பல ஆண்டுகளாக எதிர்கொண்டு வந்தோம். ஜிஎஸ்டி அமலுக்கு பின்னர், நாம் அந்த விளைவுகளை சந்திக்கவில்லை” என்றார் அவர்.

ஜி.எஸ்.டியை அமல்படுத்தியதால், குறுகிய கால சிரமத்தை மக்கள் எதிர்கொண்ட போதிலும், அதனால் கிடைக்கப் பெறும் வெகுமதி நீண்ட கால அடிப்படையில், மக்களால் உணரப் படும் என்று அவர் சொன்னார்.

பொருள் சேவை வரியின் வாயிலாக கிடைக்கப்பெறும் லாபத்தை, மக்களுக்கு சில அத்தியாவசிய திட்டங்களுக்கு அரசாங்கம் பயன்படுத்தியதாக நஜிப் சொன்னார். அதுமட்டுமல்லாது, கிடைக்கப் பெற்ற லாபத்தின் 50 விழுக்காடு பணத்தைக் கொண்டு, 2.7 மில்லியன் வேலை வாய்ப்பை மக்களுக்கு தாம் ஏற்படுத்தி தந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker