Latestமலேசியா

1எம்டிபி; நஜிப் தொடர்பான ஆதாரங்கள் புறக்கணிப்பா? புதிய திருப்பம்!

கோலாலம்பூர், மே.15- 1எம்டிபி விவகாரத்தில் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்புக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆதாரங்களைக் கொண்டு அவரை விசாரணைக்கு உட்படுத்தலாம் என்ற எம்ஏசிசியின் ஆலோசனையை சட்டத்துறை தலைவர் (அட்டர்னி ஜெனரல் டான்ஶ்ரீ அபாண்டி) புறக்கணித்ததாக விசாரணை குழுவினர் தெரிவித்துள்ளனர்.

1எம்டிபி நிறுவனத்திலிருந்து கடந்த 2015-ஆம் ஆண்டு ரிம.42 மில்லியன் ‘களவு’ போனது. அந்தப் பணம், அப்போதைய பிரதமரான நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கண்டறிந்தது.

ஆனால், தாம் அந்தப் பணத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை என்றும், தனது வங்கியில் உள்ள ரிம.681 மில்லியன் தொகை, சவூதியின் அரசக் குடும்பத்தால் வழங்கப்பட்டது என்று நஜிப் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையில், 1எம்டிபி நிறுவனத்தின் எஸ்.ஆர்.சி இண்டெர்நேஷனல் பிரிவிலிருந்து, நஜிப்பிற்கு ரிம. 42 மில்லியன் தொகை பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கண்டறிந்தது.

அதன் ஆதாரத்தை அந்த ஆணையம், சட்டத்துறை தலைவர் டான்ஶ்ரீ முகமட் அபாண்டி அலியிடம் சமர்ப்பித்ததாக விசாரணை குழுவில் இடம் பெற்ற லிம் சீ வீ தகவல் தெரிவித்தார். ஆனால், அந்த ஆதாரத்தை அபாண்டி புறக்கணித்தார் என்றும் அவர் சொன்னார்.

“அது குறித்து மேல் விசாரணை செய்யலாம் என்ற ஆலோசனையை அபாண்டி புறக்கணித்து விட்டார்” என்று லிம் கூறினார். லிம்மின் இப்போது தெரிவித்திருக்கும் தகவலின் நம்பகத்தன்மை குறித்து அபாண்டி கருத்துரைக்க மறுத்து விட்டார். மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமும் அவ்விவகாரம் குறித்த எவ்வித தகவலும் வெளியிடவில்லை.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker