Latestமலேசியா

மலையேறும் போது உயிரிழந்தார் எவரெஸ்ட் வீரர் இராமன்! -(VIDEO)

கோலாலம்பூர், மே 21 – கடந்த ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய மற்றொரு மலேசிய மலையேறும் வீரரான இராமன் நாயர் அச்சுதன் (வயது 42) நேப்பாளத்தில் காலமானார். இம்முறை மற்றொரு சிகரத்தில் ஏறும் முயற்சியின் போது அவர் உயிரிழந்தார்.

கிழக்கு நேப்பாள பகுதியிலுள்ள இமாலயத்தின் அமா டாப்லாம் மலைச் சிகரத்தில் ஏறும் முயற்சியில் ஈடுபட்டிருந்த இராமன் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.

(கடந்த ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய பின்னர் ‘வணக்கம் மலேசியா’வுக்கு இராமன் அளித்த சிறப்பு நேர்காணல் அவரது நினைவாக இங்கே மீண்டும் இடம்பெறுகிறது.)

இந்த மலையேறும் முயற்சியின் போது கடந்த மே மாதம் 15 ஆம் தேதி இராமன் காணாமல் போய் விட்டார்.

ஐந்து நாள்களுக்கு பின்னர் மே 20 ஆம் தேதியன்று கடல் மட்டத்தில் இருந்து 5,300 மீட்டர் உயரத்தில் இருந்து மலை இடுக்குகளிடையே பள்ளத்தாக்கில் அவரது உடல் கிடந்ததாக இமாலயன் டைம்ஸ் நாளிதழின் செய்தி ஒன்று கூறுகிறது.

தற்போது இராமனின் தகப்பனார் நேப்பாளத்திற்கு சென்றுள்ளார். மகனின் உடலை மலேசியாவுக்குக் கொண்டு வரும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார் என்று இராமனின் நெருங்கிய நண்பர் கே. நாகராஜு தெரிவித்தார்.

இவரது நல்லடக்கச் சடங்கினை 23 ஆம் தேதி புதன்கிழமை மேற்கொள்ள தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும், பிரேதப் பரிசோதனை மற்றும் இதர ஆவணங்கள் தொடர்பான சிக்கல்கள் தீர்க்கப்பட்டால் மட்டுமே புதன்கிழமை இறுதிச் சடங்கு நடத்தப்படும் சாத்தியம் இருப்பதாக அவர் சொன்னார்.

ஷா ஆலாமைச் சேர்ந்த இராமன் கடந்த மே மாதம் 20 ஆம் தேதி மிகக் கடுமையான போராட்டத்திற்குப் பின்னர் எவரெஸ்ட் சிகரத்தை எட்டினார்.
ஆனால், சரியாக ஓராண்டு காலம் கழித்து இந்த மே 20 ஆம் தேதி, அவரது உடல், பள்ளத்தாக்கில் இருந்து மீட்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிட்டது.

”உலகின் கூரை என்று வர்ணிக்கப்படும் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சத்தை தொட்டதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னுடைய கடின உழைப்புதான் இந்த வெற்றிக்குக் காரணம் ”என்று எவரெஸ்டை எட்டிய பின்னர் ‘வணக்கம் மலேசியா’வுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் இராமன் பெருமிதத்துடன் கூறியிருந்தார்.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker